news-details
சிறப்புக்கட்டுரை
பெண்ணியப் பார்வையில் காலநிலை மாற்றப் பேரிடர்கள் காலம்

சென்னை பெருவெள்ளத்தில் வீட்டிற்குள் ஏழு அடி உயரத்தில் தண்ணீர் புகுந்துவிட்ட நிலையில், பச்சிளம் குழந்தையுடன் மூன்று நாள்கள் கஞ்சியும் தண்ணீரும் குடித்து சமாளித்த பெண், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை மற்ற எல்லாரையும்விட நன்கறிந்தவர். தனது குழந்தைக்குத் தாய்ப்பால் இல்லாத நிலையில் தேவையான மருத்துவ உதவியைப் பெற்றுத் திரும்பும் வழியில் அழுக்கு நீர் சூழ நடந்து சென்ற காரணத்தால், அறுவை சிகிச்சை முடிந்து தையலிடப்பட்டிருந்த புண்ணில் தொற்று ஏற்பட்ட அனுபவம் கொண்ட பெண்களுக்குத் தெரியும் காலநிலை மாற்ற விளைவுகள் எப்படி இருக்கும் என்று.  இன்னும் 20-25 ஆண்டுகளில் நாகப்பட்டினம் மாவட்டமே இருக்காது என்ற கணிப்புகள் இருக்கிறபோது, நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்குத் தெரியும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் கொடூரம் என்னவென்று!

உயரும் கடல்மட்டத்தால் தனது மூதாதையரின் நிலத்தை விட்டுவிட்டு எங்கோ ஓரிடத்தில் குடியேறி வாழும் காலநிலை அகதிகளுக்குத் தெரியும்... காலநிலை மாற்றம் வாழ்வாதாரங்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் என்று.

ஓர் ஊரில் திடீரென்று ஏற்படுகிற பெருவெள்ளத்தால் அந்த ஊரில் விவசாயம் செய்யும் ஒட்டுமொத்தப் பெண்களும் அந்த ஊரைக் காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறபோது என்ன நடக்கும் அப்பெண்களுக்கு?

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைப் பொதுமைப்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையிலிருந்து பாலினச் சமத்துவ அணுகுமுறை, விளிம்புநிலை மக்கள் அணுகுமுறை, பழங்குடியினர் அணுகுமுறை, நிலமற்ற உழைக்கும் மக்கள் அணுகுமுறை, தலித் மக்கள் அணுகுமுறை எனப் பன்முகக்கோணங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது. ஏனெனில், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பாலினத்தவருக்கும், அனைத்துச் சாதியினருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதிலிருந்து பன்முகப் பார்வை எவ்வளவு முக்கியம் என்பது நமக்குப் புலப்படும்.

காலநிலை மாற்றத்தால் வரும் பாதிப்புகள் விளிம்புநிலையில் இருப்பவர்கள், வறியவர்கள், ஒடுக்கப்பட்டச் சாதியைச் சார்ந்தவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் போன்றவர்களையே அதிகம் பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் ஆண்களைவிட பெண்களுக்கு இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரிடர்கள் அதிகம் நிகழும் கடலோர மாநிலங்களில் ஆண்களே வேலை தேடி அதிகதிகமாக இடம்பெயரும் சூழலில், குடும்பத்தின் முழு பொறுப்பும் பெண்கள் மீதே விழுகிறது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தையும், குடும்பத்தினரை அவர்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் சூழலையும் ஏற்படுத்துகிறது.

