‘நம் வாழ்வு’ இதழில் தொடர்ந்து பல உளவியல் கட்டுரைகளைப் படைத்து, வாசகர்கள் உள்ளத்தில் நீங்கா இடம்பிடித்த சேசு சபை அருள்பணியாளர் முனைவர் இம்மானுவேல் ஆரோக்கியம் எனும் எம்மா, கடந்த 07.09.2026 அன்று காலை இறைவனடி சேர்ந்தார் எனும் செய்தி எமக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. தந்தை எம்மாவின் இறுதிப் பயணமும் அடக்கத் திருப்பலியும் சென்னை - இலயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் 08.09.2006 அன்று நடைபெற்றது. ‘நம் வாழ்வு’ வாசகர்கள், எழுத்தாளர்கள், ‘நம் வாழ்வு’ நிர்வாகம் சார்பாக ‘நம் வாழ்வு’ முதன்மை ஆசிரியரும் பணியாளர்களும் அடக்கத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.
இவ்வேளையில்
தந்தை எம்மாவின் குடும்பத்தாருக்கும் குறிப்பாக, அவருடைய உடன் பிறந்த சகோதரர் தந்தை எம்.ஏ. ஜோ அவர்களுக்கும்
‘நம் வாழ்வு’ குடும்பம் தனது ஆழ்ந்த இரங்கலையும் செபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. தந்தை எம்மாவின் ஆன்மா இறைவனில் இளைப்பாற தொடர்ந்து செபிப்போம்.
உளவியல்
ஆற்றுப்படுத்துதல் துறையில், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற தந்தை எம்மா, திருச்சி - தூய வளனார் கல்லூரியில் உளவியல் துறையை நிறுவி, அதன் முதல் துறைத் தலைவராகவும், தொடர்ந்து இறுதி வரை அங்கு உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்மை ஆசிரியர்