நமது தாய்ப்பூமி இதுவரை இல்லாத அளவிலான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்பம், அழிவை ஏற்படுத்தும் வெள்ளங்கள், வறட்சிகள், காட்டுத்தீ மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள், காலநிலை அமைப்பு பெருகிய முறையில் நிலையற்றதாகி வருவதை எச்சரிக்கின்றன.
வெப்பமயமாதலின்
ஒவ்வொரு கூடுதல் சிறு அளவும் மனித உயிர்களுக்கு ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது; சமத்துவமின்மையை மேலும் ஆழப்படுத்துகிறது. மேலும், சூழலியல் அமைப்புகளின்மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, காலநிலை நெருக்கடி என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது உயிர்வாழ்வு, நீதி மற்றும் நமது பொதுவான எதிர்காலம் குறித்த கேள்வியாகும்.
பூமி
சுமார் 450 கோடி ஆண்டுகள் பழமையானது; ஆனால், ஹோமோ சேப்பியன்ஸ் (நவீன மனித இனம்) சுமார் 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. வேளாண்மை சுமார் 10,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன் மூலம் நிலையான மனிதக் குடியிருப்புகள் செழிக்கத் தொடங்கின. காலப்போக்கில், மனிதச் சமூகங்கள் இயற்கை வளங்களை அதிக அளவில் மாற்றியும் சுரண்டியும் வந்துள்ளன. தொழில்துறைப் புரட்சிக்குப் பின்னர் குறிப்பாக, புதைபடிவ எரிபொருள்களைப் பிரித்தெடுத்து எரிப்பதன் மூலம் இந்தச் சுரண்டலின் அளவும் வேகமும் மிகப்பெரிய அளவில் அதிகரித்தன.
பூமியின்
புவியியல் வரலாற்றில் இயற்கைக் காரணிகளான விண்கல் மோதல்கள், எரிமலைச் செயல்பாடுகள் மற்றும் பெரிய அளவிலான காலநிலை மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட ஐந்து முக்கியமான பேரழிவு, இன அழிவு நிகழ்வுகளை
அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இன்று,
மனிதச் செயல்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயிரினப் பல்வகைமையை இழக்கச் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நெருக்கடி பெரும்பாலும் ஆறாவது பேரின அழிவு என விவரிக்கப்படுகிறது. நிலைத்தன்மையற்ற நுகர்வு, வாழிட
அழிவு, மாசுபாடு, வளங்களின் அளவுக்கு மீறிய சுரண்டல் மற்றும் பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் ஆகியவை இதற்கான முக்கியக் காரணிகளாகும்.
காலநிலை
நெருக்கடி ஏற்கெனவே மனிதர்களுக்கும் சூழலியலுக்கும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. வெப்ப அலைகள், காட்டுத்தீ, வெள்ளங்கள், வறட்சிகள் மற்றும் மாறி வரும் மழைப்பொழிவு முறைகள் ஆகியவை சுகாதாரம், வாழ்வாதாரம், வேளாண்மை, நீர்ப்பாதுகாப்பு, உயிரினப் பல்வகைமை மற்றும் மீன்வளங்களை அச்சுறுத்துகின்றன. காலநிலை மாற்றம் சில தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலைகளையும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, சுற்றுச்சூழல் சீரழிவும் மனிதர்கள், வனவிலங்குகள் இடையேயான தொடர்புகளும் அதிகரித்து, வெளிப்பாட்டை உயர்த்தும் இடங்களில் இது நிகழலாம். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த நெருக்கடிகள், மனிதர்களின் நலனையும் பூமியின் நலனையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை நினைவூட்டுகின்றன.
உருவாகி வரும்
எல்
நினோ
அச்சுறுத்தல்
இந்தப்
பின்னணியில், 2026-ஆம் ஆண்டில் உருவாகி வரும் ‘எல் நினோ’ நிகழ்விற்குத் தீவிரக் கவனம் தேவை. ‘எல் நினோ’ என்பது மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒரு காலநிலை நிகழ்வாகும். மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பதுடன், வர்த்தகக் காற்று மற்றும் வளிமண்டலச் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களும் இதனுடன் இணைந்திருக்கும். இந்த மாற்றங்கள் உலகின் பல பகுதிகளில் பல
மாதங்களுக்கும், சில சமயங்களில் அதற்கும் மேலான காலத்திற்கும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளை மாற்றக்கூடும்.
உலக
வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளபடி, ஆகஸ்டு 2026-க்குள்
எல் நினோ உறுதியாக நிலைபெற்றிருந்தது. மேலும், அது தொடர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. WMO-வின் அண்மைய
முன்னறிவிப்பு, ‘எல் நினோ’ பிப்ரவரி 2027 வரை நீடிக்கும் சாத்தியம் கிட்டத்தட்ட 100% எனக் குறிப்பிடுகிறது.
