தமிழ்நாடு சட்டசபையின் ஒருநாள் செலவு என்னவாகும்? முதல் அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்படி, சட்டமன்றச் செயலக ஊழியர் ஊதியங்கள், காவல்துறை பாதுகாப்பு, சட்டமன்ற குளிர்சாதன மின் கட்டணம், அரசுத்துறை செயலளர்களின் பிற அலுவலகப்படி, உறுப்பினர் கேள்விகளுக்குப் பதில் பெறும் அதிகாரிகளுக்கான செலவு, கேண்டீன் என தினம் தோராயமாக ரூபாய் ஒரு கோடி செலவிடப்படுகிறது.
‘மக்கள்
வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றம் மக்கள் பிரச்சினைகளைப் பேசும் மன்றமாக இருக்கிறதா?’ என்பதே அடிப்படைக் கேள்வியாகும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பேசாமல், தினம் அரசியல் பேச்சுகளே அதிகமாக உள்ளன. அவைத் தலைவர் நடுநிலையாக நடந்து கொள்வதாலும், நேரடி ஒளிபரப்பு நடப்பதாலும் மேலதிகக் கலவரங்கள் தவிர்க்கப்படுகின்றன.
தமிழ்நாடு
சட்டமன்றம் வெஸ்ட் மினிஸ்டர் மரபின்படி, பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. முக்கியமாக, கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், கவனஈர்ப்புத் தீர்மானங்கள் என்ற அடிப்படையை அடக்கியதாகும். சட்டமன்றத் தலைவர் சட்டமன்ற விதிகளின்படி சட்டமன்றத்தை நடத்துவார். சட்டமன்றத்தில் அவருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் தலையிட முடியாத அதிகபட்ச அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.
1921-இல் சென்னை
மாகாண சட்டசபை தொடங்கப்பட்டது. அது 1952 முதல் தமிழ்நாடு சட்ட சபையாகத் தொடர்கிறது. எல்லாக் காலங்களிலும் சட்டசபை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனல் பறக்கும்.
கேள்வி-பதில்களால் கொதிக்கும். மக்கள் பிரச்சினைகள் அலசப்படும். சில நேரங்களில் அரசியல் வரும்; அது தவிர்க்க இயலாதது. ஆனால், இன்று மக்களின் விலைவாசி உயர்வு உட்பட்ட எந்தப் பிரச்சினையும் பேசப்படவில்லை! எல்லா நேரமும் அரசியல்
கூச்சல், குழப்பம்.
அவைத்
தலைவர் ஐம்பது முறை எழுந்து நின்று உறுப்பினர்களை உட்கார வைக்கிறார். தினம் பத்து முறை சட்டமன்ற மரபுகள் குறித்து வகுப்பு எடுக்கிறார். தன்னைச் சமன்படுத்திகொள்ள ஏதாவது சொல்லிச் சிரிக்கிறார். ஒவ்வொரு நொடியும் வார்த்தைக்கு வார்த்தை கூர்ந்து கவனிக்கிறார். சில வேளையில் சலசலப்புகள் அதிகமானால், ‘எனது அறையில் அமர்ந்து பார்த்து முடிவெடுக்கிறேன்’ என
விளக்கம் தருகிறார்.
சட்டசபையில்
எதிர்க்கட்சியினரின் பேச்சுகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கம். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பேச்சு சில நேரங்களில் நீக்கப்படும். இன்றோ அமைச்சர்களின் பேச்சு அதிகமாக அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன. ஆனால், அவை நேரடி ஒளிபரப்பில் மக்களிடம் சென்றுவிடுகின்றன. சபை நடவடிக்கைகள் ‘ரீல்ஸ்’ ஆக மாற்றப்படுவது, வேண்டிய பகுதிக்காக
வெட்டி ஒட்டுவது என வகை தொகையில்லாமல்
சட்டசபை மரபுகள் மீறப்படுகின்றன. முதல்வரோ 110 விதிகளின் கீழ் விவாதிக்க முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு, அமைதியாக அமர்ந்து விடுகிறார். அமைச்சராகி 100 நாள்களாகியும்
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல் வரிசை ஐந்து அமைச்சர்களே பதில் தருகிறார்கள். இது வாக்களித்த மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகும்.
சட்டமன்றம் குறித்த நமது
கருத்துரை வரையறுக்கப்பட்டது என்பதால் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் அவர்கள் வருத்தத்துடனும் ஆவேசத்துடனும் சட்டமன்றத்தில் பேசிய வரிகளைக் காண்போம்: “அவையில் மானியக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்படாமல், தொடர்ந்து அரசியல் சண்டைகள் நடக்கின்றன. சட்டமன்ற நேரலையைப் பார்க்கும் பொதுமக்கள்கூட அதிருப்தி அடைந்து, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இது சட்டமன்றமா? சண்டைமன்றமா? ஓர் அமைச்சர் (பெயரைக் குறிப்பிடுகிறார்) எழுந்தாலே சண்டை ஆரம்பமாகிவிடுகிறது; இதனால் பல மணி நேரம்
வீணாகி விடுகிறது. எனவே, இதைத் தவிர்த்து அனைத்து உறுப்பினர்களுக்கும்
பேச சமவாய்ப்பு வழங்கவேண்டும்” என்றார்.
