இந்தியக் கல்வி அமைப்பின் உள்ளடக்கம் பாகுபாடு என்பதாக இருக்க, இக்கல்வி முறையின் தேர்வு முறையும் பாகுபாட்டைத்தானே உயிர்ப்பிக்கும்!
வன்முறை
வன்முறையை உற்பவிக்கும் என்பது உலகோர் உணர்ந்த உண்மையாயினும், வன்முறையைப் பேராயுதமாகக் கொண்டு திட்டமிட்டு உருவாக்கிய எதிரிகள், வன்முறையைக் கையிலெடுக்கின்றபோது ‘அய்யகோ! வன்முறை! வன்முறை!’ என்று கூச்சலிடுவோரைச் சமூகத்தின் பல பகுதிகளிலும் நாம்
சந்திக்கின்றோம்.
தம்
இளமையைத் தொலைத்துவிட்டு, ஆயுதமேந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்காய்ப் போராடி வரும் நக்சல்பாரித் தோழர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று
அழைக்கின்றோம். ஆயுதம் தாங்கிப் போராடும் இவ்விளைஞர் படை அழிக்கப்பட்டுவிட்டதாகச் சுதந்திர தினப் பேருரையில் பிரதமர் முழங்குகிறார். இவ்விளைஞர் கூட்டம் ஏந்தி நிற்கும் ஆயுதங்கள் இவர்களின் பிறப்பிலேயே உருவானவையா? அல்லது இக்கொடிய ஆயுதங்களை ஏந்துமளவிற்கு அவர்கள் தள்ளப்பட்டார்களா?
இளமையின்
சுகம் அத்தனையும் உதறிவிட்டு, வாழும் நாள்களின் ஒவ்வொரு நொடியும் நிச்சயம் இல்லாத நிலையில், காடுகளைத் தஞ்சமடைந்து வாழும் இவர்களின் ஆயுதம் தாங்கிய வன்முறை வாழ்விற்குப் பதில் கூறவேண்டியவர்கள் தம்மை ‘அகிம்சாமூர்த்திகள்’ என்று
காட்டிக்கொள்கிற அவலத்தை நாம் நாளும் சந்தித்து வருகிறோம். வன்முறையை அமைப்பு ரீதியாகக் (Systematic) கட்டமைத்துக்
கொண்ட ஓர் அமைப்பு, அதன் பிரிவு நாட்டை ஆளும் அரசு என்ற பெயரில் நம்மைப் பொய்யாக நம்பவைத்து, ஏமாற்றுவது நாம் காணும் அவலம். இப்பொய்மையை உடைத்தெறிவது எப்போது? எப்படி? ஆயுதம் ஏந்தி, விடுதலை நோக்கில் போராடும் முறைக்கு ‘வக்காலத்து’ வாங்கும்
நோக்கில் இக்கட்டுரை எழுதப்பெறவில்லை. நோக்கம் வேறு!
இன்று நடப்பது
என்ன?
‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நடைபெற்ற இளைஞர்தம் எழுச்சிமிகு போராட்டம் தீர்வு நோக்கி நடத்தப்பட்ட ஓர் அரிய போராட்டம். இளைஞர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சிப் போராட்டம். இலட்சக்கணக்கான இளம் மாணாக்கர்களின் இலட்சியக் கனவு. ஒன்றிய அரசின் இயலாத தன்மையால் போராட்டம் குலைக்கப்பட்டபோது, இளைஞர் பலர் கத்தியின்றி இரத்தமின்றி முன்னெடுத்த அகிம்சாவழிப் போராட்டம். சனநாயக அரசு ஒன்றின் பதில் கூறும் கடமையை (Accountability) உறுதிசெய்ய
நடத்தப்பட்ட போராட்டம். ‘நீட்’ என்றழைக்கப்பட்ட ஒரு தேர்வுமுறை மாணாக்கர்களின் வாழ்க்கை கனவுகளைச் சிதைக்கும் கருவியானால், ‘நீட்’ எனும் தேர்வுமுறையும் வன்முறையை (Violence) உள்ளடக்கமாகக்
கொண்ட ஒரு பயங்கரவாதம்தானே!
கல்வி
அமைப்பின் ஒரு பகுதியாம் தேர்வு முறை (Exam) ஒரு
பயங்கரத்தைக் கட்டமைக்கலாம் என்று கருதினால், அதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வர்? இந்தியக் கல்வி அமைப்பின் உள்ளடக்கம் என்பது ‘பாகுபாடு’
என்பதைப் புரிந்துகொண்டுள்ள திராணியற்றக் கல்வியாளர்கள், ‘நீட்’ எனும் தேர்வுமுறை பற்றி மட்டும் கேள்வி எழுப்புவது வேடிக்கையல்லவா!
