திருப்பலி முன்னுரை
இறைவனின்
அளவற்ற இரக்கத்தையும், தாராள உள்ளத்தையும் பற்றி சிந்திக்க ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அதிகாலையில் வேலைக்கு வந்தவர்களுக்கும், மாலையில் ஒரு மணிநேரம் மட்டுமே வேலை செய்தவருக்கும் சமமாக ஒரு தெனாரியம் கொடுக்கிறார். மனிதநீதி, வேலையின் அளவிற்கு ஏற்ப கூலி என்று கணக்கிடுகிறது. ஆனால், இறைவனின் நீதியோ ஒவ்வொருவரின் தேவையை நிறைவு செய்யும் அளவற்ற அன்பு கொண்டது. இறைவனின் இரக்கம் அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கும் பேரன்பின் வடிவம்; இவ்வுலகத்தை இயக்கும் பேராற்றல். எனவே, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்படாமல், மற்றவர்களின் வளர்ச்சியை விமர்சிக்காமல் இறைவனின் தாராளக்
கொடையை நன்றியோடு நினைப்போம். நாம் எப்போதும் இறைவனின் இரக்கத்தின் நிழலில் வாழ்கிறோம் என்பதை மனத்தில் இருத்துவோம். பிறருக்குக் கிடைக்கும் ஆசிகளையும், இறைவனின் இரக்கத்தையும் கண்டு மகிழமுடியாத இதயமே ஆன்மிக வறுமையின் அடையாளம். பிறரின் ஆசிகளையும் வளர்ச்சியையும் கண்டு மகிழும் தாராள உள்ளத்தை நமக்குத்தர மன்றாடுவோம். பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்தைத் தவிர்த்து, இறைவனின் இரக்கம் எப்போதும் நம்முடன் இருப்பதற்காய் நன்றி கூறுவோம். அளவிடமுடியாத பெருங்கடல் போன்ற கடவுளின் இரக்கத்தால் வாழும்
நாம் இந்த உலகம் என்னும் இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் மகிழ்வோடு பணிசெய்து, பன்மடங்கு பலன் கொடுக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
ஆண்டவரைக்
கண்டுகொள்ளக்கூடிய வாய்ப்புள்ள காலத்திலேயே அவரைத் தேடவும், அவர் அருகில் இருக்கும்போதே அவரை நோக்கிக் கூப்பிடவும் இறைவாக்கினர் எசாயா நமக்கு அழைப்புவிடுக்கிறார். நமது தீய சிந்தனைகளையும் செயல்களையும் விட்டுவிலகி, ஆண்டவரிடம் திரும்பி வரும்போது நம்மை மன்னிக்கக் காத்துக்
கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைக் கொடுக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
‘வாழ்வது கிறிஸ்து; சாவது ஆதாயம்’ என்ற உறுதியான நம்பிக்கையோடு, தான் வாழ்ந்தாலும் இறந்தாலும் கிறிஸ்துவின் மாட்சி விளங்குவதே தனது ஒரே விருப்பம் என்கிறார் பவுலடியார். கிறிஸ்துவோடு இணைந்து வாழும்போது உறவுகள் வளரும், மகிழ்ச்சி பெருகும், துன்பங்கள் குறையும். எனவே, நாம் ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவராக வாழவும், நல்மதிப்பீடுகளை வாழ்க்கையால் விதைக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் கிறிஸ்துவை மட்டுமே தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களிடம் இரக்கத்தோடும் அன்போடும் இருக்கவும், தங்களை அழைத்த ஆண்டவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தொய்வின்றிப் பயணிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. பாசமுள்ள
ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் தீய வழிகளை விட்டுவிலகி உமது மதிப்பீடுகளின் வழியில் வாழவும், மற்றவர்களின் வளர்ச்சியில் மகிழ்ந்திருக்கவும், உடன் வாழும் சகோதர, சகோதரிகளோடு அமைதியோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. இரக்கத்தின்
ஆண்டவரே, எம் பங்கில் உள்ள குடும்பங்களில் அன்பு, மன்னிப்பு, பகிர்வு, விட்டுக்கொடுத்தல் போன்ற மதிப்பீடுகள் வளரவும், தீராத நோய்கள் விலகிடவும், அருள்செல்வம், பொருள்செல்வம் பெருகிடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. வல்லமையின்
ஆண்டவரே! எம் பங்கிலுள்ள குழந்தைகள் படிப்பிலும் பக்தியிலும் வளர்ந்திடவும், திருப்பலி, மறைக்கல்வி, பீடச்சிறுவர்கள் பணி போன்றவற்றிற்கு
முக்கியத்துவம் கொடுக்கவும், கடவுளைப் பற்றிய அறிவில் வளரவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.