தமிழ்நாடு
சட்டசபை ‘பிக்பாஸ்’
நிகழ்ச்சிபோல உருப்பெற்றுள்ளதாகக் கருத்துகள் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. மூன்று அமைச்சர்களோடு அவை முன்னவரும், கடந்த காலம் 75 வருடங்கள் எனப் பேசி வம்பு இழுத்து விடுகிறார்கள். பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் பேசிய உதாரணத்தை ஆளுங்கட்சியினருக்கு நினைவூட்டுவது சாலச் சிறந்ததாகும்.
1957-1962 காங்கிரஸ் ஆளுங்கட்சியாகவும்,
தி.மு.க. எதிர்க்கட்சியாகவும்
இருந்த காலமது. ஆளும் காங்கிரஸ் கட்சியினர் ‘தி.மு.க.விற்கு ஆட்சி நிர்வாகம் எதுவும் தெரியாது’ என்றார்கள்.
அண்ணா சொன்னார், “இரண்டு கரண்டிகள் இருக்கிறது; ஒரு கரண்டி சாதாரண கரண்டி; எப்படி வேண்டுமானாலும் சுற்றலாம்; இன்னொரு கரண்டி எண்ணெய் நிரம்பிய கரண்டி; அதை எப்படி வேண்டுமானாலும் சுற்ற முடியாது. அதுபோல எதிர்க்கட்சி என்பது
வெறும் கரண்டி. எதையும் பேசலாம், கேட்கலாம். ஆளுங்கட்சி என்பது எண்ணெய் உள்ள கரண்டி. உங்கள் கையில் அதிகாரம் என்ற எண்ணெய் உள்ளது. நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும், போடும் ஒவ்வொரு திட்டமும் பார்த்துப் பக்குவமாக இருக்க வேண்டும். பக்குவமின்றிக் கரண்டியைச் சுற்றினால் நீங்கள் சிந்துவது எண்ணெய் அல்ல; மக்களின் நம்பிக்கை”
என்றார்.
அடுத்து
கேள்வி நேரம் குறித்துப் பார்ப்போம். தினமும் சட்டசபை தொடங்கியவுடன் கேள்வி நேரம் ஆரம்பமாகும். உறுப்பினர்களின் கேள்விக்குத் துறை அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தமிழ்நாடு அரசின் அடிப்படை, அலுவலக நடைமுறை தெரிந்தோருக்குத் தெரியும். சட்டமன்றம் நடக்கும் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அரசு அலுவலர் தன் அலுவலகத்தைத் தகுந்த முன்னேற்பாட்டுடன் வைத்திருப்பார். புதிய சட்டமன்றத்தில் கேள்வி நேரம் இல்லை என்றபோது, ‘ஏன் இல்லை?’ என எதிர்க்கேள்வி வைக்கப்பட்டது.
அரசின்
துறைகளுக்கு அனுப்பிய சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு 23% அளவில்தான் பதில்கள்
வந்திருக்கின்றன. சட்டசபையில்
அவைத் தலைவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சிறப்புக் கவனம் எடுத்து, துறை ரீதியான பதில்கள் தரவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு
சட்டசபை வரவு-செலவுத் திட்ட கூட்டத் தொடர் முடியும் பத்து நாள்களுக்கு முன்பு 2026, ஆகஸ்டு 27 அன்று முதல் கேள்வி நேரம் தொடங்கியது. வழக்கமாக எடுத்துக்கொள்ளப்படும் பத்து கேள்விகளுக்குப் பதில் ஐந்து கேள்விகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிலும் அவைத் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் வாக்குவாதம். ‘அவையின் செயல்பாட்டு நேரத்தில் குறிப்புகள் எடுக்க, நிர்வாகத் துறைச் செயலாளர்கள், அவையின் முகப்பில் நேரடியாக இல்லையே’ என்பதாகும். புதிய ஆட்சி என்பதால் அதிகாரிகள் கேள்விகளுக்குப் பதில் அனுப்புவதிலும், அவைக்கு வந்து துறை சார்ந்த கேட்புக் குறிப்புகள் எடுப்பதிலும் மெத்தனம் காட்டுகிறார்கள் என்ற ஐயப்பாடு எழுகிறது.
1960-1980-களில் சட்டமன்றக்
கூட்டத் தொடர் ஆண்டிற்கு 60 முதல்
80 நாள்கள் நடக்கும். தற்போதைய ஆண்டுகளில் 30 முதல் 35 நாள்களே சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கிறது. குறைந்த நாள்களில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு குறித்துப் பேச நேரமில்லை. மேகதாது, பரந்தூர் குறித்த விரிவான விவாதங்கள், ஆக்கப்பூர்வமாகச் சட்டமன்றத்தில் நடைபெறவில்லை. புதிய உறுப்பினர்கள் மரபை மதிக்காமல் வெறுப்பு அரசியலை விதைப்பது, மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் சட்டசபையை அரசியல்
பொதுக்கூட்டமாக மாற்றுவது, சிறந்த சட்டசபை மரபல்ல; மாண்பிற்குரிய செயலும் அல்ல.
அது அவர்களுக்கு மரியாதையைத் தராது. ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், இவற்றைச் சுட்டிக்காட்டுவது
நம் தார்மிகக் கடமையாகும்.