வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம்
என்றுணரற் பாற்று (குறள் 11)
குறள் விளக்கம்:
மழை பெய்வதால், உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
சிந்தனை: அமிழ்தம் என்பது, அழியாது அமரத்துவம் தரவல்லது. அழிவின்மை ‘அமிர்தா’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்த அயற்சொல் ஆகும். பஞ்சம் - பட்டினிச் சாவுக்கு மழையின்மையே முக்கியக் காரணம். பூமியைச் செழிப்பாக்கி வாழ்வளிப்பது மழை என்பதால் அதனை அமரத்துவம் வாய்ந்த அமிழ்தத்திற்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் வள்ளுவர்.
இராஜஸ்தானில்
குஜார் என்ற பழங்குடியினரிடம், “உங்கள் ஊரில் மழை எப்படி?” என்று கேட்டபோது, “நல்ல மழை ஐயா” என்றனர்.
“சென்ற வருடம்?”
“எல்லா வருடமும் நல்ல மழைதான்...”
“அது எப்படி?”
“நல்ல மழை பெய்கிற இடத்திற்குக் குடிபெயர்ந்துவிடும் மாடுகளை மேய்க்கும் நாடோடிகள் நாங்கள் ஐயா” என்றனர்.
மழையை
நாடி மனித வாழ்வு உள்ளது. நீருள்ள இடங்களிலேயே நாகரிகம் பிறந்தது. இதிலிருந்து மழையின் முக்கியத்துவத்தை உணரலாம்.
எசாயா
இறைவாக்கினரும் “மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும், உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்கு திருப்பிச் செல்வதில்லை” (எசா
55:10) என்று குறிப்பிடுகின்றார். இறைவனின்
இருப்பிடமாகிய வானகத்திலிருந்து பொழிவதனால் மழையை இறைவனின் கருணையாகவும் அருளாகவும் எண்ணி வியக்கிறோம்.
‘வானம் எனக்கு
ஒரு போதி மரம்; நாளும் எனக்கு அது சேதி தரும்’ என்று தனது அனுபவத்தை ஒரு கவிஞன் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளான். வானம் ஓர் அற்புதம். அதனை இரவும் பகலும் இரசிப்பதும் ஆராய்வதும் அலாதி இன்பம்!
“இயற்கை மனத்தைச் செம்மைபடுத்தும் திறந்தவெளிப் பள்ளிகள்”
என்பார் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த். அந்த அளவிற்கு ஆச்சரியங்களையும் புதிய சிந்தனைகளையும் தர வல்லது ‘வான்சிறப்பு’ என்ற
இந்த அதிகாரம். மேலும்,
வானகத் தந்தையையும், மாட்சிமிக்க அவரது படைப்புகளையும் வியந்து பார்க்க நம்மைத் தூண்டுகிறது.
“இயற்கை மனிதனது தேவைக்கென்று பல நன்மைகளைத் தருகிறது.
மனிதர் தன் சுயநலத்திற்காக அதைச் சீரழிக்கக்கூடாது” என்கிறார்
காந்தியடிகள்.
இலவசமாக
இயற்கை வழங்கும் இன்பங்களை அனுபவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சுயநலத்திற்காக அதனை மனிதன் அழிக்கிறான். காடுகளை அழித்து மழையைத் தடுக்கிறான். அதனால் பஞ்சத்தையும் பட்டினியையும் வரவழைக்கின்றான்.
படைப்புப்
பொருள்களில் பரமன் இருக்கின்றார். படைப்புப் பொருள்களைப் பார்த்துப் பரம்பொருளை நாம் அறிந்துகொள்ள முடியும் என்கிறது திருமறை.
கொடுத்தல்,
செழிப்பாக்குதல், வாழ்வளித்தல், வளமாக்குதல் போன்ற பல நல்ல காரியங்களை
நாம் இயற்கையிலிருந்து கற்றுக்கொள்வோம்.