‘உடம்பு எப்படி இருக்கு?’ எனக் கேட்கும்போது, நம் உடல் சரியாக இருந்தாலும், மனம் சரியாக இல்லையென்றால், ஒரு சலிப்பான பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும். அதுவே உடல்நிலை சரியாக இல்லாதபோது, திட மன திருந்தால், ‘நமக்கென்ன குறை? வாழ்க்கைய வாழ்ந்து பாத்துட்டா போச்சு’ எனும் வீரியமான பதிலை எதிர்பார்க்கலாம்.
உடம்பை
விட மனது வலிமையானதா? ‘ஆம்’ என்ற பதில்தான் அனைவரிடமிருந்தும் வரும். இரண்டும் வலிமையாக இருந்தால் அசைக்க முடியாத ஆற்றல் ஊற்றெடுக்கும். அந்த அசைக்க முடியாத ஆற்றல் எங்கிருந்து வருகிறது? மனத்தின் பங்களிப்பு என்ன? என்பதைப் பற்றிய ஓர் அலசலில் இறங்குவோம்.
‘எனக்கென்ன குறை? இதைப் பற்றித் தெரிய வேண்டிய தேவையும் இல்லை, அவசியமும் இல்லை’ என்று நகர்ந்துவிட வேண்டாம். நாம் சரியாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை உணர, இதைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் மனது வைப்போம். மனது வைத்தால்தான் எதுவும் நடக்கும்.
‘எனக்கு மூளை சரியில்லை’
என்று யாரும் கூறுவதில்லை. ‘எனக்கு மனசு சரியில்லை’
என்றுதான் நாம் அனைவரும் பொதுவான சொல்லாடலைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த மனநலன் பற்றிய புரிதல் என்பதைவிட, இகழ்தல்தான் அதிகமாக இருக்கிறது. ஏன்? மூளை சரியில்லை என்றால், மருத்துவரை அணுகி அதன் குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்யும் முறை எளிதானது. மனது சரியில்லை என்றால் அவ்வளவு எளிதாக அல்லது விரைவாகக் கண்டறிந்து சரிசெய்வது முடியாத செயல் என்று சொல்லவில்லை; மாறாக, அதனைச் சரிசெய்ய சற்று காலம் எடுக்கும். ஏனென்றால், மனது என்பது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் சிந்தனை, சொல், செயலைப் பொறுத்தது. அதனை அவர் வழியில் சென்று புரிந்து, அவரையும் புரியவைத்து வெளிக்கொண்டு வருவது சற்று சவாலான ஒன்று. அதேநேரத்தில், இது ஓர் அலாதியான பயணம் என்பதைப் புரிந்துகொண்டால் அதனை அணுகுவது சற்று எளிது.
மனம்
(Mind) என்பது மனிதனின் சிந்தனை, உணர்வு, விருப்பம், கற்பனை, முடிவெடுத்தல் மற்றும் நடத்தை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மிகச் சிக்கலான உளவியல் அமைப்பாகும். ‘மனம்’ என்பது மூளையுடன் தொடர்புடையது என்றாலும், மூளை (brain)
என்பது உடலியல் உறுப்பு. மூளை எனும் வன்பொருள் (hardware)
செயல்பாட்டிற்கு, மனம் (Mind) எனும்
மென்பொருளே (Software) காரணமாக
அமைகிறது. எளிதாகக் கூறவேண்டும் என்றால், கணினி (Computer) இயக்கத்தை
வரையறுக்கும் வன்பொருள், மென்பொருள் போல இதனை நீங்கள் உருவகப்படுத்திக்கொள்ளவேண்டும்.
மூளை
இயங்கவேண்டிய மென்பொருளைக் கட்டமைப்பது மனதுதான். இப்போது நமக்குப் புரிந்திருக்கும், நம்மைக் கட்டமைப்பதில் மனம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று.
நாம்
முதலில் மனிதர்கள்; அதன் பிறகுதான் நமது பிற அடையாளங்கள். மனிதன் என்ற வடிவத்தைத் தாண்டி, சிறந்த மனிதன் என்ற அடையாளத்தை அடைய இந்த மனத்தினைப் (சிந்திக்கும் திறன் நிறைந்த பகுதி) பற்றிய புரிதல் நமக்குக் கட்டாயம் வேண்டும்தானே!
‘மூளை எல்லாருக்கும் ஒரே அளவில்தானே இருக்கிறது! பிறகு ஏன் மனிதனுக்கு மனிதன் வேறுபாடு உள்ளது?’ எனும் ஐயம் எழுவது இயல்பு. ஆம், மனிதனுக்கு மனிதன் ஏற்படும் வேறுபாடு மென்பொருள் எனும் மனதால்தான். இதுதான் நம்மைத் தனித்துவமிக்க மனிதனாக மாற்றி, நம்மை அடையாளப்படுத்தி, நல்லதோர் அங்கீகாரத்தை ஏற்படுத்துவது மனம்தான்... மனம் மட்டும்தான். ஆச்சரியம்தானே!
மனம்
எங்கிருக்கிறது? அது ஒரு மென்பொருள்; உருவம் கிடையாது. அதை மூன்று அளவீட்டுக் குறியீடுகளாகப் பிரிக்கலாம்:
1. எண்ணங்கள்
(Thoughts)
2. உணர்வுகள்
(Emotions)
3. அறிவாற்றல்
(Intelligence)
இந்த
மூன்றும் இணைந்ததே மனம். இது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து செயல்படும். மூளை எப்படிச் சிந்திக்கவேண்டும்? எப்படி உணர்ச்சிவயப்படவேண்டும்? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? என்று முடிவு செய்வது மனம்தான்.
நம்
மனநலன் மேம்பட்டால் வாழ்க்கைத் தரமும் மேம்படும். பழையது என்பதற்காக மட்டுமே அது சரியானது என்று ஏற்றுக்கொள்வது ஒரு மனநிலை; இல்லை, அதில் உள்ள குறைகளைக் களைந்து புது வழியில் பயணிக்க வேண்டும் என்பது பரந்த மனநிலை. இதற்கு அடித்தளமாக இருப்பது தெளிவான சிந்தனை (எண்ணங்கள்), முறையான உணர்வுகள் மற்றும் நல்ல அறிவாற்றல். இவைதான் பரந்துபட்ட சமுதாயத்தை உருவாக்கும்.
மனத்தின்
இந்த மூன்று நிலைகளும் எந்த அளவிற்கு நம்மைத் தனித்துவமாக வடிவமைப்பதில் பங்கெடுக்கின்றன என்பதைப் பற்றி அடுத்த வாரம் காண்போம்.
நிகழ்வுகள்
அல்ல; அவற்றை நாம் புரிந்துகொள்ளும் விதமே நமது உணர்வையும் செயலையும் தீர்மானிக்கிறது.
(தொடர்ந்து பயணிப்போம்)