யாரும் கவனிக்காத இடத்திலும்...
இறைவனின் பார்வை
இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை
திருப்பலி முடிந்தது. மக்கள் மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிலர் ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொண்டார்கள், சிலர் அடுத்த வார நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசினார்கள்.
குழந்தைகள்
ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ஆலயத்தின் முன்பகுதி கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகிக் கொண்டிருந்தது. ஆனால், பின்பக்கத்தில் ஒரு நாற்காலி மட்டும் இன்னும் அப்படியே இருந்தது.
அந்த
நாற்காலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரு வயதான அம்மா அமர்ந்திருப்பார். யாருடனும் அதிகமாகப் பேசமாட்டார். திருப்பலி தொடங்குவதற்கு முன்பே வந்து அமைதியாக அமர்ந்திருப்பார். திருப்பலி முடிந்ததும், மற்றவர்கள்
எழுந்து செல்லும்வரை காத்திருந்து, கடைசியாக மெதுவாக வெளியேறுவார்.
அன்று
அந்த நாற்காலி காலியாக இருந்தது. யாரும் முதலில் கவனிக்கவில்லை. மக்கள் தங்கள் வழியில் சென்று கொண்டிருந்தார்கள்.
சில
நிமிடங்களுக்குப் பிறகு ஆலயத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் மட்டும் அந்த நாற்காலியைப் பார்த்தார். ‘அம்மா இன்று வரவில்லையே...’ என்று மெதுவாகச் சொன்னார். அந்த ஒரு வாக்கியம் அங்கே சிறிது நேரம் அமைதியை ஏற்படுத்தியது.
நாம்
தினமும் பார்க்கும் சில மனிதர்களை உண்மையில் ‘பார்க்கிறோமா?’ காலையில் அலுவலகத்திற்குச் செல்லும்போது வாசலில் நிற்கும் காவலாளியைப் பார்க்கிறோம்; ஆனால், அவருடைய பெயர் நமக்குத் தெரியுமா? தினமும் நம் அறையை சுத்தம் செய்யும் பணியாளரைப் பார்க்கிறோம்; ஆனால், அவர் எப்படி இருக்கிறார் என்று ஒரு முறையாவது கேட்டிருக்கிறோமா? வகுப்பறையின் கடைசி வரிசையில் அமைதியாக அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்க்கிறோம்; ஆனால், அவன் ஏன் அமைதியாக இருக்கிறான் என்று அறிய முயன்றிருக்கிறோமா? வீட்டில் நம்முடன் உணவு உண்ணும் ஒருவரை தினமும் பார்க்கிறோம்; ஆனால், அந்த நாளில் அவருடைய மனதில் என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறோமா?
சில
நேரங்களில் நாம் மனிதர்களைப் பார்க்கவில்லை; அவர்களைக் கடந்து செல்கிறோம். நம்முடைய
பார்வை வேகமாகிவிட்டது. முகங்களைப் பார்க்கிறோம்; மனிதர்களைப் பார்க்கவில்லை. செயல்களைப் பார்க்கிறோம்; உணர்வுகளைப் பார்க்கவில்லை. தவறுகளைப் பார்க்கிறோம்; அதன் பின்னால் இருக்கும் வலியைப் பார்க்கவில்லை. வெற்றியைப் பார்க்கிறோம்; அதன் பின்னால் இருந்த போராட்டத்தைப் பார்க்கவில்லை. ஒருவரின் வெளிப்புறத்தைப் பார்த்தவுடன், அவரைப் பற்றிய முடிவை எடுத்துவிடுகிறோம். ஆனால், இயேசு அப்படிப் பார்க்கவில்லை.
ஒருநாள்
இயேசு எரிகோ நகருக்குள் சென்று கொண்டிருந்தார். கூட்டம்
பெரிதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் சக்கேயுவும் இருந்தான். அவனைப் பற்றி மக்கள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். அவன் ஒரு வரிவசூலிப்பவன். அவன் வாழ்க்கையைப் பற்றிய தீர்ப்பு அவர்களிடம் தயாராக இருந்தது. ஆனால், கூட்டத்தின் நடுவில் இயேசு அவனைப் பார்த்தார். மற்றவர்கள் பார்த்தது ஒரு வரிவசூலிப்பவனை; இயேசு பார்த்தது ஒரு மனிதனை! அதனால்தான் அவர் அவனை அழைத்தார்.
