news-details
ஆன்மிகம்
அன்னை மரியா பாஸ்கா மறைப்பொருள் அனைத்திற்கும் சாட்சியாக இருந்தார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 51)

1. இயேசுவைக் கல்லறைக்குள் வைத்தபின்மரியா மட்டுமே வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த உயிர்ப்பு அறிவிப்புச் செய்தியைப் பெறுவதற்காக தன்னையே தயாரித்துக் கொண்டு, நம்பிக்கையின் சுவாலையை அணையாது காப்பதில் நிலைத்திருக்கிறார் (Address at the General Audience, 3 April 1996; in <> English Edition, 10 April 1996, p.7). புனித சனி அன்று உணரப்பட்ட இந்த எதிர்பார்ப்பானது, ஆண்டவரின் அன்னையின் நம்பிக்கையில் மிகவும் உன்னதமான தருணங்களில் ஒன்றாகும்: உலகைச் சூழ்ந்திருக்கும் இருளில், அவர் தன்னை வாழ்வின் இறைவனிடம் முற்றிலும் ஒப்படைத்து, தன் மகனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, இறைவாக்குறுதிகள் நிறைவேறுமென நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

நற்செய்தி நூல்கள் உயிர்த்த ஆண்டவரின் பல்வேறு காட்சிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆனால், இயேசுவுக்கும் அவரது தாய்க்கும் இடையே எந்தவிதமான சந்திப்பும் நடந்ததாகக் குறிப்பிடவில்லை. நற்செய்தியாளர்களின் இந்த அமைதியானது, உயிர்ப்புக்குப்பின் கிறிஸ்து மரியாவுக்குத் தோன்றவில்லை என்ற முடிவுக்கு இட்டுச் செல்லக்கூடாது; இருப்பினும், நற்செய்தியாளர்கள் ஏன் அந்தவொரு நிலைப்பாடு எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களைத் தேட அந்த அமைதியானது நம்மை அழைக்கின்றது.

உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தவர்களுள் மரியா எவ்வாறு இல்லாமல் இருக்க முடியும்?

விடுபட்டதற்கான காரணங்களைக் கணித்தால், இந்த அமைதியானது நமக்கு மீட்பளிக்கத் தேவையானவை பற்றிய உண்மை மட்டுமேசாட்சிகளாக கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களின்வார்த்தையிலே தரப்பட்டிருக்கக் கூடும் என்பது தெளிவாகும் (திப 10:41). அதாவது, “மிகுந்த வல்லமையோடு (திப 4:33) ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிற்கு அவர்களின் சாட்சியைப் பதிவுசெய்த திருத்தூதர்கள் அவர்களுக்குத் தோன்றுமுன், உயிர்த்த ஆண்டவர் பல நம்பிக்கைக்குரிய பெண்களுக்கு அவர்களது திரு அவை சார்ந்த பணியின் நிமித்தம் தோன்றினார் என்பதையும் பதிவு செய்திருக்கின்றனர்: “என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் (மத் 28:10).

புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் உயிர்த்த தன் மகனுடனான அன்னையின் சந்திப்பைப் பற்றிப் பேசவில்லையெனில், அத்தகைய சாட்சியம் ஆண்டவரின் உயிர்த்தெழுதலை மறுத்தவர்களால் மிகவும் சார்புடையதாகக் (Biased) கருதப்பட்டிருக்கலாம். அதனால் அது நம்பத்தகுந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காது என்ற காரணத்தினாலேயே இந்த அமைதி நிலவலாம்.

2. மேலும், நற்செய்தி நூல்கள் உயிர்த்த இயேசுவின் ஒருசில காட்சிகளை மட்டுமே குறிப்பிடுகின்றன. உயிர்ப்பு நாளுக்குப்பின் அந்த நாற்பது நாள்களில் என்னவெல்லாம் நடந்தன என்பது பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு நிச்சயமாக அவைகளில் கிடையாது. புனித பவுல், “அவர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார் (1கொரி 15:6) என்பதை நினைவுகூர்கின்றார். மிகப்பலரால் அறியப்பட்ட ஒரு விதிவிலக்கான நிகழ்வை நற்செய்தியாளர்கள் குறிப்பிடாமல் விடுத்ததை நாம் எவ்வாறு விளக்குவது? உயிர்த்த ஆண்டவர் அளித்த பிற காட்சிகள் நன்கு அறியப்பட்ட நிகழ்வுகளாக இருந்தபோதிலும், அவை ஏடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கு இதுவே தெளிவான சான்றாகும். முதல் சீடர்களின் சமூகத்தில் அன்னை மரியா வீற்றிருந்த நிலையில் (திப 1:14), இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்த தன் மகனைச் சந்தித்தவர்களிடமிருந்து அவர் எவ்வாறு விலக்கப்பட்டிருக்க முடியும்?