இந்த நிகழ்வு 2026-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உச்சத்தை அடையும் முன் மிகவும் வலுவான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் - நவம்பர் 2026 காலத்திற்கான முன்னறிவிப்புகள், நினோ 3.4 கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடு சுமார் 3.6°C ஆக இருக்கும்
எனக் காட்டுகின்றன. இருப்பினும், வட்டாரத் தாக்கங்கள் மாறுபடும்.
சொற்களைத்
துல்லியமாகப் பயன்படுத்துவது முக்கியம். ‘சூப்பர் எல் நினோ’ என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஆனால், WMO இதை அதிகாரப்பூர்வ
அறிவியல் வகைப்பாடாகப் பயன்படுத்துவதில்லை. தற்போதைய நிகழ்வை ‘மிகவும் வலுவான எல் நினோ’ என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. மேலும், எல் நினோவின் வலிமை ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரே அளவிலான தாக்கத்தைத் தானாகவே ஏற்படுத்தும் என்று பொருள்கொள்ள முடியாது. உள்ளூர் விளைவுகளையும், பிற காலநிலைக் காரணிகளையும் சார்ந்துள்ளன.
மிகவும்
வலுவான எல் நினோ, மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும். உலகின் வெவ்வேறு பகுதிகளில் தீவிர வெப்பம், வறட்சி மற்றும் கனமழைக்கான அபாயங்களும் அதிகரிக்கலாம். இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை (Indian Ocean Dipole) போன்ற பிற காலநிலை இயக்கிகளுடனான தொடர்பு, வட்டாரச் சூழலின் தாக்கங்களை மேலும் மாற்றக்கூடும். எனவே, முன்கூட்டிய எச்சரிக்கை, உள்ளூர் தயார்நிலை மற்றும் அறிவியல் அடிப்படையிலான திட்டமிடல் ஆகியவை அத்தியாவசியமானவை.
தற்போதைய
நிலைமை நம்மிடையே அச்சத்தை உருவாக்கக்கூடாது; ஆனால், தயார் நிலையை உருவாக்கவேண்டும். அரசுகள், வெப்ப அலைகள், வெள்ளங்கள், வறட்சிகள், பயிர் இழப்புகள், நீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, பொதுச் சுகாதார அவசரநிலைகள், உயிரினப் பல்வகைமை இழப்பு மற்றும் மீன்வளங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான தயார்நிலையை வலுப்படுத்தவேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பேரிடர் மீட்பு அமைப்புகள் நடைமுறைக்கு ஏற்ற அவசரத் திட்டங்களை வைத்திருக்கவேண்டும்.
சமூக
மற்றும் தனிநபர் மட்டங்களில், நாம் தண்ணீரைச் சேமிக்கலாம்; மரங்களையும், உள்ளூர் சூழலியல் அமைப்புகளையும் பாதுகாக்கலாம்; தேவையற்ற ஆற்றல் நுகர்வைக் குறைக்கலாம்; வீணான நுகர்வைத் தவிர்க்கலாம்; காலநிலைத் தாக்கங்களைத் தாங்கக்கூடிய வேளாண்மையை ஆதரிக்கலாம்.
மிக
முக்கியமாக, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அடிப்படையில் வாழ்வாதாரப் பிரச்சினைகளே என்பதை நாம் உணரவேண்டும். அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் அரசுகளும் நிர்வாகங்களும் மாறும்போது மாறக்கூடும்; ஆனால், சூழலியல் சேதம் பல தசாப்தங்களுக்கும், சில சமயங்களில்
பல தலைமுறைகளுக்கும் நீடிக்கக் கூடும். நீர், மண், காடுகள், உயிரினப் பல்வகைமை மற்றும் நிலையான காலநிலை ஆகியவை சீரழிக்கப்படும்போது, மனித வாழ்வின் அடித்தளங்கள் பலவீனமடைகின்றன.
சூழலியல்
மனமாற்றத்திற்கான ஓர் அழைப்பான காலநிலை நெருக்கடி, நமது கொள்கைகளை மட்டுமல்லாமல் நமது வாழ்வியல் முறையையும் மாற்றுமாறு நமக்குச் சவால் விடுக்கிறது. அளவுக்கு மீறிய நுகர்வைவிட போதுமான தன்மையையும், சுரண்டலைவிட பொறுப்பான பாதுகாப்பையும், தனிமனிதவாதத்தைவிட ஒற்றுமையையும் மதிக்கும் ஒரு பண்பாடு நமக்குத் தேவை.
காலநிலை
நடவடிக்கை என்பது நீதிக்கான நடவடிக்கையாகவும் இருக்கவேண்டும்; ஏனெனில், உலக வெப்பமயமாதலுக்கு மிகக் குறைவாகப் பங்களித்தவர்களே அதன் விளைவுகளை மிகக் கடுமையாகச் சந்திப்பவர்களாகப் பல நேரங்களில் உள்ளனர்.