அக்டோபர் 4-ஆம் நாள் 2020-ஆம் ஆண்டு, புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருநாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (Fratelli Tutti என்னும் சமூகச் சுற்றுமடலை வெளியிட்டார். சகோதரத்துவமும் சமூக நட்பும் இவ்வுலக வாழ்வின் சுழற்சியில் பொருளற்றதாக மாறிவரும் சூழலில், சகோதரத்துவத்திலும் சமூக அக்கறையிலும் திறந்த இதயத்தோடு நம் சகோதர-சகோதரிகளை அணுகும் சமூக நட்புறவை மீண்டும் உயர்த்திப்பிடிக்க, தாங்கிப் பிடிக்க திருத்தந்தை அழைப்பு விடுக்கின்றார். நாம் அனைவரும் உடன்பிறந்த சகோதர-சகோதரிகள்; நாம் உறவுச் சமூகத்தின் ஓர் அங்கம், என்னும் தவிர்க்க முடியாத தும் ஆசிருக்கும் விழிப்புணர்வை இச்சமூகச் சுற்றுமடல் வழியாகத் திருத்தந்தை நம்மிடையே ஏற்படுத்தியுள்ளார்.
பிணக்குகளும்
உறவு
விரிசல்களும்:
முன்பெல்லாம் சகோதர-சகோதரிகளின் அல்லது அருகாமையில் வாழ்வோரிடையே ஏற்படும் பிணக்குகள், உறவு விரிசல்கள், குழாயடிச் சண்டைகளாக, ரேஷன் கடைச் சண்டைகளாக, காய்கறிகள் வாங்குமிடத்தில், வாழ்விடத்தில் ஏற்படும் சண்டைகளாக அமைந்திருந்தன. இப்பொழுது உறவுச்சண்டைகளும், உறவு விரிசல்களும், இணையத்திலும், புலனம் (Whatsapp),
Twitter (கொடுக்கி),
Facebook (முகநூல்),
Instagram (படவரி)
போன்ற செயலிகளிலும், தொலைக்காட்சியிலும் நடைபெறுவதை நாம் மறுக்க இயலாது. முன்பெல்லாம் நான்கு சுவர்களுக்கு உள்ளாகப் பேசப்பட்ட கருத்து முரண்பாடுகள் இன்று பொதுவிவாதப் பொருளாகி, குற்றம் சாட்டப்பட்டவரின் ஆளுமையைச் சிதைத்து, பொதுத்தளங்களில் வெளியிடப்படுகிறது. அது இன்றைய நற்செய்தியின் படிப்பினைகளுக்கு எதிராகவே அமைகின்றது. இன்றைய நற்செய்தியின் தொடக்க வரிகள், “உங்கள் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது. உங்களது உறவு தொடரும்”
(மத் 16: 15-16) இவ்வாறு அமைகின்றன.
சகோதரத்துவ உரையாடல்:
சகோதரத்துவ உரையாடலே நம் சமூக உறவை உயிர்ப்பிக்கும் என்பதே இன்றைய நற்செய்தியின் ஒற்றை வரிச் செய்தி. இன்றைய நற்செய்தியை வாசிக்கின்றபொழுது ‘பிறரின் தனிப்பட்ட வாழ்வில், தனிமைக்கான உரிமையில் (Right to privacy)
- தனிப்பட்ட வாழ்க்கையில் (Private life)
தலையிட எனக்கு உரிமை உள்ளதா?’ என்னும் கேள்வியை எழுப்புகின்றது. பிறரின் தனிப்பட்ட வாழ்வில் நான் குறுக்கிட்டு, அவரை வாஞ்சையோடு அணுகி, அவரை நல்வழிப்படுத்திடும் முயற்சியில் எனக்கு எங்கிருந்து அதிகாரம் தரப்படுகின்றது? எத்தகைய அதிகாரம் நான் பெற்றிருக்கிறேன்? இவ்வன்பு முயற்சியில், உறவை உயிர்ப்பிக்க நாம் எடுக்கும் முதல் அடியில் அடிநாதமாய் இருப்பது ‘அவர் என் சகோதரன்/சகோதரி.’ ஏனென்றால், அவர்கள் இயேசுவின் மறுமுகம்
என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நம்
சகோதர-சகோதரிகளைப் பற்றிய பொறுப்புணர்வையும், அவர்களுக்குச் செவிமடுக்கும் திறந்த மனப்பான்மையையும் நாம் இழந்து கொண்டிருக்கின்றோம். என்னுடைய சகோதரன் எனக்கு எதிராகத் தவறு செய்தால் அதனால் வெறுப்பையும் பகைமையையும் மனத்தில் நிறுத்தி, அறையில் நான் தாழிட்டு முடங்கிவிடாமல், சகோதரனைச் சந்தித்து, யார் சரி? யார் தவறு? யார் பக்கம் நியாயம்? என்று விவாதிக்காமல், ‘தவறிழைத்த சகோதரனைத் தேடிச் செல்’ என்று இயேசு அறிவுறுத்துகின்றார்.
