மனிதர்களுக்கு இடையேயான தொடர்பாடலில் சொற்கள் ஆற்றும் பங்கைக் காட்டிலும், சொற்களின்றி வெளிப்படும் ‘உடல்மொழி’ (Body Language) செலுத்தும் ஆதிக்கம் மிகவே ஆழமானது. நாம் பேசும் சொற்கள் வெறும் தகவலை மட்டுமே பரிமாறுகின்றன; ஆனால், நமது முகபாவனைகள், கையசைவுகள், உடலின் நிலைகள், விழித் தொடர்புகள் மற்றும் குரலின் தொனி ஆகிய சொற்களற்ற தொடர்பு முறைகள் (Nonverbal Communication) நமது உண்மையான எண்ணத்தையும் உள்நோக்கத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கின்றன.
உளவியல்
அறிஞரான ஆல்பர்ட் மெஹ்ராபியன் (Albert Mehrabian) என்பவரின் புகழ்பெற்ற ஆய்வுக் கோட்பாட்டின்படி, மனிதர்களுக்கு இடையிலான தொடர்பாடலில் 93 விழுக்காடு கருத்துகள் மற்றும் உணர்வுகள் சொற்களற்ற உடல்மொழி மற்றும் குரலின் தொனி மூலமாகவே சென்று அடைகின்றன; சொற்கள் வெறும் 7 விழுக்காடு பங்கையே வகிக்கின்றன. இத்தகைய சக்திவாய்ந்த உடல்மொழி, தனி மனித அன்றாட உறவுகளில் மட்டுமன்றி, பொதுமக்கள் கூடும் மேடைகளிலும், சனநாயக அமைப்புகளான சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற அவைகளிலும் கண்ணியத்துடன் பேணப்படவேண்டும்.
அவ்வகையில்,
கற்றறிந்த சான்றோர்கள், மாண்புமிகு மேன்மக்கள் கூடியுள்ள அவையில் ஒருவரின் செயல்பாடுகள் எப்படி அமையவேண்டும் என வரையறை தந்துள்ளது
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம்.
‘நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொடு
பாட்டுரையென்(று) ஐந்தும் - தொகையொடு
மூத்தார்
இருந்துழி வேண்டார் முது நூலுள்
யாத்தார்
அறிவினர் ஆய்ந்து... (83)
என்கிறார்
இந்நூலின் ஆசிரியர் காரியாசான். அதாவது, நீதி புகட்டுவதற்காக ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருப்பொருள்களை எடுத்துக்கொள்ளும் இந்நூலாசிரியர், பெரியோர் கூடியிருக்குமிடத்தில் சிரித்தல், இரகசியப் பேச்சுப் பேசுதல், நட்பினருக்கும் உறவுகளுக்கும் சார்பாக நலம் பேசுதல், ஆகாதவருக்குப் பகைமை பேசுதல், பாட்டுக்கு உரை சொல்லுதல் ஆகிய ஐந்து செயல்களையும் அறிவுடையோர் சபையில் தவிர்ப்பது நல்லது என்கிறார்.
ஆயினும்,
அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, மேனாள் முதலமைச்சரும், தி.மு.க.
தலைவருமான மு.க. ஸ்டாலின்
அவர்களைக் கேலி செய்யும் வகையில் முதலமைச்சரின் உடல்மொழி அமைந்திருந்ததாக எழுந்த விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இது
குறித்து அரசுத் தரப்பில் ‘அவ்வாறு வெளிப்பட்ட உடல்மொழியில் எவ்வித உள்நோக்கமும் இல்லை’ என்று விளக்கமளிக்கப்பட்ட போதிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது ‘எக்ஸ்’ (X) தளப்பதிவில்
சுட்டிக்காட்டியுள்ள கருத்துகள் மிகவும் ஆழமானவை. “சட்டமன்றம் போன்ற உயரிய மன்றங்களில் அரசையும் தலைவர்களையும் வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் பின்பற்றும் உடல் மொழியானது மிகுந்த கண்ணியமான அணுகுமுறையாக இருக்கவேண்டும்” என்றும்,
“அது மனித மாண்புகளுக்கு எதிரானதாக உருவெடுக்கக்கூடாது” என்றும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல்
களத்தில் கொள்கை சார்ந்த கூர்மையான விமர்சனங்களும், சித்தாந்த முரண்பாடுகளும் தவிர்க்க முடியாதவை; அவை சனநாயகத்தின் ஆரோக்கியமான கூறுகளாகும். ஆனால், ஒரு தனிநபரின் ‘தன்மதிப்பை’ எள்ளி
நகையாடும் விதத்திலோ அல்லது மனத்தைக் காயப்படுத்தும் விதத்திலோ அமையும் உடல்மொழியானது சனநாயகப் பண்பாட்டிற்கு முற்றிலும் உகந்ததல்ல.
அதிகாரம்,
கல்வி, செல்வாக்கு, பொருளாதாரம் என எவ்விதப் பின்னணியும்
இல்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை எந்தச் சூழலிலும் ஏற்புடையதல்ல எனும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், அகவையில் மூத்த சான்றோர்களும் வீற்றிருக்கும் மன்றங்களில் அதற்கான மரியாதை காக்கப்பட வேண்டும். ‘மூத்தோரை மதித்தல்’
என்பது தமிழர் பண்பாட்டின் தலையாய அறமும், மனித மாண்புகளின் உன்னதமான கூறுகளில் ஒன்றுமாகும். ஒருவரைச் சொல்லால் காயப்படுத்துவதைக் காட்டிலும், ஏளனமான உடல்மொழியால் காயப்படுத்துவது அவரது தன்மானத்தை வெகுவாகப் பாதிக்கும்.
