திருப்பலி முன்னுரை
சகோதரத்துவத்தில்
நிலைத்திருக்கவும், கூடி செபிக்கவும் ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, கிறித்தவச் சமூகத்தில் நிலவவேண்டிய அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும், கூட்டுச் செபத்தின் வல்லமையைப் பற்றியும் கூறுகின்றார். மற்றவர்களைக் காயப்படுத்துவதையோ, பழிவாங்குவதையோ, ஏளனமாகப் பேசுவதையோ தவிர்த்து, தவறுகளை அன்போடும் கரிசனையோடும் சுட்டிக்காட்டி, சகோதர உறவில் நிலைத்து வாழ இயேசு அறிவுறுத்துகிறார். பிணக்குகள் இன்றி இணக்கத்தோடு வாழும்போது, கடவுள் நம் மத்தியில் இருப்பார். அவரது வல்லமை நம்மில் செயல்படும் என்பதையும் நற்செய்தி எடுத்துரைக்கிறது. “உங்கள் சகோதர சகோதரிகளுள்...” என்று இயேசு தொடங்கும்போதே, நாம் மனத்தாங்கல் கொள்ளும் எவரும் நமது அந்நியர் அல்லர்; மாறாக, நாம் அன்பு செய்யவேண்டிய சகோதர-சகோதரிகள் என்ற உண்மையை இயேசு விளக்குகிறார்.
நம்
சமூகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுடனும் நல்லுறவுடன் வாழ்வோம். மற்றவர்களோடு நாம் கொண்டுள்ள அன்பும் அமைதியும் நட்புறவுமே நமது ஆன்மிக வாழ்க்கையின் அடிப்படையாக உள்ளது. உண்மை ஆன்மிகம் என்பது சகோதரத்துவத்தில்தான் செழித்து வளர்கிறது. எனவே, பகையை விடுத்து, அனைத்து மக்களையும் உடன்பிறப்புகளாக ஏற்று வாழ்வோம். உடன்வாழும் சகோதர-சகோதரிகளை நிறை-குறையோடு ஏற்று, அன்பைப் பகிர்ந்து, உறவில் மகிழ்ந்து வளமோடு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இன்றைய
முதல் வாசகத்தில் இறைவன், இறைவாக்கினர் எசேக்கியேலைத் தம் மக்களின் ‘காவலராக’ நியமிக்கிறார். தவறு செய்கிற ஒருவரை எச்சரித்து, நல்வழிப்படுத்த வேண்டிய ஆன்மிகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை இப்பகுதி சுட்டிக்காட்டுகிறது. தீயோரை அவர்களின் தீய வழியிலிருந்து எச்சரிக்கத் தவறினால் அவர்களின் அழிவுக்கு நாமும் பொறுப்பாளியாவோம் எனக் கூறி பிறரின் ஆன்மிக நலனில் அக்கறை கொண்டு வாழ அழைக்கும் இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கிறித்தவ வாழ்வின் மையமான ‘அன்பை’ அனைவரும் செய்யவேண்டிய ஒரே கடனாக முன்வைக்கிறார். அன்பு என்னும் ஒரே கடனைத் தவிர, வேறு எந்தக் கடனும் நம்மிடம் இருக்கக் கூடாது என்ற அழைப்பினை ஏற்று, வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பை அனைவருக்கும் வழங்கி, அன்பின் சீடர்களாக வாழ அழைக்கும் இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. ‘நானே நல்ல
ஆயன்’ என்று
மொழிந்ந ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் அனைவரும் சகோதரத்துவத்தையும் அன்பையும் மன்னிப்பையும் இம்மண்ணில் கட்டியெழுப்பவும், மக்களின் குறிப்பறிந்து செயல்படும் நல்ல மேய்ப்பர்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வழிகாட்டும்
நாயகனே இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் சுயநலமின்றி மக்களின் நலனில் அக்கறைகொண்டு வாழவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீதியான சட்டங்களை இயற்றவும், நாட்டின் அமைதிக்காக உழைக்கவும் தேவையான ஞானத்தைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின்
ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் கசப்புணர்வுகள் நீங்கி, ஒருவரையொருவர் ஏற்று நல்லுறவுடன் வாழவும், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான வார்த்தைகளால் சுட்டிக்காட்டவும், அனைவரையும் சகோதர-சகோதரிகளாக ஏற்று அன்பு செய்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ‘கைவிட மாட்டேன்’ என்று
கூறிய ஆண்டவரே! மனக்கவலையினாலும் தீராத நோயினாலும் புரிந்துகொள்ளாமையாலும் துன்பப்படும் எம் சகோதர-சகோதரிகளுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மனபலத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.