news-details
தலையங்கம்
தலைமுறைகளைச் செதுக்கும் சிற்பிகள்! சவால்களைச் சந்திக்கும் ஆசிரியர் சமூகம்!

குலன், அருள், தெய்வம் கொள்கை, மேன்மை,

கலை பயில் தெளிவு, கட்டுரை வன்மை;

நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்;

உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்

அமைபவன் நூல் உரை ஆசிரி யன்னே 

என்கிறது பவணந்தி முனிவரின் நன்னூல். ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதை மிகவும் விரிவாக விளக்கும் நன்னூல் - நற்குடிப் பிறப்பு, அருள், தெய்வக்கொள்கை, உயர்குணம், நூல்களைக் கற்றுத் தெளிதல், தெளிவுறப் பேசும் வல்லமை, நிலம், மலை, தராசு, மலர் ஆகிய நான்கையும் போன்ற தன்மைகளும், உலகியல் அறிவும் உடையவரே நல்லாசிரியர் என ஆசிரியருக்கான வரைவிலக்கணம் தருகிறது.

அதாவது, தன் பொறுமையால் மாணவனின் அறியாமையைப் பொறுத்து, கல்வி எனும் விளைச்சலைத் தரும் நிலம் போன்றவராகவும், அளப்பரிய அறிவும், தோற்கடிக்க முடியாத மாண்பும் கொண்ட மலை போன்றவராகவும், எந்தப் பக்கமும் சாயாமல், மாணவர்களிடம் நடுநிலைமையோடு நடந்துகொள்ளும் நிறைகோல் (தராசு) போன்றவராகவும், முகமலர்ச்சியோடு, மலர் போன்று மென்மையாகவும் இனிமையாகவும் கல்வியைக் கற்பிப்பவராகவும் ஆசிரியர் இருக்கவேண்டும் எனவும் தெளிவுபடுத்துகிறார் பவணந்தி முனிவர்.

அவ்வாறே, ‘மாதா, பிதா, குரு, தெய்வம்என்ற பண்பாட்டு வரிசையில், இறைவனுக்கு இணையாக ஆசிரியரை வைத்துப் போற்றிய பூமி இது. தமிழ்க் கலாச்சாரத்தில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த மரியாதை குறிப்பிடத்தக்கது. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்என்ற அதிவீரராம பாண்டியனின் நறுந்தொகை கூற்றும், ‘ஒருவனுக்குப் பகுத்தறிவை ஊட்டி, அவனை முழு மனிதனாகச் செதுக்கும் சிற்பியே ஆசிரியர்என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனையும் இந்தியச் சமூகத்தின் அடித்தளமாக இன்றும் என்றும் விளங்குகின்றன. மருத்துவர், பொறியாளர், ஆட்சியாளர், விஞ்ஞானி எனச் சமூகத்தின்ஆயிரம் பணிகளையும்உருவாக்கும் தாய், நாற்றங்கால், உற்பத்தி மையம்தான் அறம் நிறைந்த  இந்த ஆசிரியர் பணி! எனவேதான்,

குருவாய் வந்து குணம்பல பரப்பி

பெருமை காட்டிய பெரியோன் போற்றி!’ 

என இப்பணிக்கு இறைவனே மானுட வடிவில் ஆசிரியராக (குருவாக) வந்து மெய்யறிவைப் புகட்டுகிறான் என்கிறது மாணிக்கவாசகரின் திருவாசகம். அவ்வாறே, ‘புரட்சிக்கவிபாரதிதாசனும் ஆசிரியப்பணியின் மேன்மையினைக் குறிப்பிடும்போது,

அறியாமை இருளகற்றும் அறிவின் விளக்கு!

மனிதனை மனிதனாக்கும் புனிதப் பணி!’

என்கிறார். ஆனால், இன்றைய 21-ஆம் நூற்றாண்டின் நவீனத் தொழில்நுட்ப உலகில், இத்தகைய புனிதமான ஆசிரியர் பணி எத்தகைய சவால்களைச் சந்திக்கிறது என்பதை ஊரறியும், நாடறியும், ஏன் உலகமே அறியும். தடம் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையும், பலவீனப்பட்டு வரும் வகுப்பறைச் சூழலும் நம் சமூகத்திற்கு உணர்த்தும் அவல நிலையும், அவை விடுக்கும் எச்சரிக்கை மணியோசையும் கூர்ந்து கவனிக்கத்தக்கதே!