3. உண்மையிலேயே உயிர்த்த இயேசு முதன்முதலில் தோன்றிய நபர் அவரது அன்னையாகவே இருந்திருக்கக்கூடும் என்று கருதுவது நியாயமானதே. விடியற்காலையில் கல்லறைக்குச் சென்ற பெண்களின் குழுவில் மரியா இல்லாதிருந்தது (மாற் 16:1; மத் 28:1), அவர் அதற்கு முன்பாகவே இயேசுவைச் சந்தித்துவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டக்கூடும் அல்லவா! சிலுவையின் அடியில் உண்மையுள்ளவர்களாய் நின்று, நம்பிக்கையில் மிகுந்த உறுதி கொண்டவர்களாய் விளங்கிய பெண்களே இயேசுவின் திருவுளப்படி உயிர்த்தெழுதலின் முதல் சாட்சிகளாக இருந்தனர் என்ற உண்மையும் இந்த அனுமானத்தை உறுதிப்படுத்துகிறது.

உண்மையிலேயே, உயிர்த்த ஆண்டவர் அவர்களுள் ஒருவரிடம், அதாவது மரிய மதலேனிடம் திருத்தூதர்களுக்கு உயிர்ப்புச் செய்தியைச் சொல்வதற்கான பணியை ஒப்படைக்கின்றார் (ஒப்பிடுக. யோவா 20:17-18). இந்த உண்மையும் ஒருவேளை இயேசு மிகவும் நம்பிக்கையோடிருந்து தாம் பலவாறு சோதிக்கப்பட்டபோதும் அந்த நம்பிக்கையை குறைவுபடாமல் காத்துக்கொண்ட அவருடைய தாய்க்குத்தான் தம்மை முதலில் காட்டியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

இறுதியாக, கல்வாரி மலையில் அன்னை மரியாவின் தனித்துவமான மற்றும் சிறப்பான உடனிருப்பும், சிலுவையில் தன் மகனின் பாடுகளோடு அவர் கொண்டிருந்த முழுமையான பிணைப்பும், மறைப்பொருளில் அவரது பங்களிப்பும் மிகச் சிறப்பான முறையில் அமைந்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த செடூலியஸ் (Sedulius) என்ற எழுத்தாளர், உயிர்த்தெழுந்த மகிமை நிறைந்த வாழ்வில் கிறிஸ்து முதலில் தம் தாய்க்கே தோன்றினார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். உண்மையில், கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பின்போது அவர் உலகிற்குள் நுழைவதற்கான வழியாக இருந்த அன்னை மரியா, கிறிஸ்துவின் மகிமையுள்ள வருகையின் தூதராக மாறுவதற்காக, உயிர்த்தலின் வியத்தகு செய்தியைப் பரப்பவும் அழைக்கப்பட்டார். இவ்வாறு அவர் திளைத்த மகிமையில் உயிர்த்தெழுந்தவரின் திரு அவையின் மகிமைக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.

4. உயிர்த்தவருக்காகக் காத்திருந்து, அவரது உயிர்ப்புக் காட்சியின்போது சீடர்களின் குழுமத்தில் அவரைச் சந்திக்கின்ற திரு அவையின் மாதிரியாகவும் உருவகமாகவும் திகழும் அன்னை மரியா, பாஸ்கா மகிழ்ச்சியின் நிறைவில் தானும் அகமகிழும் பொருட்டு, உயிர்த்த தன் மகனுடன் ஒரு தனிப்பட்டச் சந்திப்பைக் கொண்டிருந்தார் என்று கருதுவது மிகவும் ஏற்புடையதே.

ஆண்டவரின் அன்னை உலக மாந்தர் அனைவருக்கும்மகிழ்ச்சியின் காரணியாக (Cause of joy) விளங்குகிறார்

புனித வெள்ளியன்று கல்வாரியிலும் (ஒப்பிடுக. யோவா 19:25), பெந்தகோஸ்தே நாளில் மேலறையிலும் (உக. திப 1:14) வீற்றிருந்த கன்னி மரியா, கிறிஸ்து உயிர்த்தெழுந்ததன் சிறப்பான சாட்சியாகவும் இருந்திருக்கக்கூடும். இதன் வழியாக, பாஸ்கா மறைப்பொருளின் அனைத்து முக்கியத் தருணங்களிலும் அவரது பங்கேற்பு முழுமை பெறுகிறது. உயிர்த்த இயேசுவை வரவேற்கும் அன்னை மரியா, இறந்தோரின் உயிர்த்தெழுதலின் மூலம் நிறைவடைய விரும்பும் மனிதகுலத்தின் அடையாளமாகவும் முன்காட்டியாகவும் திகழ்கிறார்.

பாஸ்கா காலத்தில் கிறித்தவச் சமூகம் ஆண்டவரின் அன்னையை நோக்கி, “விண்ணக அரசியே, மகிழ்வீராக. அல்லேலூயா! என்று கூறி அகமகிழ அழைப்புவிடுக்கிறது. இதன்மூலம், கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பின்போது வானதூதர் அன்னையிடம் கூறியமகிழ்வீராகஎன்ற வார்த்தையைக் காலமெல்லாம் தொடரச்செய்து, உலக மாந்தர் அனைவருக்கும் அன்னை மரியாபேரின்பத்தின் காரணியாகமாறுவதற்காக, இயேசுவின் உயிர்த்தெழுதலில் அவர் அடைந்த மகிழ்ச்சியை அது நினைவுகூர்கிறது.