சிறையில் தோமாவைச் சந்தித்த காத், அவரைச் சிறையிலிருந்து விடுவித்து, அவர் அணிவதற்கு விலையுர்ந்த ஆடை ஒன்றைக் கொடுத்து, அவர் பாதங்களில் விழுந்து, “கடவுளின் மனிதரே! என் சகோதரன் பெருங்குற்றம் ஏதேனும் செய்திருந்தால், அவருக்குத் தேவையான மன்னிப்பைக் கடவுளிடமிருந்து பெற்றுக் கொடுங்கள்” என வேண்டினான்.
“விண்ணகச் செல்வத்தின்முன் உலகச் செல்வங்கள் ஒன்றுமேயில்லை” என்ற
தோமா, ஹப்பான் பின்தொடர
சிறைச்சாலையை விட்டு வெளியே வருகையில், எதிரே அரசன் கொண்டோபரஸ் அவரைச் சந்திக்க விரைந்து வந்தான். தன்னுடைய செல்வத்தை வீணாக்காமல் ஏழைகளுக்கு அளித்து, மண்ணகப்
புண்ணியங்களால் விண்ணகத்தில் தோமா தனக்கான அரண்மனை கட்டியிருப்பதை உணர்ந்து நெகிழ்ச்சியுற்றிருந்த அவன், தோமாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்: “கடவுளின் ஊழியரே, இப்போது எனக்குத் தேவையானது உம் மன்னிப்பு ஒன்றே. என் குற்றங்களை மன்னியும். உம்மைத் துன்புறுத்தியதற்காக என்னை மன்னித்து, எனக்காகக் கடவுளிடம் செபியும். உம்முடைய கடவுளின் அடிமையாக என்னை ஏற்றுக்கொண்டு, எனக்காக நீர் விண்ணகத்தில் கட்டியுள்ள அரண்மனைக்குள் நான் வசிக்க வழி செய்யும்”
என்றான்.
“கடவுள் உன்மீது மிகுந்த கருணை கொண்டவராக இருக்கவே விண்ணக வெளிப்பாட்டை உமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவை நம்பி திருமுழுக்குப் பெறுங்கள். முடிவில் அவரின் நீடித்த அரசில் நீர் என்றும் பங்கு பெறுவீர்”
என்றார்.
இதைக்
கேட்டுக் கொண்டிருந்த காத், “என் சகோதரனுக்காக நீர் கட்டிய அரண்மனையை நான் விண்ணகத்தில் கண்டேன். அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்” என்றான்.
உடனே தோமா, “உம் சகோதரன் விரும்பினால் அதை அவரிடம் நீர் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்”
என்றார்.
உடனே
அரசன், “கடவுள் சித்தமானால் அந்த அரண்மனை எனக்கென இருக்கட்டும். என் தம்பிக்காக நீர் மற்றோர் அரண்மனை கட்டித்தாரும். இல்லாவிடில், எங்கள் இருவருக்குமே அதே அரண்மனையில் இடம் கிடைக்க உதவி செய்யும்”
என்று வேண்டினான்.
அவ்விருவருக்கும்
தோமா கூறினார்: “உலகம் தொடங்கிய நாள் முதல் எண்ணற்ற அரண்மனைகள் விண்ணகத்தில் தயாராக உள்ளன. அவற்றை பொருள் கொடுத்து வாங்க முடியாது. உங்கள் நம்பிக்கையாலும், தானதர்மங்களாலுமே வாங்க முடியும். மற்ற செல்வங்கள் எல்லாம் விண்ணகத்தில் பின்தொடராது “என்றார்.
அரசனின்
மனமாற்றத்திற்காகத் தோமா கடவுளுக்கு நன்றி கூறி செபித்தார். “ஆண்டவராகிய இயேசுவே! உண்மையில் ஆண்டவராகிய நீர் இந்த அரசனையும், இவர் சகோதரனையும் ஏற்றுக்கொள்ளும். இப்போது இவர்கள் உமக்காகத் துன்புறவும் வெறுக்கப்படவும்
உயிர் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். உம்முடைய மீட்பை நாங்கள் பெற்றுக்கொள்ள உம் இரக்கத்தைப் பொழியும்”
என்றார்.