உளவியல்
முறையில் நோக்குகையில், மனித உடல்மொழி ஐந்து முக்கியப் பங்களிப்புகளைச் செய்கிறது: 1. மீள வலியுறுத்தல் (Repetition) - நாம்
சொல்லும் வார்த்தைகளுக்கு மேலும் வலுசேர்ப்பது; 2. முரண்படுதல் (Contradiction)- வாயால்
ஒன்று பேசிவிட்டு, உடல்மொழியால் அதற்கு மாறான உணர்வை வெளிப்படுத்துவது (எடுத்துக்காட்டாக ‘சரி’ என்று சொல்லிக்கொண்டே தலையை எதிர்மறையாக அசைப்பது); 3. பதிலீடு செய்தல் (Substitution) - சொற்களே
இன்றி, முகபாவனை மூலமாகவே ஒரு கருத்தைப் பதிவுசெய்வது; 4. நிரப்புதல் (Complementing) - பேசும்
வார்த்தைகளுக்குக் கூடுதல் உணர்வைச் சேர்ப்பது; 5. அழுத்தமளித்தல் (Accenting) - ஒரு
கருத்தின் முக்கியத்துவத்தை உடலசைவு மூலம் சுட்டிக்காட்டுவது என்பதாகும்.
பேசுபவர்
தனது மனத்திலுள்ள உண்மையான எண்ணங்களை மறைக்க முயன்றாலும், அறியாமலேயே வெளிப்படும் அவரது இயற்கையான உடல் மொழியை வைத்து அவரது உண்மையான எண்ணத்தை எதிரில் இருப்பவர் எளிதில் கணித்துவிட முடியும். எனவேதான், வாய்மொழியாகக் கூறப்படும் வார்த்தைகளைக் காட்டிலும், சொற்களற்ற உடல் மொழியே மக்களின் மனசாட்சியை நேரடியாகச் சென்றடைகிறது. அரசியல் மேடைகளில் வெளிப்படும் எதிர்மறை உடல் அசைவுகள், கூர்மையான கேலிச் சிரிப்புகள், அலட்சியமான உடலமைப்புகள் போன்றவை அதிகாரச் செருக்கையோ அல்லது மதியீனத்தையோ மட்டுமே எதிரொலிக்கும்.
உடல்
மொழி என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி, நிறுவனங்களில் பணியாற்றும் தலைவர்கள், மேலாளர்கள் மற்றும் சாமானிய ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது.
அது
நம்பிக்கையை வளர்க்கும்; அதாவது, சரியான விழித்தொடர்பு (Eye contact),
திறந்த நிலையிலான உடலமைப்பு ஆகியவை மற்றவர்களிடம் நம்பிக்கையையும் இணக்கத்தையும் உருவாக்கும். அது பதற்றத்தைக் கட்டுப்படுத்தும்; குறிப்பாக, பதற்றமான சூழலில் விரைவான கை அசைவுகளையும், வேகமான
நடையையும் தவிர்த்து, அமைதியான உடல்மொழியைக் கையாளும்போது சுற்றியிருப்பவர்களுக்கும் அது நேர்மறை ஆற்றலை அளிக்கும். அது கேட்கும் திறனை வளர்க்கும்; அதாவது, ஒருவர் பேசும்போது அவருக்கு முழு கவனம் அளிப்பது, இலேசாகத் தலை அசைப்பது போன்றவை நாம் அவரை மதிப்பதை உணர்த்தும்; மாறாக, பேசும்போது வேறு பக்கம் பார்ப்பது அல்லது அலட்சியமாக அமர்வது தொடர்பாடலை முற்றிலுமாகச் சீர்குலைக்கும்.
ஒரு
நல்ல தலைவர் என்பவர் வார்த்தைகளால் மட்டுமன்றி, தனது ஒட்டுமொத்த நடத்தையினாலும், உடல்மொழியினாலும் மற்றவர்களுக்கு மரியாதையையும் நம்பிக்கையையும் ஊட்டுபவராக இருக்கவேண்டும். ஆகவே, மாண்புமிகு
முதலமைச்சர் போன்ற உயரியப் பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள், எத்தகைய உணர்ச்சிவசப்படும் சூழலிலும் தங்களின் உடல்மொழியில் மிகுந்த கவனத்துடனும் முதிர்ச்சியுடனும் இருப்பது அவசியமாகும். ஏனெனில், தலைவர்களின் ஒவ்வோர் அசைவும் சமூகத்தால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது; அதுவே மக்களுக்கான வழிகாட்டியாகவும் மாறுகிறது.
ஐயன்
வள்ளுவர் குறிப்பிடுவதுபோல,
‘ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும்
வேந்து கெடும்’
(குறள் 899).
அதாவது,
பெரியவர்களும் சான்றோர்களும் கூடிய அவையில் அவர்கள் முன்னிலையில் நாம் நடந்துகொள்ளும் உடல் மொழியில் கண்ணியம் தவறி, அவர்கள் கோபப்படும்படி நடந்து கொண்டால், எவ்வளவு பெரிய அரசராக இருந்தாலும் மதிப்பிழந்து
போவார் என்கிறார் வள்ளுவர்.
இறுதியாக,
தனிநபர் விமர்சனங்களைத் தாண்டி, மனித மாண்பையும் சுயமரியாதையையும் காக்கும் பண்பட்ட உடல் மொழியே சிறந்த தலைமைத்துவத்திற்கும், நாகரிகமான அரசியலுக்கும், ஆரோக்கியமான சமூகத்திற்கும் நலம் பயப்பதாக அமையும்.
சொற்களில்
மட்டுமன்றி, நமது செயல்பாடுகளிலும் உடல்மொழியிலும் கண்ணியத்தைப் பேணுவதே பண்பட்ட சனநாயகத்தின் அடையாளமாகும்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்