“வாங்க
யாழினி, உட்காருங்க” என்றார்
இஸ்மாயில்.
“டாக்டர்
சார், இப்ப என்னோட பெர்சனல் விசயமாய் பேச வந்திருக்கேன். ஃப்ரியா இருக்கீங்களா, பேசலாமா?” என்றாள் சிரித்தபடி யாழினி.
“தாராளமாய்ப்
பேசலாம். அன்னைக்கி கிரீன் பார்க்கிலே பெர்த்டே பங்சன் நல்லா இருந்தது. அதுக்குப் பிறகு இப்பதானே பேசுறோம்”
என்றார் இஸ்மாயில்.
“தேங்க்ஸ்
டாக்டர். இப்ப நான் என்னோட திருமணம் பத்தி சொல்லப் போறேன். நீங்கதான் இதைக் கலந்துபேசி முடிச்சு வைக்கணும்”
என்றாள் யாழினி.
“தாராளமாய்ச்
சொல்லுங்க யாழினி. என்னால் முடிந்த உதவியைப் பண்றேன். அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்?” என்றார் டாக்டர் இஸ்மாயில்.
“நான்
முதல் முதலிலே டாக்டர் சேவியரைப் பார்த்ததும், அவருடைய மனைவி அமெரிக்காவில் இறந்தது கேட்டு அவர்மேல் பரிதாபம் ஏற்பட்டது...” என்று ஆரம்பித்தாள் யாழினி.
“அப்படியா
யாழினி! யாருக்கும் சேவியரைப் பார்த்தால் அப்படித்தான் தோணும்” என்று சிரித்தார் இஸ்மாயில்.
“அதன்
பிறகு அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு மேலும் மனத்தில் இரக்கமும் கவலையும் ஏற்பட்டன”
என்றாள் யாழினி.
“பாவம்!
அவனோட வாழ்வில் இப்படி நடந்திருக்கக்கூடாது. படிக்கும்போதே ரொம்ப நல்லாப் படிப்பான். எல்லாரோடும் நல்லா அன்பாய்ப் பழகுவான். என்ன செய்ய... விதியை மாற்ற முடியாதே!” என்றார் டாக்டர் இஸ்மாயில்.
“அது
உண்மைதான். வாழ்க்கையில் இப்படி நடந்தால் வெறுப்பும் விரக்தியும் அதிகம் ஏற்பட்டு விடும். ஆனால், அது இல்லாமல் சேவியர் சுறுசுறுப்பாய் வேலை செய்கிறார். பேஷண்டுகளிடம் அன்பாய் பழகிக் கவனித்துக்கொள்கிறார். இது எனக்கு வியப்பாய் இருந்தது”
என்றாள் யாழினி.
“வெரிகுட்
யாழினி! எனக்கு அவன் ஆத்மார்த்தமான நல்ல நண்பன். சாதி, மதமெல்லாம் தாண்டி நாங்க தொடர்ந்து பாசமுடன் பழகி நட்புடன் வாழ்ந்து வருகின்றோம். இது பலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கும்; சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும்”
என்று சிரித்தார் இஸ்மாயில்.
“இதே
நிலைதான் எனக்கும் ஏற்பட்டது. பரிவு, கவலை, இரக்கம் என்பது மாறி, சேவியர் மேல் எனக்கு அன்பு ஏற்பட்டது. இதுபற்றி நான் பல நாள்கள் யோசித்து,
பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்” என்றாள்
யாழினி.
“என்ன
முடிவெடுத்திருக்கீங்க
யாழினி?” என்று சிரித்தபடி கேட்டார் டாக்டர் இஸ்மாயில்.
“டாக்டர்
சேவியரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன் டாக்டர்” என்று சிரித்தாள் யாழினி.
“நல்ல முடிவு
யாழினி. ஒரு நல்லவரை கல்யாணம் பண்றதுக்கு என்னோட வாழ்த்துகள். ஆனால், இது சாத்தியமாகுமா? உங்க வீட்லே சம்மதிப்பாங்களா டாக்டர்” என்றார் சிரித்தபடி இஸ்மாயில்.
“அதுக்குத்தான்
உங்ககிட்ட சொல்றேன். நீங்கதான் டாக்டர் சேவியர்கிட்டே பேசணும். அவரோட வீட்லே பிரச்சினை இல்லே. ஆனால், எங்க வீட்லே எதிர்ப்பாங்க. அவங்கள்ட்டே நீங்க பேசித்தான் சம்மதிக்க வைக்கணும்”
என்றாள் யாழினி.
“வெரிகுட்
ஐடியா! நானும் பாத்திமாவும் உங்க வீட்லேபோய் கன்வின்ஸ் பண்றோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்” என்றார்
இஸ்மாயில்.
“நீங்க
விவரத்தைப் பேசி, எப்படியாவது அவங்களை ஒத்துக்க வையுங்க. என் அம்மாவைப் பற்றி பிரச்சினை இல்லே! அப்பாதான் சாதி, மதம்னு சொல்லிக் குதிப்பார்” என்றாள்
யாழினி.
(தொடரும்)