news-details
சிறப்புக்கட்டுரை
சமூக விழுமியங்களும் சினிமாக்களின் தாக்கமும்

அண்மைக்காலமாக, தமிழ்நாட்டு அரசியலில் தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர்சிங்கப்பெண்என்ற மகளிர் பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கி வைக்கும்போது, ‘குற்றச்செயல்களுக்கு அரசு மட்டுமே காரணமல்ல; தனிமனித ஒழுக்கமும் அதில் அடங்கியிருக்கிறதுஎன்று குறிப்பிட்டது சிந்திக்கத்தக்கது. இருப்பினும், தனிமனித ஒழுக்கம் சீர்குலைந்து போவதன் பின்னணியில் ஊடகங்கள் குறிப்பாக, திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களின் தாக்கம் மறுக்க முடியாததாக உள்ளன. காட்சி ஊடகங்கள் மனித மனத்தை மிகவும் எளிதில் பாதிக்கின்றன. உளவியல் ரீதியாக, நாம் பார்த்துக் கற்றுக்கொள்ளும் இயல்புடையவர்கள்; அதைச் சமூகம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவற்றிலிருந்து கிரகித்துக் கொள்கிறோம்.

திரைப்படங்களிலும் தொடர்களிலும் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் நம் மனத்தில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. அந்த உணர்ச்சிகரமான காட்சிகள் நம்முடைய எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் அறியாமலே மாற்றியமைக்கின்றன. இதன் காரணமாகத்தான் அவை நம்முடைய தனிமனிதச் செயல்பாட்டில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தற்காலத் திரைப்படங்களில் வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் பெருகிவருவது சமூகக் கண்ணோட்டத்தை மிகவும் சீர்குலைக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, திரையில் ஒருவரைக் கொலை செய்வது என்பது சாதாரண செயல் என்றும், அதிலிருந்து தப்பிக்கவும் முடியும்; அதிலும் குடும்பமாகக்கூட கொன்றாலும் பரவாயில்லை என்பது போலக்  காட்டும் காட்சிகள், வன்முறையை இயல்பாக்கிவிடுகின்றன. இந்தப் போக்கைத் தடுப்பதில் திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (sensor board) பொறுப்பு மிகவும் முக்கியமானது. சிறிய தவறான வார்த்தைகளைக்கூடத் தடுத்து நிறுத்தும்  இவ்வாரியம், சமூகத்தை அச்சுறுத்தும் வன்முறைக் காட்சிகளுக்கும், ஆபாசமான உரையாடல்களுக்கும் அனுமதி அளிப்பது என்பது கேள்விக்குறியாகிறது.

இன்றைய இளைய தலைமுறையினருக்குக் காட்சி ஊடகங்களின் மீதுள்ள ஈர்ப்பிற்குப் பல உளவியல் காரணங்கள் உள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் அவர்கள் எளிதில் தகவல்களைப் பெறவும், காட்சி வழியான கதைகளை விரும்புவதாலும் இந்த ஈர்ப்பு ஏற்படுகிறது. இது அவர்களுக்கு உடனடிக் கவனச் சிதறலைத் தந்து, சில நேரங்களில் உண்மை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தவும் செய்யும். அவர்களை மீட்டெடுக்க, பள்ளிகளிலும் வீடுகளிலும் காட்சி ஊடகங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிப் பேசும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும். ஊடகக் கல்வி வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல், அது பள்ளிகளில் கட்டாயமான செயல்திட்டமாகச் செயல்படுத்தப்படவேண்டும். இதற்குப் பள்ளிகளின் நிர்வாகம், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அனைவரும் இதனைத் தங்கள் தலையாய பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, ஊடகக் கல்வியை மாணவர்களிடம் கொண்டுசேர்க்க முழுமூச்சோடு செயல்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

எனவேதான், இன்றைய பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியரின் பங்களிப்பும் அதற்கான பொறுப்பும் இதில் மிக முக்கியமானது. இன்றைய கல்விச்சூழலில், ஆசிரியர் தங்களது வகுப்பறையில் சினிமாக்கள் குறித்துப் பேசவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, இதுசார்ந்த நுட்பமான திரைசார்ந்த அறிவு ஆசிரியருக்குத் தேவைப்படுகிறது; அதைப் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. ஊடகக் கல்வியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தி, அவர்கள் திரையில் பார்ப்பதைச் சரியாக விமர்சிக்கவும், உண்மையை உணர்ந்துகொள்ளவும் பயிற்சி அளிக்க வேண்டும்.