news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலத்தின் 24-ஆம் ஞாயிறு (13.09.2026) சீராக் 27:30,28:7; உரோ 14:7-9; மத் 18:21-35 (மன்னிப்பிற்கு எல்லைகள் இல்லை! மன்னிப்பிற்கு எண்ணிக்கைகள் இல்லை!)

மன்னிப்பின் அளவுகோல் என்பது அளவுகோலின்றி மன்னிப்பது. இவ்வுலகின் எதிர்காலமும், திரு அவையின் எதிர்காலமும் மன்னிப்பவர்களின் கரங்களில் உள்ளன. கடந்த வார நற்செய்தியில் அன்பு நிறைந்த உள்ளத்துடன் சகோதரனை வாஞ்சையோடு சந்தித்து, நல்வழிக்குக் கொணரும் பணியை இறைச்சமூகம் செய்திடவேண்டும் என அறிவுறுத்திய இயேசு, இவ்வார நற்செய்தியில் கிறித்தவச் சமூகத்தைக் கட்டமைக்கும் பணியில் மிக முக்கியமான பண்புநலனாகிய மன்னிப்பை வலியுறுத்துகின்றார். நாம் ஆழமாகச்  சிந்தித்தால், பிறருக்கு நாம் தரவேண்டிய மன்னிப்பைவிட, நமது செயல்களால் நாம் காயப்படுத்திய நபர்கள், நமக்குத் தரவேண்டிய மன்னிப்பு எண்ணிலடங்காதவை. “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்எனக் கணக்கிலடங்கா முறையில் மன்னிக்க வேண்டும் என்பதை இயேசு பணிக்கிறார்.

மன்னிப்பின் அளவுகோல் எது?’ என்னும் கேள்விக்குப் பதில், அளவுகோலின்றி மன்னிப்பதே. இவ்வுலகிற்கும், நம் சகோதர-சகோதரிகளுக்கும், நம் குடும்பத்தினருக்கும் நாம் வழங்கிடும் மிகப்பெரும் பரிசு, கொடை, ஆசிர் என்பது நமது மன்னிப்பாக மட்டுமே அமைந்திட முடியும். பிறரின் மன்னிப்பை நாம் கோருவதும், நாம் பிறருக்கு மன்னிப்பு வழங்குவதும் கோழைத்தனமான செயல்பாடு அல்ல; மாறாக, அது சகோதரத்துவ வாழ்வின் ஆணிவேர் என்பதை இன்றைய நற்செய்தி உரக்கக் கூறுகிறது. கெடுபிடியாய் வாழ்வது வீரமல்ல; பலம் அல்ல; பிறரின் சூழ்நிலைகளைப் புரிந்து நாம் அவர்களுக்கு வழங்கிடும் மன்னிப்பில்தான் நமது குணநலன்களும் ஆளுமையும் பலமும் அடங்கியுள்ளது. அதிகாரம் அடக்கி ஆள அல்ல; அடக்கமாய் வாழ்ந்திடவே.

கடன்பட்ட இரண்டு பணியாளர்கள்: இயேசு கடன்பட்ட இரண்டு பணியாளர்களைக் குறித்த உவமையை விளக்குகின்றார். முதல் பணியாளரின் கடன் பத்தாயிரம் தாலந்து. அன்றைய காலங்களில் ஒரு நாட்டின் ஓராண்டு வரவு-செலவு திட்டங்களுக்கான மொத்தத்தொகை. அப்பெரும் கடனை உடனே ரத்து செய்ய இயலாது. இன்று நாட்டின் கதைகள் வேறு. பெரும் முதலாளிகள் தங்களின் தொழிலை விரிவாக்கம் செய்ய பெற்றிடும் மிகப்பெரும் கடனை உடனே ரத்து செய்து, கடன் வட்டியைக் கணிசமாகக் குறைத்து, சலுகைகளை வாரி வழங்கும் அரசு ஒருபுறம்; சிறு குறு விவசாயிகளின் குரல்வளையை நெரித்து, கடன் வசூலைக் கறாராக முழுவதும் வசூல் செய்யும் வங்கிகளின் நடவடிக்கைகள் மறுபுறம். ஆனால், அரசன் தன் பணியாளரிடம் இரக்கம் கொண்டு, அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்கின்றார். தனது கஜானா காலியாகிவிடும் என அறிந்தும், பரிவு கொண்டு தலைவன் அத்தகைய செயலைச் செய்கிறார். அவரது இரக்கத்தைப் பெற்று, மகிழ்வுடன் திரும்பும் அப்பணியாளர், தன்னிடம் கடன் பெற்ற உடன் பணியாளரின் கழுத்தை நெரிக்கிறான். ஆலயத்திற்குச் சென்று இறைவனின் மன்னிப்பைக் கோரி, அவரது திருவுடலைப் பெற்றுத் திரும்பும் நாம், வீடு திரும்பியவுடன் நாம் பெற்ற மன்னிப்பை மறந்து, நம் சகோதரனை வெஞ்சினத்தோடு நோக்குவது போன்று உள்ளது இந்நிகழ்வு. நூறு தெனாரியம் கடனையும் உடனே திரும்பக் கேட்கின்றான்.

