news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு (27.09.2026) எசே 18:25-28; பிலிப் 2:1-11; மத் 21:28-31

திருப்பலி முன்னுரை

மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள தோட்டத்திற்கு வேலை செய்ய அனுப்பப்படும் இரு மகன்களின் உவமையில்போகமாட்டேன்என்று முதலில் மறுத்து, பின்னர் மனம்மாறிச் சென்று வேலை செய்த முதல் மகனைப்போல, நாமும் பல நேரங்களில் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியத் தவறியிருக்கலாம்; ஆனால், நமது பாவங்களையும் தவறுகளையும் உணர்ந்து, உண்மையான மனமாற்றத்தோடு அவரிடம் திரும்பி வரும்போது கடவுள் நம்மை அன்போடு அரவணைத்துக்கொள்வார்.

வெறும் வார்த்தைகளால் அல்லாமல், வாழ்வால் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதே சீடத்துவம். ‘போகிறேன்என்று சொல்லிவிட்டுப் போகாத இரண்டாம் மகனைப்போல, நமது நம்பிக்கை வெறும் உதட்டளவிலான பேச்சாக மட்டும் நின்றுவிடக் கூடாது; நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவேண்டும். திருமண நாளிலும், துறவற அர்ப்பண நாளிலும் ஆண்டவர்முன் வார்த்தைப்பாடுகளைக் கொடுக்கின்றோம். கொடுத்த வார்த்தைப்பாடுகளைப் பின்பற்றுகிறோமா? குறையில்லாத மனிதர் இல்லை; எனவே, குறைகளைக் குறைத்து, உண்மையான மனமாற்றம் அடைந்து  இயேசுவின் உண்மையான சீடர்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில், எசேக்கியேல் இறைவாக்கினர்  இறைவனின் நீதி மனிதரின் கணிப்பைக் காட்டிலும் எவ்வளவு மேலானது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். ஒரு பாவி தான் செய்துவந்த தீமையிலிருந்து விலகி மனம்மாறி, நேர்மையோடும் நீதியோடும் வாழ்ந்தால் அவர் நிச்சயம் வாழ்வார் என்று கூறி, மனமாற்றம் பெற்று நல்மனிதர்களாக வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

வீண்பெருமைக்கும் பகட்டான வாழ்விற்கும் சுயநலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், மனத்தாழ்மை உள்ளவர்களாய் வாழவும், மற்றவர்களைப் பற்றிய நமது எண்ணங்கள் உயர்வானதாக இருக்கவும், இயேசுவைப் போன்று தாழ்ச்சியுள்ளவர்களாய் வாழவும், பிறருக்கு உதவி செய்வதில் கருத்தாய் இருக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவரும் இயேசுவின் மனநிலையைக் கொண்டு வாழவும், சொற்களைவிட செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிறப்பாகப் பணி செய்யவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கமுள்ள இறைவா! ‘போகிறேன்என்று கூறிவிட்டு வேலைக்குச் செல்லாத இரண்டாவது மகனைப்போல, உதட்டளவில் பேசும் வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல், எங்களது பாவநிலையை உணர்ந்து, உமது திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்களைப் பற்றி பெருமை பாராட்டுவதில் முனைப்பாக இல்லாமல், மற்றவர்களைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டவர்களாக, கிறிஸ்துவைப் போன்று தாழ்ச்சியும் தூய்மையான இதயமும் கொண்டு  வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கத்தின் இறைவா! எம் நாட்டிலும், எமது குடும்பங்களிலும் பல்வேறு கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுத்  துன்பப்படும் எம் சகோதர- சகோதரிகளுக்கு நிறைவான சுகத்தையும், அந்த நோயினின்று விடுதலையையும், மனவலிமையையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.