திருப்பலி முன்னுரை
அறிவியல்
உலகில் மெய்ஞானமாகிய இறைவனைத் தேடி, ஞாயிறு திருப்பலிக்கு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம். இன்றைய நற்செய்தியானது அளவின்றி மன்னிக்கவும், நல்லுறவுடன் வாழவும் நமக்கு அழைப்புவிடுக்கிறது. பகை எப்போதுமே நமக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இரக்கமற்ற பணியாளனின் உவமை, இறைவன் நம்மீது கொண்டுள்ள பேரிரக்கத்தையும் பேரன்பையும் எடுத்துரைக்கின்றது. ஆயிரம் தவறுகள் செய்து, தேடிவரும்போதெல்லாம் அணைக்கின்ற இறைவனின் இரக்கத்திற்காக நன்றி கூறுவோம். நம்மிடம் உள்ள பகை, வன்மம், கசப்புணர்வு, மன்னிக்க முடியாத மனநிலை அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுவோம். கடவுள் நம்மை நிபந்தனையில்லாமல் மன்னித்து ஏற்றுக்கொள்வதுபோல, நாமும் உடன் வாழும் சகோதர-சகோதரிகள் நமக்கு எதிராகச் செய்யும் குற்றங்களை நிபந்தனையின்றி மன்னிப்போம்.
மன்னிப்பு
என்பது பிறருக்கு நாம் செய்யும் தயவு அல்ல; மாறாக, நம் மனத்தை கோபம், கசப்பு என்ற சிறைகளிலிருந்து விடுவிக்கும் திறவுகோல். மன்னிக்கும் மனம் இறைவனின் அமைதியைச் சுவைக்கிறது. மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றாது; ஆனால், அது எதிர்காலத்தை வெளிச்சமாக மாற்றும். மன்னிப்பு என்பது ஒரு தற்காலிகச் செயலல்ல; அது நாம் நாள்தோறும் வாழவேண்டிய கிறித்தவ வாழ்க்கை முறை. எனவே, மன்னிப்பை அனைவருக்கும் கொடுத்து, மகிழ்வோடு வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இன்றைய
முதல் வாசகம் மன்னிப்பின் அவசியத்தைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது. கோபமும் சினமும் வெறுக்கத்தக்கவை என்றும், அவற்றைப் பிடித்து வைத்திருப்பவர் ஆண்டவரிடமிருந்து தண்டனையைப் பெறுவார் என்றும் எச்சரிக்கிறது. பல ஆண்டுகள்
பகையோடு வாழும் உறவுகளை மன்னித்து, ஆண்டவரின் அருளைப் பெற்று வளமோடு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
வாழ்க்கையில்
நாம் சந்திக்கின்ற அனைத்திலும் ஆண்டவரின் திருவுளத்தை நாட வேண்டும். நமது செயல்கள் அனைத்தும் நமது பெயருக்காக,
புகழுக்காக அல்ல; மாறாக, ஆண்டவரின் விருப்பதிற்கு உகந்ததாக இருக்க வேண்டும். நமது சுயநலத்தை விடுத்து, ஒவ்வொரு நிமிடத்தையும் இறையாட்சிப் பணிக்காகப் பயன்படுத்தி, கடவுளின் அன்பில் நிலைத்திருக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் இறைவனின் எல்லையற்ற இரக்கத்தையும், அளவற்ற மன்னிப்பையும் தங்கள் வாழ்க்கையால் போதிக்கவும், மக்களை நற்செய்தியின் ஒளியில் கட்டியெழுப்பவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எழுபதுமுறை
மன்னிக்கவேண்டுமென்று
மொழிந்த எம் இறைவா! மன்னிக்காத உள்ளத்தோடு உம்மை உட்கொண்ட நேரங்களுக்காக மன்னிப்பு வேண்டுகின்றோம். எங்கள் உள்ளங்களில் உள்ள கோபம், வெறுப்பு, பழிவாங்கும் குணம் அனைத்தையும் விடுத்து, மனப்பூர்வமாக மன்னித்து அமைதியோடு வாழ வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. கடவுளுக்கு
உகந்தவர்களாய் வாழ அழைப்பு விடுக்கும் இறைவா! எங்களது பேராசையாலும், பாவ வாழ்க்கையாலும் உம்மிடமிருந்து விலகி இந்த உலகப்போக்கின்படி வாழாமல், உமது திருவுளத்தை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.
4. தேடிவரும்
போதெல்லாம் அரவணைக்கும்
இறைவா! எங்கள் குடும்பங்களில் உண்மையான அன்பும், விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவமும் வளர்ந்திடவும், நிறை-குறையோடு அனைவரையும் அன்புசெய்து வாழவும் தேவையான மனப்பக்குவத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.