மானுட சமுதாயம் முழுமைக்கும் இன்றியமையாத ஆகப் பெரிய தேவையாக இருப்பது அன்பு மட்டுமே. மனித மனம் இயல்பாகவே அன்பிற்காக ஏங்குகிறது; அன்பை நாடியே ஓடுகிறது. குடும்பத்திலும் சமூகத்திலும் இணக்கத்தையும் அமைதியையும் பேரின்பத்தையும் உருவாக்கும் ஒரே உன்னதமான சக்தி அன்புதான் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால், நாம் அனைவரும் பேராவலோடு எதிர்பார்க்கும் அந்தப் புனிதமான அன்பு, நடைமுறையில் எப்படி வெளிப்படுகிறது? அது நேர்மறையான அரவணைப்பாக, பாதுகாப்பாக, அர்ப்பணிப்பாக வெளிப்படுவதற்குப் பதிலாக, கட்டுப்பாடு, சுயசிந்தனையற்ற கீழ்ப்படிதல், அதிகார மேலாதிக்கம் போன்ற வடிவங்களிலேயே பெரும்பாலான குடும்பங்களிலும் சமூகக் கட்டமைப்புகளிலும் அரங்கேறுகிறது.
சங்க
இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெறும் ஒரு பாடல் தலைவன்-தலைவியின் மனப் பொருத்தத்தையும் பிரிக்க முடியாத காதலையும் மிக அழகாக எடுத்துக்கூறும். ‘கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டது’ என்று
கூறுவதுபோல, ஒரு தலைவனுக்கும் தலைவிக்குமிடையே எதிர்பாராத சந்திப்பின்பால் காதல் மலர்ந்தது. இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் கண்டதும் காதல் ஏற்பட்டதால் தலைவிக்குத் தலைவன் மேல் ஐயம் ஏற்படுகிறது. ‘எங்கே இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானோ?’ என்ற பயம்தான் அது. தலைவியின் முகத்தில் ‘சட்’டெனத் தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடு சேர்ந்த நீரை எப்படிப் பிரிக்கமுடியாதோ, அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியால் தலைவியை நோக்கிப் பாடுகிறான்.
‘யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும்
நுந்தையும் எம்முறை கேளிர்
யானும்
நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்
பெயல்நீர் போல
அன்புடை
நெஞ்சம் தாம்கலந் தனவே!’
(குறுந்தொகை
- 40).
இப்படியாகக்
காதலை உன்னதப்படுத்தியது நம் சமூகம். ஆனால், இன்றைய வாழ்க்கைப் பயணத்தில் பல தம்பதியரின் மனங்களுக்குள்
ஒரு கேள்வி நிழலாடிக்கொண்டே இருக்கிறது. ‘தொடக்கத்தில் தேவதையாகக் கொண்டாடிய மனைவியை இன்று கண்டாலே ஏன் ஓடத் தோன்றுகிறது?’ அல்லது ‘உயிருக்கு உயிராக நேசித்த கணவன்மீது இன்று ஏன் வெறுப்பு மேலிடுகிறது?’ என்ற சுய அலசல்கள் மனித இயல்புதான். சில அசாதாரண மனிதர்களைத் தவிர்த்துப் பார்த்தால், யாரும் வேண்டுமென்றே பிறரை நிராகரிப்பதில்லை.
அன்பு
என்பது தாய்மையின் பாலைப் போலத் தானாகவே கசியவேண்டிய ஓர் இயற்கை உணர்வு. வறண்டுபோன பசுவின் மடியில் வலுக்கட்டாயமாகக் கறந்து பாலை எடுக்க முடியாதல்லவா! அதேபோலத்தான் வற்றிப்போன மனங்களில் வற்புறுத்தி அன்பைப் பிழிந்தெடுக்க முடியாது. அதுவாகவே சுரந்து பொங்கும் உணர்வே நிலையானது. ‘ஒரு தாய் தன் குழந்தையின் குறைகளையும் ஏற்றுக்கொண்டு நேசிப்பதைப் போலத்தானே நானும் நேசிக்கிறேன்! பின் ஏன் என் துணைக்கு என்மீதான அன்பு வற்றுகிறது?’ என்று மனங்களுக்குள் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் எழலாம்.
ஆண்-பெண் உறவுக்குள் விரிசல்கள் ஏற்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. நேரமின்மை, சந்தேகப் புயல், அளவுக்கு அதிகமான தலையீடு, தன்னுடைய இலட்சியப் பயணத்தில் மூழ்கித் துணையை மறப்பது, ஈர்ப்பும் மோகமும் காலப்போக்கில் குறைவது, மூன்றாம் நபரின் தூண்டுதல் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஆனால், இவை அனைத்தையும்விட உறவை மெல்ல மெல்லக் கொல்லும் மிக முக்கியக் காரணி எது தெரியுமா? அதுதான் எல்லை மீறிய ‘உடைமை உணர்வும்’
(Possessiveness) பொறாமையும்.
நுட்பமாக
ஆராய்ந்து பார்த்தால், இந்த ‘உடைமை உணர்வு’ என்பது துணைவன் அல்லது துணைவியின் மீதுள்ள அதீத அன்பினால் ஏற்படுவது அல்ல; மாறாக, நம் துணையோடு பழகும் மற்றுமொரு நபர்மீது நமக்குள்ளேயே அறியாமல் பிறக்கும் பொறாமை உணர்ச்சியே இதன் முதன்மை மூலக்காரணம். ‘நீ எனக்கு மட்டுமே
சொந்தம்’ என்ற
வரியைக் கவிதைகளில் அழகாகப் படித்திருப்போம்; ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இந்த உடைமைப்போக்கு ஒரு கொடூரமான நஞ்சாக மாறுகிறது.