நம்
சமூகம் விரும்பியோ, விரும்பாமலோ ‘நீட்’ எனும் தேர்வு முறையில் நடந்த குழறுபடிகள் பற்றி விவாதிக்க நேர்ந்த சூழலில், இந்தியக் கல்வி அமைப்பின் சீர்கேடுகள் பற்றியும், அதன் பாகுபாட்டுப் பண்பு பற்றியும் விவாதிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது என்பதும் வரவேற்கத்தக்கது.
‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளை முன்வைத்து நடத்தப்பெற்ற போராட்ட வடிவங்களை நாம் பாராட்டுகிறோம்; இம்முறைகேடுகள் இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்தது என்பதையும் ஏற்றுக்கொள்வோம். ‘நீட்’ எனும் பயங்கர வடிவிலான தேர்வுமுறை அராஜகமானது என்பதையும் ஏற்றுக்கொள்வோம். ‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய இளைஞர் போராட்டம், ‘நீட்’ தேர்வின் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வற்புறுத்திய இளைஞர் போராட்டம், ‘நீட் தேர்வு வேண்டாம்’
என்ற முழக்கத்தை ஏன் முன்வைக்கவில்லை?
இளைஞர்களின்
இப்போராட்டத்தை நாம் மதித்தோமெனினும், ‘நீட்’ எனும் தேர்வுமுறையை மறுப்போம் என்றோ, இனியும் இத்தேர்வுமுறை வேண்டாம் என்றோ எந்த முழக்கமும் எங்குமே எழாதது கண்டு ஏமாந்துதான் போனோம். தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் ‘நீட்’ தேர்வை மறுத்த முறை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்விற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பனவெல்லாம் நம் நினைவில் எழ மறக்கவில்லை.
மீண்டும் வன்முறை
பற்றிப்
பேசுவோம்...
அண்மையில்
நடந்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் நடந்த விவாதத்தில், சூலை 20-ஆம் நாள் நடந்த இளைஞர் போராட்டத்தில், வன்முறை மிகுதியாகப் பிரயோகிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தினர்; தடுப்புச் சுவர்களில் (Barricade) மின்அதிர்வுகள்
பயன்படுத்தப்பட்டன. போராளிகள் மீது தடியடி நடத்தப்பட்டன. போராட்டம் நடைபெற்ற ஜந்தர் மந்தர் திடல் அருகில் எறிகற்கள் நிரம்பிய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் பணிசெய்த பல காவல்துறையினர் அடையாள
அட்டைகள் இல்லாமலிருந்தனர் (‘தி இந்து’, 24.08.2026).
‘நீட்’ தேர்வு அளித்த அழுத்தத்தால் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட பெல்லட் குண்டுவீச்சினால், ஒருவர் கண்ணை இழந்துள்ளார். போராட்டக்காரர்கள்மீது ஏவப்பட்ட வன்முறைகளை முதல் தகவலறிக்கையாகக் காவல்துறை பதிவு செய்யவில்லையென்று இராகுல்காந்தி செய்த தர்ணாவாக முதல் தகவலறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. ‘நீட்’ எனும் தேர்வுமுறை நிகழ்த்திய வன்முறைகளின் அடையாளங்களே இவை.
வன்முறையின் ஊற்றுக்கண்
‘நீட்’ எனும் தேர்வுமுறை ஆட்சியாளரின் ஆளும் திறனில் உருவானதாக இருக்கலாம். ஆனால், ‘நீட்’ எனும் தேர்வுமுறை மட்டுமல்ல; இந்தியக் கல்வி அமைப்பு நடத்தும் அனைத்துத் தேர்வுமுறைகளுமே வன்முறை வடிவங்களைக் கொண்டவைதாம். தேர்வுமுறை (Examination System) வன்முறை
என்பது மட்டுமல்லாமல், இத்தேர்வை நடத்தும் இந்தியக் கல்வி அமைப்பு வன்முறையின் மொத்த உருவமே!
இந்தியக்
கல்வி அமைப்பு இந்தியாவில் 100 வகையான தேர்வுகளை நடத்துகின்றது. இத்தேர்வு முறைகளில் அவ்வப்போது பெரிய தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நடக்கும் அனைத்துத் தேர்வுகளும் போட்டித்தேர்வுகளே. இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களை உருவாக்கும் கல்வி அமைப்பின் உருவம் (Form), உள்ளடக்கம்
(Content) என்ன
என்பது பற்றிய ஆய்வு ஏதுமின்றி, ‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளைப் போக்குவதற்கான போராட்டமும், இப்போராட்டம் தரும் இடைக்காலத் தீர்வுகளும் நிரந்தரத் தீர்வைத் தராது.
‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளைத் தற்காலிகமாகப் போக்க உச்ச நீதிமன்றம் சில தீர்வுகளைத் தரலாம். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி மிகப்பெரிய கரிசனையோடு, சில தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கலாம். போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களின் குரலில் கொஞ்சம் நியாயம் இருப்பதாகக்கூட மோகன் பாகவத் நாடகமாடலாம். போராட்டக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனக்கு எதிராக உதிர்ந்த வார்த்தைகளை இந்தியப் பிரதமர் ‘பெருந்தன்மையோடு’ மன்னித்துவிட்டிருக்கலாம்.