இன்றைய குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உலகத்தைச் சமூக ஊடகங்களும், .டி.டி. (OTT) தளங்களும், திரையரங்க வன்முறைச் சித்தரிப்புகளும் முற்றிலுமாக ஆக்கிரமித்துவிட்டன. திரைப்பட வன்முறையின் எதிர்மறைத் தாக்கம் உச்சம் தொட்டுவிட்டது. அண்மைக்காலமாகத் திரையில் காட்டப்படும் அதீத வன்முறைகளும், போதைப்பொருள் கலாச்சாரத்தை முதன்மைப்படுத்தும் கதாநாயகப் பிம்பங்களும் மாணவர்களின் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கின்றன. வன்முறையை ஒருகெத்துஎனவும், அதை வாழ்வியல் அடையாளமாகவும், ஓர் அணுகுமுறையாகவும் கருதும் ஆபத்தான மனநிலை இன்று அவர்களிடம் உருவெடுத்துள்ளது என்கின்றனர் உளவியலாளர்கள்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள், ஆன்லைன் விளையாட்டுகள் போன்ற சமூக ஊடகங்களால் அவர்கள் பெரிதும் கவரப்பட்டுள்ளனர். இவையே மாணவர்களின் கவனச் சிதறலுக்கு முக்கியக் காரணியாக அமைகின்றன. இதனால் வகுப்பறையில் ஆசிரியரின் உரைகளைக் கூர்ந்து கவனிக்கும் பொறுமை பெருமளவில் இன்று குறைந்துவிட்டது. ‘சுதந்திரம்என்ற பெயரில் பெரியோரையும், கற்றுக்கொடுக்கும் குருவையும் மதிக்கும் பண்பாடு சீர்குலைந்து வருகிறது.

தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் தனியார் பள்ளித் தலைமை ஆசிரியை ரூபா ரெட்டி என்பவர், தனது சொந்தப் பள்ளி மாணவர்களாலேயே பணத்திற்காக அண்மையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. அறிவு புகட்டும் ஆசிரியருக்கே வகுப்பறையிலும் வளாகத்திலும் பாதுகாப்பு இல்லாத ஓர் அவலநிலை இன்று உருவாவது, நமது சமூகச் சீரழிவின் உச்சக்கட்ட எச்சரிக்கையாகும்.

ஆசிரியர்களின் பணிச்சூழல் மற்றும் பற்றாக்குறை குறித்து யுனெஸ்கோ (UNESCO) மற்றும்ஆசிரியர்களுக்கான சர்வதேச பணிக்குழுவெளியிட்டுள்ள அண்மைக்கால உலகளாவிய அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வருகின்ற 2030-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் சுமார் 4 கோடியே 40 இலட்சம் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், 2015-ஆம் ஆண்டில் 4.62 விழுக்காடாக இருந்த உலகளாவிய ஆசிரியர் விலகல் வீதம், 2022-இல் 9.06 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும், பணியில் சேர்ந்த முதல் 5 ஆண்டுகளிலேயே பலர் மன உளைச்சல் மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக விலகுகின்றனர் என்ற செய்தியும் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதுபோல, ஆசிரியர்களுக்குப் போதிய ஊதியமின்மை, பணிப் பாதுகாப்பு இல்லாமை, அதிகப்படியான நிர்வாகச் சுமைகள் மற்றும் சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை குறைதல் ஆகியவையே இத்தகைய உலகளாவிய நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகப் பட்டியலிடப்படுகின்றன.

ஆசிரியர் பணி என்பது வெறும் பாடப்புத்தகச் செய்திகளை அச்சிடப்பட்ட தாள்களிலிருந்து மாணவர்களின் மூளைக்குள் மாற்றும் இயந்திரத்தனமான வேலை அல்ல; மாறாக, அதுமனித மனங்களைச் செதுக்கும் மாபெரும் கலை. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும் திறமையான மாணவனை மட்டுமல்லாமல், கற்றலில் பின்தங்கியிருக்கும் மாணவனையும் கண்டறிந்து, அவனது கற்றல் திறனுக்கு ஏற்பப் பாடங்களை எளிமைப்படுத்தி, தனிப்பட்ட கவனமும் அன்பும் செலுத்துபவர். எனவேதான், “ஆசிரியராக இருப்பது என்பது ஒரு தொழில் அல்ல; மாறாக, அது ஒரு வாழ்க்கை முறைஎன்றார் நம் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் .பி.ஜே. அப்துல்கலாம்.