நூறு தெனாரியம் என்பது அன்றைய நாளில் நூறு நாள்களின் கூலிக்குச் சமம். பத்தாயிரம் தாலந்து எங்கே? நூறு தெனாரியம் எங்கே? பணியாளரின் துன்பத்தைத் தனது துன்பமாகக் கண்ட அரசன், கடன் சீட்டைக் கிழித்தெறிந்து, பரிவு கொண்டு செயல்படுகிறார். ஆனால், பரிவு பெற்ற பணியாளரின் செயல்பாடு அவருக்கு மிகுந்த வருத்தமளித்தது. பணியாளர் தனது சக பணியாளரிடம் 100 தெனாரியத்தைத் திருப்பி அளிக்கும்படி கோரியது நீதியானதுதான்; ஆனால், அந்நீதியில் கனிவு இல்லை. கனிவுடன் கூடிய நீதியே (equity) இவ்வுலகை வாழ வைக்கும். பிறரின் தேவைகளை, துயரத்தை, வாழ்வு சூழ்நிலையை உணராத நீதி, இவ்வுலகில் எவ்வித மாற்றத்தையும் வழங்கிடாது.

நமது உரிமைகளைத் துல்லியமாக, அளவுகோலுடன் அளந்து பிறரிடம் அதிகாரத்துடன் கோரிக்கையிடும் அதே சூழலில், நமது கடமைகளை வெகுசுலபமாக மறந்து வருகின்றோம்; பிறர் அறிந்துகொள்ள இயலாதபடி மறைத்துவிடுகின்றோம்மன்னிப்பு - நம்பிக்கையின் செயல்பாடு. இதயத்தின் செயல்பாடு; நுண்ணறிவின் செயல்பாடு அல்ல! நம்பிக்கையோடு நாளைய தினத்தையும் எதிர்காலத்தையும் உற்றுநோக்கியே நாம் பிறருக்கு மன்னிப்பை வழங்கிடவேண்டும். பிறரின் செயலால் காயப்பட்ட ஒருவர் தனது கடந்தகாலக் கசப்பான நிகழ்வுகளை உற்றுநோக்கினால்நிச்சயமாக மன்னிப்பைப் பரிசளிக்க முடியாது.

மன்னிப்பு - நலமற்றப் பிணைப்புகளின் கயிறுகளை அறுத்தல்மன்னிப்பைக் கிரேக்க மொழியில்அஃபியிமி(aphiemi) என்று அழைப்பார்கள். இதன் பொருள் விடுவித்தல், விடுதலை பெறுதல், தீங்களிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பிணைப்புகளின் கயிறுகளை அறுத்துவிடுதல். நான் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, என்னைக் கட்டி பிணைக்கைதியாக வைத்திருக்கும் சூழ்நிலைகளை அறுத்தெறிய நான் செய்யவேண்டியது ஒன்றே; அதுவே மன்னிப்பு!

இன்றைய முதல் வாசகத்தில் சீராக் புத்தகத்தின் வரிகள் நமக்கு இதையே நினைவூட்டுகின்றன. “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும் (28:2). நாம் நலம்பெற வேண்டுமென்றால், நாம் சினம் கொள்வதைத் தவிர்த்து, இரக்கம் காட்டவேண்டும்; மன்னிப்பு வழங்கிடவேண்டும் என இறைவாக்கினார் அறிவுறுத்துகின்றார் (28:3).

மன்னிப்பு - நிபந்தனையற்ற அன்பு: மன்னிப்பு என்பது மறப்பது அல்ல; மாறாக, ஒருவரை நான் உண்மையாகவே மன்னித்த பிறகு, அவரைப் பற்றி, அவரது கடந்தகாலச் செயல்பாடுகளைப் பற்றி நான் நினைக்கும்பொழுது மனம் வருத்தமுற்றாலோ அல்லது கலக்கம் அடைந்தாலோ அது உண்மையான, ஆத்மார்த்த மன்னிப்பாக அமையாது.