அதேபோல்,
வழியோரத்தில் இருந்த பர்த்திமேயுவின் குரலையும் கூட்டம் அமைதிப்படுத்த முயன்றது. ஆனால், இயேசு அந்தக் குரலைக் கேட்டார். மற்றவர்கள் அவனை ஒரு தொந்தரவாகப் பார்த்தார்கள். இயேசு அவனை ஒரு மனிதனாகப் பார்த்தார். நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்று சொல்கிறோம். ஆனால், ஒரு சிறிய கேள்வி: இயேசு பார்த்ததைப் பார்க்க நாம் கற்றுக்கொண்டிருக்கிறோமா?
நம்முடைய
வீட்டில் கவனிக்கப்படாமல் இருக்கும் ஒருவரை? நமது பணியிடத்தில் அமைதியாக இருக்கும் ஒருவரை? நமது சமூகத்தில் உதவி தேவைப்படும் ஒருவரை? நமக்கு
அருகில் இருந்தும் தனிமையில் வாழும் ஒருவரை?
சில
நேரங்களில் அவர்களுக்கு நம்மிடம் பெரிய உதவி தேவையில்லை. ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று ஒரு சிறிய புன்னகை. ஒரு நிமிட உரையாடல். ஓர் அன்பான அழைப்பு. சில நேரங்களில் ஒருவரைக் கவனிப்பதே அன்பின் செயலாகி விடுகிறது.
அந்த
ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த அந்த நாற்காலியைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பணியாளருக்கு ஒரு விசயம் புரிந்தது. அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த அம்மா, பல ஆண்டுகளாக எல்லாருக்கும்
மிகவும் தெரிந்தவராக இருந்திருக்கலாம். ஆனால், அவரைப் பற்றி அவர்களுக்கு எவ்வளவு தெரியும்? அவர் யாருக்காகச் செபித்தார்? அவர் எந்தத் துயரத்தைச் சுமந்தார்? அவருடைய வாழ்க்கையில் யார் இருந்தார்கள்?அவருடைய இதயத்தில் என்ன இருந்தது? அவரை அவர்கள் பார்த்தார்கள்; ஆனால், ஒரு வேளை அவரை உண்மையாகப் பார்த்ததே இல்லை.
நம்
வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட ‘காலியான நாற்காலிகள்’ ஒருநாள்
வரலாம். நாம் தினமும் பார்த்த ஒருவர் இல்லாதபோதுதான் அவருடைய இருப்பின் மதிப்பை உணரலாம். அதனால் அவர்கள் நம்முடன் இருக்கும்போதே அவர்களைப் பார்ப்போம். அவர்களின் முகத்தை மட்டும் அல்ல; அவர்களின் மனத்தையும்! அவர்களின் வார்த்தைகளை மட்டும் அல்ல; அவர்களின் மௌனத்தையும்! அவர்களின் வெற்றியை மட்டும் அல்ல; அவர்களின் போராட்டத்தையும்! ஏனெனில், இயேசுவின் பார்வை வெளிப்புறத்தைத் தாண்டிச் செல்கிறது. நாம் பார்க்க மறந்து போகிறவர்களையும் அவர் பார்க்கிறார். நாம் மதிப்பிடுகிறவர்களையும் அவர் அன்போடு அணைக்கிறார். நாம் கூட்டத்தில் ஒரு முகமாகக் கடந்து செல்கிறவர்களையும் அவர்களது பெயர்களால் அறிந்திருக்கிறார். அதனால் அடுத்த முறை நீங்கள் ஒருவரைக் கடந்து செல்லும்போது, சிறிது நேரம் நின்று பாருங்கள். ஒருவேளை... அவர் உங்கள் கவனத்திற்காக அல்ல; உங்கள் அன்பிற்காகக் காத்திருக்கலாம். இறைவனின் பார்வையில், கூட்டத்தில் யாரோ ஒரு முகம் மட்டுமல்ல!