இந்நிகழ்வு
நடந்து ஏழு நாள்களுக்குப் பின்னர் இருவருக்கும் தோமா திருமுழுக்கு அளித்தார். அவர்கள் தலையில் எண்ணெய் பூசி அவர்களை உறுதிப்படுத்தினார். அரசனைத் தொடர்ந்து அன்று பெண்கள், குழந்தைகள் நீங்கலாக ஆண்கள் மட்டுமே 40,000 பேர் தோமாவிடம் திருமுழுக்குப் பெற்றனர். அன்று ஏராளமான நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர். தட்சசீலத்தில்
தங்கியிருந்த தோமாவின் பணிகள் நகர்ப்புறங்கள், கிராமங்கள், ஊர்கள் என எல்லா இடங்களிலும்
பரவின. அவர் செல்லும் இடமெங்கும் மக்கள் கூட்டங் கூட்டமாக அவரைத் தேடிவந்து, அவரின் போதனைகளைக் கேட்டனர். போதிப்பதோடு செபித்தார், பாடல்கள் பாடினார், அம்மக்களுக்கு ஆசிர் வழங்கினார்.
தோமா
சமவெளிப் பகுதிகளில் போதிக்கையில் அவர் முகத்தைப் பார்த்தபடி போதனையைக் கேட்க மக்கள் முண்டியடித்து நின்றனர். இதனால் முன்புறம் நிற்பவர்கள் தலைகள் மறைத்த காரணத்தால், பின்னால் நிற்பவர்கள் தாங்கள் நின்ற இடங்களிலிருந்து தங்கள் முன்னங்கால்களை அழுத்தி, குதிகால்களை உயர்த்தி நின்று, அவர் முகத்தைப் பார்த்தபடி பேச்சைக் கேட்டனர்.
இதைக்
கவனித்த தோமா, அந்த மக்களிடம் அவர்களின் ஆர்வமிக்க செயலை ஒப்பிட்டுப் பேசினார்: “இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்களே, என் பேச்சைக் கேட்பதில் உங்களின் ஆர்வம் எனக்குப் புரிகிறது.
என்னைப் பார்ப்பதற்கே உங்களை உயர்த்திக்கொள்கிறீர்கள். அதிக உயரத்தில் இருக்கும் ஆண்டவரைப் பார்க்க நீங்கள் உங்களை இன்னும் அதிகமாக உயர்த்திக்கொள்ளவேண்டும். அழிந்து போகும் உலகச் செல்வங்களின்மீது பற்று வைக்காதீர்கள். நீங்கள் பற்று வைக்கவேண்டியது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துமீதே. அவரை நம்பினால் அவர் உங்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்பார். ஆன்மாவுக்கு இளைப்பாற்றி தருபவர் அவரே. உங்கள் மனம் மற்றும் உடல் நோய்களை நல்ல மருத்துவராக நின்று அவரே குணப்படுத்துவார்” எனப்
போதித்தார்.
இவ்வாறு
அம்மக்களிடம் போதித்த தோமா மேலும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி, அவர்களின் நம்பிக்கை வாழ்விற்கான அடிப்படையை உணர்த்தினார். தோமாவின் போதனைகளைக் கேட்ட மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நம்பிக்கை மேலும் அதிகரித்தது. மனம் வருந்திய அவர்கள் தங்கள் பாவங்களை எண்ணி அழத் தொடங்கினார்கள்.
தோமாவிடம் தங்களின் பாவ மீட்பு குறித்து கேள்விகளையும் எழுப்பினர்.
“கடவுளின் தூதரே, நாங்கள் உண்மையான கடவுளிடம் நம்பிக்கை வைத்ததில்லை. இப்போது எங்களை நாங்கள் உணர்ந்துவிட்டோம். எங்களுடைய பழைய குற்றங்களை எல்லாம் மறந்து, மன்னித்து, எங்களை அவர் ஏற்றுக்கொள்வாரா?” என்று கேட்டனர். தோமா அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கினார். அவர் செல்லும் இடமெங்கும் மக்கள் திரளாக ஆர்வமுடன் அவரைப் பின்தொடர்ந்தனர்.