மன்னிப்பு என்பது அநீதிக்கு எதிரானது அல்ல; மனக்காயங்களை உதறித் தள்ளுவதும் அல்ல; குற்றமிழைத்தோரின் சார்பாக எடுக்கும் நிலைப்பாடும் அல்ல; ஒருவரின் நிலையான கோபத்தை மறைப்பதும் அல்ல; எதிர்பார்த்துச் செயல்படுவதும் அல்ல; சுமை அல்ல; மெத்தனப் போக்கு அல்ல; கட்டாயப்படுத்தி அமைவது அல்ல; அது தனி ஒரு நிகழ்வு அல்ல; என்னுடைய மாண்பை, ஆளுமையைப் புறக்கணிப்பது அல்ல; அது கோழைத்தனம் அல்ல; மாறாக, மன்னிப்பு என்பது நிபந்தனையற்ற அன்பு; குணமளிக்கும் செயல்பாடு, கொடை, பிறருக்கு வழங்கும் பரிசு; எனக்கு நானே அருளும் ஆசி. மன்னிப்பு என்பது தொடர் முயற்சி. சினத்திலிருந்தும், பழிவாங்கும் எண்ணத்திலிருந்தும் பெறும் விடுதலை. உள்ளார்ந்த அமைதியையும் நம்பிக்கையையும் அன்பையும் அனுபவிக்கச் செய்யும் ஆகச்சிறந்த செயல்பாடு.

மன்னிப்பு என்னை அதிகாரப்படுத்தும். மன்னிப்பு என்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் மறக்கமுடியாத அனுபவத்தைத் தரும். மன்னிப்பு அதனைப் பெறுவோரைத் தொற்றிக்கொள்ளும் தன்மை உடையது. மன்னிப்பு என்னைக் கபடற்ற, ஒளிவுமறைவற்ற மனிதனாக மாற்றும் (திபா 103). நமது குற்றங்களுக்கு ஏற்ப இறைவன் நம்மைத் தண்டிப்பதில்லை. அவரிடம் மன்னிப்புக் கோரி நிற்கும் நம் ஒவ்வொருவருக்கும், பிறருக்கு மன்னிப்பு வழங்கவேண்டிய கடமை உண்டு. அவர் பார்வையில் நாம் பாவிகள் அல்லர்; மாறாக, அவரது பிள்ளைகள்!

புனித பிரான்சிஸ் அசிசியார்-யூபிலி: கடந்த 2023, மே  3-ஆம் தேதி முதல் இந்நாள் வரை மேலாக இனத்தின் (பெரும்பான்மையான கிறித்தவர்கள்) வாழ்விடமும் வழிபாட்டுத்தளங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன. அப்பொழுது கிறித்தவர்களின் சாட்சிய வார்த்தைகள் இவ்வாறாக அமைந்தது. “நாங்கள் கிறித்தவர்களாகத் திருமுழுக்கு பெறாமல் இருந்திருந்தால் வாளும் ஆயுதமும் ஏந்தி போராடி இருப்போம்; ஆனால், கிறித்தவர்கள் என்பதால், அறவழியில் போராடுகிறோம். எங்களின் உறவுக்காரர்களைக் கொன்றழித்தவர்களுக்கு நாங்கள் தருவது மன்னிப்பு மட்டுமே. இவற்றை எங்களின் இதயத்திலிருந்து வழங்குகின்றோம்.” எவ்வளவு ஆழமான மன்னிப்பின் வார்த்தைகள்!

2026, சனவரி 10 முதல் 2027 சனவரி 10 வரை நாம் புனித பிரான்சிஸ் அசிசியாரின் 800-ஆம் ஆண்டு விண்ணகப் பிறப்பை யூபிலி ஆண்டாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். ஒருமுறை புனித பிரான்சிஸ் அசிசியாரிடம் தனது சக துறவற சகோதரர்களைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்ட இல்லத்தலைவரிடம், அவர் இவ்வாறாகக் கூறினார்: “உங்களது மன்னிப்பை உங்களது கண்களில் வெளிப்படுத்துங்கள். அக்கண்கள், கடினமான மனநிலையைப் பிரதிபலிக்காமல் மன்னிப்புப் பெறும் மனிதரைப் புதிய பார்வையோடு, புதிய எண்ணங்களோடு உற்றுநோக்கினால், நீங்கள் காணும் பார்வையில் அவர் ஒரு புதிய மனிதனாக உங்களுக்குத் தோன்றுவார். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட பார்வைகள் உங்களுக்கு மன அமைதியைத் தரும். மன்னிப்பவர்கள் கடவுளின் கண்களை, பார்வையைக் கொண்டுள்ளார்கள். ஏனென்றால், அவர்கள் மட்டுமே குளிர்காலங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வசந்த காலத்தைக் காண முடியும். பாவிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் புனிதத்தைக் காண முடியும். கல்லுக்குள் மறைந்திருக்கும் ஈரத்தைக் காண முடியும்.”

புனித பிரான்சிஸ் அசிசியாரின் அர்த்தம் செறிந்த இவ்வார்த்தைகளையும் செபத்தினையும் இந்நாள்களில் நினைவுகூர்ந்து, நாம் அனைவரும் அமைதியின் கருவிகளாக மாறிட முயற்சிப்போம்.