சில ஆய்வுகளின் உண்மைகளும் கணிப்புகளும்

காலநிலை புலம்பெயர்வின்போது இடம்பெயர்பவர்களில் 70% பெண்களே. பாகிஸ்தானின் 2010-இல் நேர்ந்த வெள்ளப்பாதிப்பில் இடமிழந்தோரில் 70%  பெண்களே. 2004-இல் இந்தியா, இந்தோனேஷியா, இலங்கையைத் தாக்கிய ஆழிப்பேரலையில் ஆண்களைவிட மூன்று மடங்கு பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

2040-இல் கங்கைச் சமவெளியிலிருந்து மட்டும் 40 இலட்சம் வேளாண் மக்கள் பயிர்த்தொழிலை இழந்து புலம்பெயர்வார்கள். காலநிலை மாற்றத்தின் பாதிப்பால் 15 இலட்சம் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயத் திருமணம் நடக்கும்.

உகாண்டாவில் 2014 முதல் 2018 வரையிலான வறட்சிக்காலத்தில் பெண்ணுறுப்பு சிதைவு, வன்புணர்வு அதிகரித்திருக்கின்றன.

2025, சனவரியில்நேச்சர்இதழில் வெளியான ஆய்வில், 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் வெள்ளப்  பாதிப்புகள் காரணமாக 1,07,888 பெண்கள் கருக்கலைப்பிற்கு ஆளானதாகக் கூறுகிறது. இந்தியாவில் 2015 முதல் 2021-க்குள் கருவிலேயே குழந்தை உயிரிழக்கும் விகிதம் 28.6% அதிகரித்ததாகக் கூறுகிறது.

யூனிசெப் அறிக்கையின்படி 2035-ஆம் ஆண்டிற்குள் காலநிலை பேரிடர்களால் 15.8 கோடி பெண்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள். 23.6 கோடி பெண்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள்.

காலநிலை மாற்றப் பேரிடர்களின்போது வருமானத்திற்காகப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் போக்கும் அதிகரித்திருக்கிறது. 2021-இல் வெளியிட்ட விரிவான ஆய்வின்படி, விலைவாசியோ, வளங்களுக்கான போட்டியோ நிலவுகிறபோது, வேறு வழியில்லாமலோ அல்லது பிறரின் வற்புறுத்தலினாலோ பெண்கள் தங்கள் உடலை ஒரு பண்டமாக முன்வைக்கிறார்கள். கொல்கொத்தாவில் ஏற்பட்டஐலாபுயலின் (2009) பாதிப்பிற்குப் பிறகு, அங்கிருந்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 முதல் 25 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்கிறார் மருத்துவர் ஸ்மரஜித் ஜனா.

பீகாரில் வெள்ளத்திற்குப் பின்னான காலகட்டங்களில், திருமணம் என்கிற பெயரில் பெண்களைப் பாலியல் தொழிலுக்காகக் கடத்துவது, குடும்ப வன்முறை, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்திருக்கின்றன.

காலநிலைப் பேரிடர்களின்போதெல்லாம் பெண்களுக்கெதிரான உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறை 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரிக்கிறது என்கிறார் ஒரு விஞ்ஞானி.

பெண்களுக்கு ஏற்படும் இரட்டிப்புச் சுமைகள்

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் பெருமளவு குறைந்துவிட்டதால் பெண்கள் 5 முதல் 10 கிலோ மீட்டர் வரை தண்ணீர் தேவையைப் பூர்த்திச் செய்ய பயணிக்க வேண்டியுள்ளது என்கிறார் காலநிலை செயல்பாட்டுக் குழுவைச் (CCAG) சார்ந்தவரான விஷ்வஜா சம்பத். வீட்டு வேலைகளிலும், சுத்தம் செய்வதிலும், தண்ணீர் சுமந்து வருவதிலும், அதிக தொலைவு பயணிப்பதிலும், மழைநீரைச் சேகரித்து வருவதிலும், குழந்தைகளைப் பேணுவதிலும், வீட்டு எரிசக்தி வளங்களைச் சேகரிக்கும் உழைப்பிலும், பேரிடர்களின்போது அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் பெண்களே மணிக்கணக்கில் ஈடுபடுகிறார்கள்.