தட்சசீலம்
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று தோமா தம் போதனையைத் தொடர்ந்தார். அவர்
போகும் வழிகளில் எல்லாம் அவரைக் காண மக்கள் கூட, அங்கே ஏராளமான நோயாளிகள் குணம்பெற்றனர். பேய் பிடித்த அநேகரின் அசுத்த ஆவியை ஓட்டி, அவர்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். இவ்விதம் மக்களைச் சந்தித்துப் போதித்து, அவர்களை நலப்படுத்தி நடந்த தோமாவின் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவியது.
தோமா
தான் சென்ற இடங்களில் தனக்குப் பின் மறைபரப்புப் பணியைத் தொடர உதவியாளர்களை நியமித்தார். அவர்கள் இயேசுவின் போதனைகள், மறைபொருள் பற்றிய அறிவில் ஆர்வமும் பழக்கமும் கொண்டவர்களாக உருவெடுத்தார்கள். திருமுழுக்கு கொடுப்பது, எண்ணெய் பூசுவது, போதிப்பது, சபையை வழிநடத்துவது போன்றவற்றில் பயிற்சி பெற்றார்கள்.
தட்சசீல
நகரில் கிறித்தவர்கள் பெருமளவில் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்று 1935-ஆம் ஆண்டில் அந்நகரில் கிடைத்தது. கொண்டோபரஸ் மன்னனின் அரண்மனை இருந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு முன் ஒரு விவசாயி கருங்கல்லாலான ஒன்றரை அங்குலம் நீளமுள்ள சிலுவை ஒன்றைக் கண்டறிந்தான். அதுபோன்ற கருங்கல் சிலுவைகளைக்
கிறித்தவ மக்கள் அக்காலத்தில் கழுத்தில் அணிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தட்சசீலத்தில்
தங்கியிருந்து போதித்ததன் விளைவாகக் கொண்டோபரஸ் ஆளும் மண்ணில் கிறித்தவர்கள் பெருகினர். அவர்களில் பார்த்தியர்கள் மட்டுமின்றி யூத, கிரேக்க, பெர்சிய இனத்தவரும், புத்த, சமண, சைவ, வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களும்
அடங்குவர். இவ்வாறு இறைச்சமூகத்திற்குள் இணையும் ஆன்மாக்களின் எண்ணிக்கை பெருகலாயிற்று. அதனால் கிறித்தவ மக்களுக்கான சபை அங்கே உருவாயிற்று.
அரசன்
கொண்டோபரசையும் அவன் இளவல் காத்தையும் மனம் திருப்பிய தோமா, தட்சசீல நகரை விட்டு நீங்கி தன் பயணத்தைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தட்சசீலத்தில் பணிசெய்த அவர், அந்நகரை விட்டு வெளியேறிய அன்று அங்குள்ள கிறித்தவர்கள் கண்ணீர் மல்க அவருக்கு விடைகொடுத்தனர். இனி கடவுளின் அன்பரும் தூதருமான தோமாவைக் காணமுடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. முழங்காலில் இருந்து அவர் பாதங்களை வணங்கிய அந்நகர் நம்பிக்கையாளர்கள், தாங்கள் அவருக்காகச் செபிப்பதாகவும், தங்கள் செபம் அவர் செல்லுமிடமெங்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
தோமா
தட்சசீலத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்ற சில ஆண்டுகளிலேயே மன்னன் கொண்டோபரஸ் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவனுடைய இறப்பு கி.பி. 50-ஆம்
ஆண்டில் நிகழ்ந்தது. அவனுடைய இறப்பிற்குப்பின் பலவீனமடைந்த பார்த்தியா அரசு ஆசியாவின் பழங்குடி இனத்தவரான குஷானர்களால் கைப்பற்றப்பட்டது. குஷானர்கள் முதலில் காந்தகாரைக் கைப்பற்றினர். பின்னர் பார்த்தியா தேசத்தையும், அவர்கள் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர். தட்சசீலமும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