நமது
சகோதரத்துவ எண்ணங்களே நமது உரையாடலின் தொடக்கமாய் அமைந்திடவேண்டும். பிரதிபலன்களையும், தன்னிலை வாழ்விற்கான பலன்களையும், அரசியல் நோக்கத்தையும், எதிர்பார்த்து இவ்வுரையாடல்கள் அமைந்திடக்கூடாது. என் சகோதரர்-சகோதரியின் வாழ்வில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்து, கண்ணீரைத் துடைத்து, புதிய மறுமலர்ச்சியை அன்பினால் வழங்கிட முடியும் என்னும் மனநிலையைத் தாங்கியே நாம் அவர்களின் தவறுகளைத் திருத்தும் முன்னெடுப்புகளை எடுக்கவேண்டும்.
முதல் வாசகம்:
இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியல் இறைவாக்கினரிடம் கடவுள் கூறுவதுபோல, நாம் சகோதர-சகோதரியின் வாழ்வில் மாற்றத்தை / திருத்தத்தைக் காண உதவிடவில்லையென்றால் நாம் அவர்களின் அழிவிற்கு ஒரு காரணராகின்றோம். அவ்வாறு செய்யும்பொழுது நமக்குள் பல பயன்கள் ஏற்படுவதுண்டு,
நான் இவ்வாறு பிறரைத் திருத்த முற்படும்பொழுது எப்படிப் பிறரால் புரிந்துகொள்ளப்படுவேன்? என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்னை ஏமாளி, அதிகப் பிரசங்கி, பிழைக்கத் தெரியாதவன், கோழை என்று முத்திரையிடுவார்களா? போன்ற கேள்விகளும் பயங்களும் இயல்பாக நம்மில் எழுவதுண்டு. இக்கேள்விகளை, மனக்குழப்பங்களைத் தாண்டி செயல்படுவதே கிறித்தவ வாழ்வு.
இறைத்தந்தை சிறந்த
முன்னுதாரணம்:
தவறிழைத்த சகோதரனைத் திருத்துவதில் இறைத்தந்தையே ஆகச்சிறந்த உதாரணம். படைப்பின் தொடக்கத்தில் ஆதாம் விலக்கப்பட்ட கனியை உண்டு, வெட்கமுற்று, இறைவனின் பார்வையிலிருந்து ஓடி ஒளிகின்றான். இறைவன் அவனைத் தேடிச்
செல்கின்றார். “ஆதாமே, நீ எங்கே இருக்கின்றாய்?
என்ன செய்தாய்?” என அவனைக் காண,
உரையாட விரும்புகின்றார் (தொநூ 3:8-9). தவறிழைத்தவர்கள் குற்ற உணர்வோடும் பய உணர்வோடும் பொது
இடங்களில் மனிதர்களோடு உரையாடுவதற்கு அஞ்சி, பொது இடங்களில் தங்களின் பிரசன்னத்தைக் குறைத்து, மறைந்து வாழவே முற்படுவார்கள். எனவேதான், தவறிழைத்து வருந்துகின்ற சகோதரனைத் தேடிச்செல்ல நற்செய்தி அறிவுறுத்துகின்றது. ‘என் சகோதரனுக்கு நான் என்ன காவலாளியா? அவனை நான் ஏன் தேடிச் செல்லவேண்டும்?’ என்னும் காயினின் கேள்வி நமது உள்ளத்தில் எழுவது கிறித்தவ மதிப்பீட்டிற்கு எதிரானது.