இவை அனைத்தும் ‘நீட்’ எனும் பயங்கரத்தின் (Terror) ஊற்றுக்கண்ணைக்
கேள்விக்குள்ளாக்கவில்லை,
அடையாளப்படுத்தவும் இல்லை.
இந்தியக்
கல்வி அமைப்பின் உள்ளடக்கமே பாகுபாடுதான். மனித உரிமை மொழியில் பாகுபாடு என்பது மிகப்பெரிய வன்முறை. இந்தியச் சமூக அமைப்பு, மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் சமூகம். இப்பாகுபாட்டு வடிவத்தை நியாயப்படுத்தும் வர்ண பேதத்தைத் தர்மமாக நியாயப்படுத்திய ஒரு சமூக அமைப்பின் மிகப்பெரிய கெட்ட சொல்தான் இவர்கள் கூறும் ‘சமத்துவம்.’ இச்சமனற்றச் சமூகப்போக்கை கவனத்தில் கொண்ட இந்திய அரசியல் சாசனம், பாகுபாட்டைப் போக்க, சமூக நீதியைக் காக்க அரசியல் ரீதியாக இடஒதுக்கீடு போன்ற நடைமுறைகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றான ‘எல்லாருக்கும் கல்வி’ என்ற முழக்கம் இப்போதுவரை வெறும் முழக்கமாகவே இருந்து வருகிறது.
ஒரு
பாகுபடுத்தும் சமூகம், பாகுபாட்டைப் போக்க எவ்விதத் தீவிர முயற்சியும் எடுக்காத நிலையில், கடைசிவரை பாகுபடுத்தும் சமூகம் அளிக்கும்
கல்வி பாகுபடுத்தும் கல்வியாகவே இருக்கும்.
நம்
கல்வி அமைப்பு போட்டியையும், அது தரும் இலாபத்தையும் நோக்காகக் கொண்டிருக்கும் நிலையில், இக்கல்வி முறை நடத்தும் தேர்வு போட்டித்தேர்வு (Competitive) முறையாக
இருக்கையில், இப்போட்டித் தேர்வில் பங்கேற்கும் தகுதி பெறுவோர் யார்? சமனற்றக் கல்வி வாய்ப்பை நியாயப்படுத்திவிட்டு தேர்வை நடத்துகையில், அப்போட்டியில் கலந்துகொள்ளும் அனிதா போன்றவர்கள் எப்படி உயிர் வாழ்வர்?
இந்தியக்
கல்வி அமைப்பின் உள்ளடக்கம் பாகுபாடு என்பதாக இருக்க, இக்கல்வி முறையின் தேர்வு முறையும் பாகுபாட்டைத்தானே உயிர்ப்பிக்கும்!
ஒற்றைக்
கூரையின் கீழ் ஓராசிரியர் பள்ளிகள் இன்னும் இருப்பது உண்மை. ஓராசிரியப் பள்ளியில் படித்த மாணவனுக்கும், மேல் வர்க்கத்திற்கான கல்வி நிறுவனங்களில் படித்த மாணவனுக்கும் இடையே வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன. ‘நீட்’ எனும் தேர்வுமுறை மட்டுமல்ல, இந்தியச் சமூக அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி அமைப்பும், இக்கல்வி முன்னெடுக்கும் அனைத்துத் தேர்வுமுறைகளும் வன்முறை வடிவங்களே.
மதச்சார்பற்ற
இந்திய சனநாயகக் குடியரசு, சமத்துவக் கல்வியைத் தர மறுத்த நிலையில்,
இன்றைய மதவாத அரசிடம் ஒரு பாகுபாடற்ற பொதுக்கல்வியை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் தனித்துவமும் பறிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் பாடங்கள் காவிமயப்பட்ட நிலையில், இவை அனைத்துமே கேள்விக்குள்ளாகாத நிலையில், இக்கல்வி முறையின் தேர்வுமுறையினுள் ஒன்றான ‘நீட்’ மட்டும் எப்படி வன்முறையற்றதாகும்? சமனற்றச் சமூகத்தின் சமூக உறுப்பினர்கள் பங்கெடுக்கும் போட்டித் தேர்வொன்றில் ‘சம பங்கேற்பாளர்கள்’ என்பது எப்படி நியாயமாகும்?
இம்முறைகேடுகள்
இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்தது என்பதையும் ஏற்றுக்கொள்வோம். ‘நீட்’ எனும் பயங்கரவாத வடிவிலான தேர்வுமுறை அராஜகமானது என்பதையும் ஏற்றுக்கொள்வோம். ‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய இளைஞர் போராட்டம், ‘நீட்’ தேர்வின் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சரின் பதவி விலகலை மட்டும் வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்ட இளைஞர்கள், இனி தங்களது கோட்பாட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது அவசியம். அது ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்ற முழக்கத்தை முன்வைக்கவேண்டும்.