வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததுதான். தடைகளும் தோல்விகளும் நம் அன்றாட வாழ்வில் சந்திப்பவைதான், சந்திக்க வேண்டியவைதான். ஆனால், இந்தச் சவால்களையும் தடைகளையும் நம்மால் இன்று நிச்சயமாகச் சந்திக்க முடியும்; வெற்றிபெற முடியும்.
இன்றைய
இளைய தலைமுறைக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் ஏராளம். நல்ல உடல் நலம், ஏராளமான கல்வி
வாய்ப்புகள். ஏழைகள்கூடத் தன்னம்பிக்கையோடு படித்து உழைத்து முன்னேறும் வாய்ப்புகள்
எனப் பல வாய்ப்புகள் உள்ளன.
நல்ல
கல்வியையும் திறமையையும் வளர்த்துக்கொண்டுவிட்டால், நம் உள்ளூரில் மட்டுமல்ல, உலகெங்கும்
நம் திறமைக்குச் சவால்விடும் வாய்ப்புகள் உண்டு. ஒரு காலத்தில் நினைத்தே பார்க்க முடியாத
ஊதியம், வாழ்க்கைத்தரம் உயரும். நம்மைப்போல் நம்மைச்சுற்றி வாழ்ந்து வளர்ந்த பலரும்
பல உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக மாறி இருக்கிறார்கள். சென்னையில் பயின்ற
சுந்தர் பிச்சைதான் இன்று ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக
இருக்கிறார்.
சொந்தக்
காலில் நிற்கவேண்டுமா? அதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. உயர் தொழில்நுட்பத் துறைகளில்
இன்று புதிய புதிய தொழில் முனைவோர்களை நாம் பார்க்க முடிகிறதே! நம்மாலும் இப்படியெல்லாம்
முன்னேற முடியாதா? வெற்றிபெற முடியாதா? நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைசேர்க்க
முடியாதா?
முடியும்...
நிச்சயம் முடியும்! ஆனால், ஒன்று; அது நம் கையில்தான் இருக்கிறது. நம் சிந்தனையில்,
சொல்லில், செயல்திறனில்தான் இருக்கிறது.
எந்த
அளவுக்கு வாழ்க்கையில் உயரவேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும். அதை அடையும்
முயற்சிகளையும் நாம்தான் மேற்கொள்ளவேண்டும். தடைகளைக் கடந்து, எதிர்வரும் சவால்களைச்
சமாளித்து உயரவேண்டும். மேலே, மேலே... இன்னும் மேலே உயரவேண்டும்.
வாழ்க்கையில்
முன்னேற்றம் என்பது மலையேற்றம் போன்றதுதான். எந்த மலைச்சிகரத்தை எட்டப்போகிறோம் என்பது
நம் கையில்தான் உள்ளது. ஆனால், ஒன்றை நாம் மிக மிக ஆழமாக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
மலையேற்றம் சமவெளியில் நடப்பதைப் போன்றதல்ல.
சமவெளியில்
பலரும் பயணித்த வழித்தடங்களில் நடந்துசெல்வது பாதுகாப்பானது. கொஞ்சம் எச்சரிக்கையாக
இருந்தால் போதும், பயணம் சலனமில்லாமல் ஓடிவிடும். ஆனால், மலையேற்றம் கடினமானது மட்டுமல்ல;
ஆபத்துகள் நிறைந்தது. ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பார்கள்.
முன்னேறுபவர்களின்
வாழ்க்கை பலருடைய கண்களிலும் படுகிறது, நல்லவர்கள் கண்ணிலும் படுகிறது, நம்மை வாரிவிட
நினைப்பவர்களின் கண்களிலும் படுகிறது.
பலர்
பொறாமைப்படக்கூடும். அவர்களில் சிலர் நம்மைத் தடுமாறவைக்க முயலவும் கூடும். இன்னும்
சிலர் நண்பர்கள் போல நடித்து நம்மைப் படுகுழியில் தள்ளிவிட முயற்சிக்கவும் கூடும்.
மற்றவர்களை
விட்டுவிடுங்கள். இன்றைய சந்தைச் சமுதாயத்தில் நாமாகவே மயங்கிச் சரிந்து விழுவதற்கான
மாயவலைகள் ஏராளம்!
ஒரே
ஒரு புகை, ஒரே ஒரு போதைப் பொருள், ஒரே ஒரு பெக் மது, ஒரே ஒரு தேவையற்ற பார்ட்டி, தேவையற்ற
நட்பு, ஒரே ஒரு தேவையற்ற வாட்ஸ் அப் நட்பு, உரையாடல், பாதுகாப்பில்லாத நேரடிச் சந்திப்பு,
நெருக்கம், ஒரே ஒரு தவறான உணவுப் பழக்கம்...!
இத்தகைய
ஆசைகளும் தூண்டில்களும் மோக வலைகளும் நம்மைச் சுற்றி விரிந்து பரந்து கிடக்கின்றன.
இந்த மாயவலைகள் நம் உயரப் பயணத்தைச் சரியவைக்கத் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன.
‘ஒரே
ஒரு முறைதானே’ என்று நம்மில் பலர் ஏமாந்துபோகிறோம்.
ஒரே ஒரு முறை என்பது எப்போதாவது என்ற நிலைக்கு விரைவிலேயே வந்து சேரும். எப்போதாவது
ஒரு சிகரெட், எப்போதாவது அதில் கொஞ்சம் போதைப் பொருள், சிகரெட் பிடிக்கும்போது எப்போதாவது
கொஞ்சம் மது, மது அருந்தும்போது எப்போதாவது ஒரு பார்ட்டி!
நாம்
உயர்வது கடினம். மிக மிகக் கடினம். நம் கடின உழைப்பால், முழு முயற்சியோடு ஒவ்வொரு படியையும்
எடுத்துவைக்கவேண்டும். ஆனால், சரிவது சுலபம். மிக மிகச் சுலபம். நம்மை அறியாமலேயே நாம்
சரிந்து விழுந்துவிட முடியும். மிக மிக வேகமாகச் சரிந்து விழுந்துவிட முடியும்.
‘நான்
ஒரு நாளும் எல்லையை மீறமாட்டேன்’ என்று ஆணவத்தோடு சொல்லிக்கொண்டே பலரும்
சரிந்து சிதைந்து போவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
சிகரத்தில்
ஏறும் ஒருவரை நாம் பெருமிதத்தோடு பார்க்கிறோம்; ஆனால், அன்றாடம் எங்கோ சிக்கிச் சரிந்து
சீரழியும் பலரை நாம் கண்டு கொள்வதில்லை. கண்டு உணர்ந்து திருந்தினால் உயரலாம். இல்லாவிட்டால்
எந்த உயரத்திற்குப் போனாலும் எந்த நிமிடமும் சரியலாம், இரண்டும் நம் கையில்!
மேலே
உயர உயர, சூழ்நிலைகளாலோ, என்னுடைய அகந்தையாலோ நான் சரிந்து விழமாட்டேன்; சுய ஒழுக்கத்தையும்
கட்டுப்பாட்டையும் என்றும் போற்றுவேன்.