ரிமினியில் நடைபெற்ற 47-வது ‘மக்களிடையேயான நட்புறவு மாநாட்டில்’ பங்கேற்ற பிறகு, பேராலயத்திற்குச் சென்ற திருத்தந்தை லியோ, அங்கிருந்த நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ‘கரித்தாஸ்’ (Caritas) அமைப்பினால் பராமரிக்கப்படும் ஏழை எளிய மக்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது திருத்தந்தை அவர்களிடம், “இயேசு நோயுற்றோரையும், ஏழைகளையும், மாற்றுத்திறனாளிகளையும் அரவணைத்து, அவர்களுக்குக் குணமளித்து, மாண்பு நிறைந்த கண்ணியமான வாழ்வை மீட்டுக்கொடுத்தார். எனவே, இறைவனின் இல்லமாகிய இந்தப் பேராலயத்தில் நீங்கள் உங்கள் சொந்த இல்லத்தில் இருப்பதுபோல உணருங்கள்” என்று ஆறுதல் கூறினார். மேலும், இறைவனின் இரக்கத்தையும் அன்பையும் பெற்றுக்கொண்ட நாம் அனைவரும் திரு அவையின் செயல்பாடுகளில் இணைந்து பயணிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ரிமினி மறைமாவட்ட ஆயர் நிகோலோ அன்செல்மி திருத்தந்தையை வரவேற்றுப் பேசுகையில், இப்பகுதியில் இயங்கும் கரித்தாஸ் அமைப்பு உணவுக்கூடம், சிறைச்சாலைச் சேவை மற்றும் தெருவோர உதவிகள் மூலம் மிகவும் நலிவடைந்த மக்களுக்குச் சேவை செய்து வருவதைச் சுட்டிக்காட்டினார். நோயினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களுக்கு ஆதரவளிக்கும் திருத்தந்தையின் மேய்ப்புப்பணிக்குத் தங்களின் ஆதரவை வழங்குவதாகவும் ஆயர் உறுதியளித்தார்.