உலகளவில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தண்ணீர் சேகரிப்புப் பணிகள் மற்றும் நிர்வகிப்பதற்குப் பெண்களே பொறுப்பாக உள்ளனர்.

மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024 வரையில் இந்தியாவில் 17 மாநிலங்களில் 40 ஆயிரம் பேர் வெப்ப நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 40,000 பேரைக் கவனிக்கும் பொறுப்பு சமூக அடுக்கில் பெண்களின் மேல் நீண்டகாலமாகச் சுமத்தப்பட்டுள்ளது. அதனால் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள், மனஅழுத்தம், குடும்பச் சுமைகள் இன்னும் இரட்டிப்பாகும்.

வளிமண்டல மாசு அதிகரிப்பால் உலக அளவில் 30 கோடி பேர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக இருக்கும்போது, இந்த 30 கோடி பேரையும் கவனிக்கும் பொறுப்பு யார்மீது விழும்? நோய்வாய்ப்பட்டவர்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் கவனிக்கும் பொறுப்பு, அவர்களுக்கு வேண்டிய மருத்துவச் சேவைகளைப் பெறச்செய்தல் எனக் குடும்பப் பணிச்சுமைகளைக் காலநிலைப் பேரிடர்கள் சாதியாலும் பாலின வேறுபாட்டினாலும் ஒடுக்கப்படுகின்ற பெண்களுக்கு இரட்டிப்பாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது

காலநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளில் பாலினச் சமத்துவம்

காலநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளில் பாலினச் சமத்துவமின்மை பெரும் சவாலாக இருப்பதாக, ‘பப்ளிக் லைப்ரரி ஆப் சயின்ஸ்இதழில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29-வது காலநிலை உச்ச மாநாட்டில் காலநிலை செயல்முறையில் பாலினச் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான .நா. திட்டத்தை (Lima Work Programme on Gender) மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிட்டுள்ளது.

பேரிடர் நிவாரணக் குழுக்களில் பெண்கள் இல்லை. தேசிய அளவிலும், உலக அளவிலும் காலநிலை குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பெண்களின் விகிதம் 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது என்கிறார் சூழலியல் அறிஞர் டயானா லிவர்மன். கல்வி மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவது விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரும் சவால். காலநிலை பாதிப்புகள் இருபாலாருக்கும் சமமாக இல்லை, காரணம், சமூகக் கட்டமைப்பில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையே என்கிறார் மினிகோவிந்தன்.

பாலினக் கண்ணோட்டங்களைக் காலநிலை உத்திகளில் புகுத்துவதோடு, முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்குச் சமமான பிரிதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்பத் தீர்வுகளைவிட சமூக அளவிலான பாலின, வர்க்க, சாதி, இனம் சார்ந்த தனித்தனித் தீர்வுகள் முக்கியம்.

சமூகப் பார்வை இல்லாத சூழல் பாதுகாப்பு, பெண்ணியப் பார்வை இல்லாத காலநிலைத் தீர்வுகள், ஒடுக்கப்பட்டவர்களைப் பேசாத மேட்டிமை உரையாடல்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையாத தொழில்நுட்பத் தீர்வுகள், சாதி, வர்க்கம், பாலினம் இவைகளைக் கணக்கில் எடுக்காது மேற்கொள்ளப்படும் பேரிடர் தடுப்பு, மட்டுப்படுத்துதல், மீள்திறன் நடவடிக்கைகள் அனைத்துமே வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்தாது. காலநிலை மாற்றத்திற்கு எந்தவிதத்திலும் காரணமில்லாத ஒரு பாலின வர்க்கம் காலநிலை மாற்றத்தின் பேரிடர்களால் ஒடுக்கப்படுவது காலநிலை நீதிக்கு எதிரானது. காலநிலைப் பேரிடர்களுக்குக் காரணமானவர்கள் தீர்வுகளை முன்மொழிவதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் தீர்வுகளை முன்வைப்பதே காலநிலை நீதி.