போர்களும் மோதல்களும் நிறைந்த உலகில், மேற்கு ஆப்பிரிக்க இளைஞர்கள் அன்பு, நீதி மற்றும் அமைதியின் தூதுவர்களாக வாழவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். கானாவின் அக்ரா நகரில் செப்டம்பர் 7 முதல் 12 வரை நடைபெறும் முதலிடைக்கால மேற்கு ஆப்பிரிக்க இளைஞர் தின மாநாட்டிற்கு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அனுப்பிய வீடியோ செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சந்தேகங்களும் பாதுகாப்பற்ற சூழலும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்தக் காலகட்டத்தில், நம்பிக்கையை இழக்காமல் முன்னேறிச் செல்லவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். “இளைஞர்கள் தியாகம் மேற்கொண்ட முந்தைய தலைமுறை அல்ல; அவர்கள் இறைவனின் மற்றும் திரு அவையின் நிகழ்காலம்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வீணாக நேரத்தைக் கழிப்பதைத் தவிர்த்து, மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபடவேண்டும். மக்களுக்கும், கலாச்சாரங்களுக்கும், சமயங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு, யாருக்கும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட உணர்வு வராதபடி இணைந்து பணியாற்றுங்கள்” என்று வாழ்த்தித் தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.