எனவே,
தவறிழைத்த என் சகோதரனைத் தேடிச் சென்று அவரோடு அமர்ந்து அவருக்குச் செவிமடுத்தால், அதுவே அவரை நமது இறைச்சமூகத்திற்கு வரவேற்பதற்கான முதன்மையான செயல்பாடாக அமையும். ஒரு சகோதரன், தான் சார்ந்திருக்கும் இறைச்சமூகத்தை விட்டு விலகி நிற்கும்பொழுது, இயேசுவின் மறையுடலாகிய திரு அவையின் உறுப்பினராகிய அவர் பிரிந்து வாழும்பொழுது முழு உடலும், அதன் எல்லா உறுப்புகளும் துன்புறும் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். உடலின் ஒரு பகுதி நோயுற்றால், செயலிழந்தால் உடல் முழுவதும் அவ்வலியை உண்டாக்குமல்லவா? எனவே, கிறிஸ்துவின் உடலாகிய எந்த ஒரு தனி மனிதனும் உறுப்பினரும் நலமுடனும் மகிழ்வுடனும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழத் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பேற்கவேண்டும் (1கொரி 12:25-26).
இருவரும்
தனித்து இருக்கும் பொழுது அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தனிமையில் இருக்கும் பொழுதுதான் ஆதாமை ஆண்டவர் கண்டிக்கின்றார். அன்பினால் உந்தப்பட்டு ஒருவரின் குறைகளைத் தனிமையிலும், நிறைகளைப் பொதுவிலும் கூற நாம் பழகினால் நமது உறவுகள் பலம்பெறும். பல நேரங்களில் இது
மாற்றாகவே நடைபெறுகின்றது. ஒரு மனிதனின் குறையை, தவற்றை, தீமையான செயல்பாடுகளை ஊர் முழுக்கப் பேசிப் பெரிதாக்கும் நமக்குப் பிறரின் நிறைகளைக் காண நேரமில்லை. உரோ 13:10-இல் குறிப்பிடுவதுபோல அன்பு எந்த
ஒரு மனிதனையும் காயப்படுத்துவதில்லை.
உறவு ஒன்றில்
இறைப்பிரசன்னம்:
உறவு ஒன்றிப்பை முதன்மைப்படுத்திச் செயல்படும் இறைச்சமூகத்தில் இறைவன் பிரசன்னமாயிருக்கின்றார். இரண்டு மூன்று பேர் கூடியிருக்கும் பொழுது ஆண்டவர் அவர்கள் மத்தியில் செப நேரங்களில் மட்டுமல்ல, உறவு உயிர்ப்பிற்கான முன்னெடுப்புகளிலும், நீதிக்கான போராட்டங்களிலும், விளிம்பு நிலை மக்களுக்கான நிலைப்பாடுகளிலும் நாம் ஒன்றுகூடி, ஒருமனத்தவராய் செயல்படும் பொழுது இறைவன் அவர்களின் மத்தியில் உடனிருக்கின்றார். இவ்விறைச்சமூகம் கூடிவருவது தற்செயலாகவோ, தனிப்பட்ட தேவைகளுக்காகவோ, வன்முறைக்காகவோ, ஏமாற்றுதலினாலோ, சுயநலத்தினாலோ, பயத்தினாலோ அல்ல; மாறாக, இயேசுவின் பெயரினால் ஒன்றுகூடி இறையாட்சி சமூகத்தை உருவாக்குவதே இதன் மைய நோக்கம்.
இயேசுவின் பெயரினால்
கூடி
வருவோம்:
இயேசுவின் பெயர் என்பது வாழ்வைத் தருகின்ற பெயர். இயேசுவின் மனநிலை மன்னிப்பின், அன்பின், இரக்கத்தின் மனநிலை. எனவே, இயேசுவின் பெயர் நம் மத்தியில் ஒன்றிப்பையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த வேண்டும். இங்குப் பிரிவினைகளுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும் இடமில்லை. எனவே, நமது கூடுகைகள், ஒன்றிப்புக் கூட்டங்கள், விழாக்கள் இவையெல்லாம் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். எனவே, சகோதரத்துவ உறவில் முதலீடு செய்வோம். உலகில் சகோதரத்துவமும் சமூக அன்பும் செழித்தோங்கும் இடமாகக் கிறித்தவச் சமூகம் வளர்வதில் நம் அனைவருக்கும் பொறுப்பும்
கடமையும் உண்டு. நம்பிக்கை நிறைந்த நம் இறைச்சமூகத்தில் சகோதர-சகோதரிகள் மீதும் அக்கறைகொள்வோம்.