பிற்காலத்தில்,
குஷான வம்சத்தின் மூன்றாம் அரசரான கனிஷ்கரின் ஆட்சியில், பெஷாவர் எனும் புருஷபுரம் தலைநகராக விளங்கியது. பல போர்களை நடத்தி
வெற்றி கண்டவனாக நீண்ட காலம் அவன் அரசாட்சி செலுத்தினான். புத்த மதத்தை தீவிரமாகப் பின்பற்றிய கனிஷ்கர் மற்ற மதங்களை வெறுத்தான். அதனால் புத்த சமயம் தவிர, மற்ற சமயங்களின் வளர்ச்சிக்கு அங்கே தடை ஏற்பட்டது. இதனால் திரு அவையும் அங்கே வளர்ச்சி காணாமல் போயிற்று. அங்கிருந்து கிறித்தவர்கள் பாரசீகத்திற்கோ, அரேபியாவிற்கோ சென்று கலந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தட்சசீலத்தில் கிறித்தவம் நிலைக்காமல் போனதற்கு கனிஷ்கரின் புத்தமதத் தீவிரப்போக்கே காரணம் என்று கூறலாம்.
தட்சசீலத்திலிருந்து
தோமா புறப்படும் முன்னே சீடர்கள், மூப்பர்கள், உடல் உழைப்பாளர்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்துப் பேசி, தட்சசீலத் திரு அவையைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பினை சாந்திப்பாஸ் என்ற திருத்தொண்டரிடம் ஒப்படைத்திருந்தார் தோமா. புறப்படும் முன்னர் அங்குள்ள மக்களிடம் விடைபெற்றுக் கொண்டார்: “கடவுள்மீது நம்பிக்கைக் கொண்டுள்ள நீங்கள் அவர்மீது நம்பிக்கைப் பற்றுதலோடு வாழுங்கள். நான் அறிவித்த இயேசு உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார். எல்லாராலும் நீங்கள் கைவிடப்பட்டாலும், அவர் உங்களைக் கைவிடமாட்டார். நான் உங்களை விட்டு வேறிடம் செல்கிறேன். உங்களை இனி நான் பார்க்கப் போவதில்லை. எனக்குப் பதிலாகத் திருத்தொண்டர் சாந்திப்பாஸ் இயேசுவை உங்களுக்குப் போதிப்பார். என்னையும், திருத்தொண்டர்
சாந்திபாசை விடவும் இயேசுவே உங்களுக்கு முக்கியம். எனவே, உங்கள் நம்பிக்கையை ஆண்டவர் இயேசுவின்மீது மட்டுமே வையுங்கள்”
என்று கூறி மக்களை ஆசிர்வதித்தார்.
தட்சசீலத்தை விட்டு நீங்கிய தோமா அடுத்து காந்தாரம் செல்ல முடிவெடுத்தார். காந்தாரம் என்பது இன்றைய பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிக்கும், ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிக்கும் இடையே பெஷாவர் நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இன்றைய ஆப்கானிஸ்தானில் ‘காண்ட கார்’ என்றழைக்கப்படும் பகுதி இது. வேதகாலத்தில் இதிகாசங்களில் இந்நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தாரம் நகரும் தட்சசீலத்தைப் போன்றே பாரசீக மன்னன் டோரிஸ், பின்னர் அலெக்சாண்டர் ஆகியோரின் ஆளுகைக்கு உட்பட்டது. கிரேக்கக் கலைகள் இங்கு கலக்க இந்திய - கிரேக்க கலப்பு ஓவியக் கலையான ‘காந்தாரக் கலை’ புகழ் பெற்று விளங்கிற்று. தட்சசீலத்தை விட்டுப் புறப்பட்ட தோமா காந்தாரம் நோக்கி சீடர்களுடன் கால்நடையாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
(தொடரும்)