ஆசிரியர்கள் வெறும் கல்வியை மட்டும் வழங்குவதில்லை; ஒழுக்கம், நேர்மை, அனுதாபம், மதிப்பீடுகள், சமூக அக்கறை போன்ற உயரிய பண்புகளை மாணவர்களின் மனங்களில் விதைக்கிறார்கள். பெற்றோரின் கவனிப்பின்மை மற்றும் தவறான நண்பர்களின் சேர்க்கையால் தடம் மாறத் துடிக்கும் மாணவர்களைத் தட்டிக்கொடுத்து நல்வழிப்படுத்தும்வழிகாட்டியாகஆசிரியர் உருவெடுக்கிறார்.

தடம் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையைச் சரியான பாதைக்குக் கொண்டு வரவும், ஆசிரியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் அவசர நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முதலாவதாக, ஆசிரியர்-மாணவர் உறவு மீட்கப்படவேண்டும். பழங்காலத்தின் குருகுலக் கல்வி முறை போலன்றி, நவீன உலகத்திற்கு ஏற்ப, பரஸ்பர மரியாதையுடனும் அன்புடனும் கூடிய ஆரோக்கியமான ஆசிரியர்-மாணவர் உரையாடல்கள் வகுப்பறைகளில் ஊக்குவிக்கப்படவேண்டும்.

திரைப்படம் மற்றும் எண்மத் தொழில்நுட்பத் தளங்களில் தணிக்கைவேண்டும். சிறுவர்களையும் மாணவர்களையும் வன்முறைக்குத் தூண்டும் ஊடக உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த பெற்றோரும் அரசும் விழிப்புடன் செயல்படவேண்டும். மிகவும் குறிப்பாக, ஆசிரியர்களின் உளவுக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான கல்வி வளாகங்களை உருவாக்குவது அரசின் கடமையாகும். பிள்ளைகளின் நடத்தை மாற்றங்களுக்கு ஆசிரியர்களை மட்டுமே குறை கூறாமல், வீடுகளிலும் நற்பண்புகளையும் பெரியோரை மதிக்கும் பழக்கத்தையும் பெற்றோர் கற்றுத்தரவேண்டும். சிறப்பான விதத்தில் யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ளபடி, ஆசிரியர்களின் ஊதியம், பணிச்சூழல் மற்றும் தொழில்முறைப் பயிற்சிகளில் அரசுகள் தாராளமாக முதலீடு செய்ய வேண்டும்.

இறுதியாக, “நமது எதிர்காலம் வகுப்பறைகளின் நான்கு சுவர்களுக்குள்ளேயே வடிவமைக்கப்படுகிறது  என்றார் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களின் கண்ணியத்தைச் சிதைத்து, வன்முறைக்கு ஆட்படுத்தும் ஒரு சமூகம் ஒருபோதும் நாகரிகமடைந்த சமூகமாக மாற முடியாது. ஆசிரியர் சமூகத்திற்கு நாம் அளிக்கும் மரியாதையும் பாதுகாப்பும்தான் நமது நாட்டின் எதிர்காலத் தலைமுறையின் ஒழுக்கத்தைத் தீர்மானிக்கிறது.

ஆகவே, தடம் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையே! உங்களுக்கு இருளகற்றி அறிவொளி புகட்டி, உங்கள் கனவுகளுக்குச் சிறகுகள் முளைக்கவைக்கும் ஆசிரியர்களைப் போற்றுங்கள்; அவர்களைத் தெய்வத்திற்கு நிகராக மதியுங்கள். அரசு, பெற்றோர், சமூகம் என அனைவரும் ஒன்றிணைந்து ஆசிரியர் சமூகத்தின் கரங்களைப் பலப்படுத்துவோம்! அதுவே நாம் நமது எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யும் ஆகச்சிறந்த நன்மையாகும்!

ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தினவிழா வாழ்த்துகள்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்