துணையின்
ஒவ்வொரு தொலைப்பேசி அழைப்பையும் கண்காணிப்பது, அவர்களின் தனிப்பட்ட நட்புகளைத் துண்டிப்பது, அவர்களின் வளர்ச்சியைக்கூட ஓர் அச்சுறுத்தலாகப் பார்ப்பது என இது பல
முகங்களை எடுக்கிறது. ‘நான் உன்னை அதிகமாக நேசிப்பதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்று
பாசத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படும் இந்த உடைமை உணர்வு, உண்மையில் எதிராளியின் சுயமரியாதையை ஒடுக்கும் ஓர் உளவியல் வன்முறை.
இந்த
எல்லை மீறிய ஆதிக்க உணர்வால் உறவுக்குள் என்ன நிகழ்கிறது? முதலில் நம்பிக்கை உடைந்து, பயமும் சந்தேகமும் குடியேறுகின்றன. தொடர்ந்து கண்காணிக்கப்படும் துணை, தன் சுதந்திரம் பறிக்கப்படுவதை உணர்ந்து மனஅழுத்தத்திற்கும் மூச்சுத்திணறலுக்கும் ஆளாகிறார். வெளிப்படையான உரையாடல்கள் மறைந்து, பொய்களும் விலகல்களுமே மிஞ்சுகின்றன. அன்பு இருக்கவேண்டிய இடத்தில் அதிகாரமும், பாதுகாப்பு இருக்கவேண்டிய இடத்தில் சிறைவாசமும் உருவாகும்போது, அந்த உறவு தன் உயிரை இழந்துவிடுகிறது.
உளவியலாளர்
எரிக் ஃப்ரொம் (Erich Fromm) தனது
‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’
(The Art of Loving) நூலில்
ஒரு சுவாரசியமான கருத்தைக் குறிப்பிடுவார்: “பெரும்பாலான மனிதர்கள் அன்பை எப்படிப் பெறுவது என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்களே தவிர, அன்பு செலுத்தும் தகுதியை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதை யோசிப்பதே இல்லை.” நாம் அன்பாகக் கருதும் பெரும்பாலான உணர்வுகள், உண்மையில் எதிராளியைக் கட்டுப்படுத்தித் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கும் ஒருவகை சுயநலமே.
‘ப்ரோக்ரஸ்டியன் படுக்கை’
(Procrustean bed)
என்றொரு கிரேக்கத்தொன்மம் உண்டு. ஃப்ரோக்ரஸ் டீஸ் என்பவன் தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை ஓர் இரும்புப் படுக்கையில் படுக்க வைப்பான். அந்தப் படுக்கையைவிட மனிதன் நீளமாக இருந்தால் அவனது கால்களை வெட்டிச் சிறிதாக்குவான்; படுக்கையைவிடக் குட்டையாக இருந்தால் அவனது உடலை இழுத்து நீட்டுவான். இன்றைக்கு அன்பு என்ற பெயரில் குடும்பங்களும் சமூகமும் நமக்கும் இதைத்தானே செய்கின்றன!அவர்களின் அளவுகோலுக்குள் நாம் அடங்கவேண்டும் என்பதற்காக நம் விருப்பங்களையும் அடையாளங்களையும் வெட்டிச் சுருக்குகிறார்கள்.
அப்படியென்றால்,
உண்மையான அன்பு என்பது என்ன? அன்பு என்பது பிணைப்பதல்ல; விடுவிப்பது. அது ஒரு பறவையைத் தன் கைகளில் இறுக்கமாகப் பிடித்து வைப்பதில் இல்லை; மாறாக, அதற்குப் பரந்த வானத்தைக் காட்டிப் பறக்கவிட்டு, அது தன் சுயவிருப்பத்தோடு உங்களிடம் திரும்பி வரும் சுதந்திரத்தைக் கொடுப்பதில் இருக்கிறது. உண்மையான அன்பு என்பது எந்த நிபந்தனையுமற்றது. ‘நீ என் விருப்பப்படி
நடந்தால் உன்னை நேசிப்பேன்’ என்பது
வியாபாரமே தவிர, அன்பல்ல!
உண்மையான
அன்பு என்பது எதிரிலிருக்கும் மனிதரை அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரது பலங்கள் மற்றும் பலவீனங்களோடு ஏற்றுக்கொள்வது. அவரின் தனித்துவத்தைக் கொண்டாடுவது. ஒருவரின் வளர்ச்சிக்கோ அல்லது சுயசிந்தனைக்கோ தடையாய் இருக்காமல், அவர் தன் முழுத்திறனையும் அடைய ஊக்கமளிக்கும் ஒரு வளமான நிலமாக மாறுவதே உண்மையான அன்பு. எங்கே பயமும் சந்தேகமும் ஆதிக்கமும் இல்லையோ, அங்கேதான் அன்பு முளைவிடும்.
நாம்
இதுவரை அன்பைப் பற்றி வளர்த்துக்கொண்ட பிம்பங்கள் அனைத்தும் ஒரு மாயையே. மற்றவர்களை நம் விருப்பப்படி ஆட்டுவிப்பது பாசம் என்றும், அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்பு என்றும் எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஆனால், உண்மையான அன்பு என்பது அதிகாரத்தைச் செலுத்துவது அல்ல; அடுத்தவரின் சுதந்திரத்தைக் கொண்டாடுவது! ஆனால், கட்டுப்பாடுகளால் சிறைப்பிடிப்பதல்ல; நிபந்தனைகளன்றிப் பிறரை முழுமையாகத் தழுவிக்கொள்வது! ஆனால், சுயநலத்தால் ஆட்கொள்வதல்ல; எதிரிலிருப்பவரின் சுயத்தை உயர்த்திப்பிடித்து அழகுபார்ப்பது!
(பயணம் தொடரும்...)