news-details
கவிதை
பாளம் பாளமான நே பா ள ம்

சகதியும் அவதியும் நிறைந்த நேபாளம்!

அழுகையும் ஓலமும் கலந்த நேபாளம்!

அப்பாவி உயிர்களின் கண்ணீரில்

நனைந்து கிடக்கும் நேபாளம்!

இயற்கையின் சீற்றமா?

மனிதனின் அலட்சியமா?

ஆட்சியாளரின் தவறா?

அல்லது காலத்தின் கொடுமையா?

இந்தக் கண்ணீர் கதைக்கு

யார் காரணம்?

இயற்கையின் சீற்றம் என்றால்...

ஏன் திடீரென இப்படிச்

சீறிக் கொண்டிருக்கிறது?

ஓசோன் படலத்தில்

ஓட்டை விழுந்ததும்

இயற்கையின் சீற்றமா?

எல்லைகளில் கம்பீரமாய் நின்ற

பனிப்பாறைகள் உருகுவதும்

இயற்கையின் சீற்றமா?

பசுமை போர்த்திய

இயற்கைக் காட்சிகள்

அலங்கோலமாய் மாறுவதும்

இயற்கையின் சீற்றமா?

இல்லை... இல்லை...

மனிதா! உனது சுயநலமே

உன்னைக் காயப்படுத்துகிறது!

மனிதா! உனது ஆத்திரமும் ஆணவமும் உன்னையே

வாரிச் சுருட்டுகிறது!

அளவுக்கு மீறிய சுயநல ஆசைகள்...

கொஞ்சம் கூட வலிக்காத

சொகுசு வாழ்க்கைக்கான

முடிவில்லாத வேட்கைகள்...

சுரண்டிச் சுரண்டி...எடுத்து எடுத்து...

பூமியையே கரியாக்குகின்ற

படாடோப வாழ்க்கைகள்...

அடுத்த தலைமுறைக்குக் கூட

மிச்சம் வைக்காமல்

இயற்கையைச் சுரண்டும்

அதிகார வெறிகள்...

கொஞ்சம் கூட யோசிக்காமல்

காடுகளை அழித்து,

மலைகளை உடைத்து,

ஆறுகளை அடைத்து,

பூமியின் மார்பையே கிழிக்கும்

அத்துமீறல்கள்...

இயற்கைக் காற்றைத் தடுத்து

குளிரூட்டிய அறையில்

வாழும் மனிதா! நீ குளிர்கிறாய்!

உன் உலகம் தகிக்கிறது

மாசு குறைவான மின்  வாகனத்தில்

உலவுவதாகக் கனவு! ஐயோ பாவம்!

எங்கோ டன் கணக்கில்

நிலக்கரி எரிந்து புகையாய்

போய்க்கொண்டிருக்கிறது

பின்னர் நாம் கேட்கிறோம்...

ஏன் இந்த வெள்ளம்?

ஏன் இந்த நிலச்சரிவு?

ஏன் இந்த அழிவு?

இயற்கை பழிவாங்கவில்லை மனிதா... நீ செய்த காயங்களுக்கு

இயற்கை பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது!

இன்று நேபாளம் அழுகிறது...

நாளை யார் அழுவார்கள்?

இன்று பூமி பிளந்திருக்கிறது...

நாளை நம் வாழ்வும் பிளந்தால்?

இயற்கையைக் காப்போம்!

இயற்கையோடு வாழ்வோம்!

அடுத்த தலைமுறைக்காக

இந்தப் பூமியை மிச்சம் வைப்போம்!

பாளம் பாளமான நேபாளம்

நமக்குச் சொல்லும் பாடம் இதுவே...

பூமியை அழித்தால்,

அழிவது பூமி மட்டுமல்ல...

மனித இனமுமே!