கச்சத்தீவை 1974-ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கைக்குத் தாரைவார்த்தது நம் இந்திய அரசு. ‘ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியதாம்’ என்ற கதைபோல, கச்சத்தீவை வழங்கிய நமக்கே துரோகம் இழைக்கும் விதமாக, தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வருகின்றனர் இலங்கைக் கடற்படையினர். இச்சூழலில், கொடுத்ததை எடுத்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு நம்மை ஆளாக்கியுள்ளனர் இலங்கையை ஆள்பவர்கள். கச்சத்தீவு நமக்கே சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன.
இராமநாதபுரம்
மன்னருக்குச்
சொந்தம்:
1974-இல் ஜமீன்தாரி ஒழிப்புச்சட்டம் வரும் வரை இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னரின் ஆட்சியில் இருந்த கச்சத்தீவு, முத்துக் குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. இங்கே பரவலாகக் காணப்படும் ‘உமிரி’ மற்றும் ‘சாயா’ வேர்களை மருத்துவத் தேவைகளுக்காக இராமநாதபுரம் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்தது என்பதற்கு 1882-ஆம் ஆண்டிலிருந்து முறையான சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி 1822-இல் ‘திமிரர்சனாத்’ என்ற
ஒப்பந்தத்தால் இராமநாதபுரம் மன்னரிடமிருந்து கச்சத்தீவைப் பயன்படுத்திக்கொள்ளும் இசைவைப் பெற்றது.
இங்கிலாந்து
பேரரசி விக்டோரியாவின் காலத்தில், இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொதுஅறிவிப்பில், இலங்கையின் எல்லைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் கச்சத்தீவைக் குறிக்காமலும், இராமநாதபுரம் அரசரைப் பற்றியவற்றில் கச்சத்தீவு அவருக்குரியதென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதை மேனாள் இலங்கை அமைச்சரவைச் செயலர் பி.பி. பியரிசே
உறுதிப்படுத்தியுள்ளார்.
1912-ஆம் ஆண்டிலிருந்து 1923 வரை, அதாவது 15 ஆண்டுகளுக்கு கச்சத்தீவை குத்தகையாக, இந்தியாவிற்கான அரசு செயலர் சேதுபதியிடமிருந்து இசைவு பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன.
குத்தகை எடுத்ததற்கான
ஆதாரங்கள்:
சேதுபதி மன்னர் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவைக் குத்தகைக்கு விட்டு, அவர்கள் வருவாய் பெற்று வந்துள்ளனர். இதற்கான சான்றுகள் பல உள்ளன. ஜனாப்
முகமத் அப்துல் காதர் மரைக்காயர், முத்து சாமி பிள்ளை என்பவர்களுக்காக, கச்சத்தீவு ஐந்தாண்டுகளுக்குக் குத்தகையாக ஒப்பாவணம் செய்துகொள்ளப்பட்டது (ஜூன் 23, 1880-ஆம் ஆண்டு இராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலகம், 1880, ஜூலை 2-ஆம் தேதி ஆவண எண் 510/80).
மீண்டும்
இராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் டிசம்பர் 4, 1885-ஆம் ஆண்டு, கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு, ஒப்பாவணம் செய்யப்பட்டது (ஆவண எண் 134/85). பின்னர் 1947-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து 1949-ஆம் ஆண்டு ஜூன் 30 வரை கச்சத்தீவு குத்தகையாக விடப்பட்டது (குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள், ஜூலை 28, 1947-ஆம் ஆண்டு ஆவண எண் 278/48).
நில வரைபடங்களில்
கச்சத்
தீவு:
17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பர்னொப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார். இலங்கையின் தேசப்படம் ஒன்றை உருவாக்குவதில் பர்னொப் முழுமையாக ஈடுபட்டார். அவர் உருவாக்கிய அந்தத் தேசப்படத்தில் 3.75 சதுர மைல் பரப்பளவுள்ள கச்சத்தீவு குறிக்கப்படவில்லை. இலங்கைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரேபியர்களும்
ஐரோப்பியர்களும் வணிகத்திற்காக வந்த வண்ணம் இருந்தனர். அவர்களைப் பின்பற்றி வந்த தாலமி, பிளினி என்ற நிலவியல் ஆய்வாளர்கள் இலங்கையின் கடற்கரைப் பகுதிகள், உள்பகுதிகள் ஆகியவற்றைத் தேசப்படங்களாக வரைந்தனர். தாலமி, பிளினி ஆகியோர் இலங்கைத் தேசப்படத்தில் கச்சத்தீவைக் குறிக்கவில்லை. அவர்கள் இருவரும் தென்னிந்தியக் கடற்கரை, தமிழ்நாடு ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு
1650-லிருந்து 1800 வரை ஆலந்து நாட்டவரின் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது, அவர்கள் வைத்திருந்த இலங்கைத் தேசப்படத்தில் அந்நாட்டின் வட எல்லைத் தீவாக
‘டெல்த்’ தீவைத்தான்
குறிப்பிட்டிருக்கின்றனர்;
கச்சத்தீவு குறிப்பிடப்படவில்லை. இலங்கையை ஆண்ட போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் தேசப்படத்தில் இலங்கையின் வட எல்லையாக டெல்த்
தீவை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். கச்சத்தீவைப் பற்றி மூச்சுவிடவில்லை. சர் ஜேம்ஸ் டென்னன்ட் எனும் வரலாற்று அறிஞர், ஒரு நில நூல் அறிஞர். இலங்கையின் நாகரிகம், பண்பாடு, கலை, மொழி அனைத்தையும் தெளிவாக அறிந்த பன்மொழி அறிஞர். இவர் ஜே. ஆரோ ஸ்மித் என்பவரோடு சேர்ந்து 1857-61-ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தேசப்படங்களை வெளியிட்டார். அப்படங்களில் டென்னன்ட் கச்சத்தீவைச் சேர்க்கவில்லை.
கச்சத்தீவின்
முக்கியத்துவம்:
பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கடற்படை அரண் அமையும்போது, அதன் மையங்களில் ஒன்றாகக் கச்சத்தீவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஐரோப்பிய, இந்தோனேசியத் தீவுகளில் அமைக்கப்படும் ஏவுகணைத் தளங்களின் இலக்குகளுக்கு நேர் எதிராக ஏவுகணைத் தளம் அமைக்கப்படும் இடங்களில் ஒன்றாகவும் இத்தீவை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
இலங்கையில் எந்த வல்லரசு நாட்டின் ஆதிக்கமாவது மிகுந்து செயல்படும்போது, அதனால் ஏற்படக்கூடிய போர் அச்சங்களைத் தகர்க்க உதவும் இடமாகவும், இராணுவப் படைத்தளம் அமைப்பதற்கேற்ற தளமாகவும் கச்சத்தீவை ஆக்கிக்கொள்ளலாம்.
கச்சத்தீவு
நம்மிடம் இருந்தால் கடற்படை, நீர் மூழ்கிக்கப்பல் படைவீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கலாம்; இராணுவத் தளவாடங்களைச் செப்பனிடும் தொழிற்சாலைகள் அமைத்துக்கொள்ளலாம்; போர் விமானங்கள் தற்காலிகமாக இறங்குவதற்கான திட்டு அமைக்கலாம். ரேடார் நிலையம், கடல் உணவு வகைகள் ஆராய்ச்சி நிறுவனம் போன்றவற்றை உருவாக்கிக்கொள்ளலாம்.
கச்சத்தீவு நமதே:
இவ்வளவு பயன்பாடுள்ள கச்சத்தீவை நாம் இலங்கைக்கு வழங்கியிருக்கிறோம். ஆனால், அதற்குரிய நன்றியுணர்வோடு இலங்கை ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது இலங்கை? ‘கச்சத்தீவு நமதே’ என உரக்க முழக்கமிட்டு
நாம் பிடுங்கிக்கொள்ளாதவரை, ‘கொடுத்ததை முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று
மறைமுகமாக இலங்கை நமக்குச் சவால் விடுகிறதோ?
தமிழ்நாட்டு
மீனவர்களை இலங்கை கொன்று குவிப்பதைப் பார்த்தால் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.