இதமான மாலை நேரம். சூரியன் தனது பொற்கதிர்களை மெதுவாக மடக்கிக்கொண்டு, வானத்தின் மேற்குக் கரையில் விடைபெறும் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தான்.
வழக்கம்போல
மாலை நடைப்பயணத்தின் இடைவெளியில் இரயில் நிலைய பிளாட்பாரத்தின் இருக்கையில் அமர்ந்தேன்.
வேலையில் இருந்து ஓய்வு பெற்றாச்சு. பொழுது
போகவேண்டும் அல்லவா!
இரயில்
நிலைய பிளாட்பாரத்தின் இருக்கையில் அமரும் அந்தச் சில நிமிடங்கள் எனக்குப் பொக்கிசமானவை!
அங்கே நடந்து செல்லும் மனிதர்கள், அவர்கள் பேசும் வார்த்தைகள், சிரிப்புகள், அவசரங்கள்
எல்லாவற்றையும் அமைதியாக இரசிப்பேன். சில நேரங்களில் அவை எனக்குப் பாடங்களாகவும், சில
நேரங்களில் புதிய உத்வேகமாகவும் மாறிவிடும்.
அப்போது
சென்னை முதல் மதுரை நோக்கி ‘வந்தே பாரத்’ இரயில் கம்பீரமாக வந்து நின்றது. ‘நான்தான்
மற்ற இரயில்களை ஒப்பிடும்போது இப்போது அதிவேக இரயில்’ என்ற
பெருமிதம் அதன் தோற்றத்திலேயே தெரிந்தது. சன்னல் வழியே பயணிகளின் முகங்களைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். சில முகங்களில் உற்சாகம், சில முகங்களில் சோர்வு, சில முகங்களில் எதிர்பார்ப்பு,
சிரிப்பு, விளையாட்டு.
இரயில்
புறப்படுவதற்கான நேரம் வந்தது. ஒரு நீண்ட ஹார்ன் ஒலியுடன் ‘வந்தே பாரத்’ எனக்கு ‘டாட்டா’ காட்டுவதுபோல
மெல்ல நகரத் தொடங்கியது.
‘தினமும்
இத்தனை ஆயிரம் மனிதர்களின் உணர்வுகளையும் கனவுகளையும் கண்ணீரையும் சுமந்து செல்கிறாயே...
உனக்குச் சுமையாக இல்லையா?’ என்று மனத்திற்குள் இரயிலிடம் கேட்டேன். அது பதில் சொல்லாமல்
தூரத்தில் மறைந்தது. சில நிமிடங்களில் சென்னை எழும்பூர் செல்லும் ‘செங்கோட்டை எக்ஸ்பிரஸ்’ முதல் நடைமேடையில் வந்து சேர்ந்தது. நான் அமர்ந்திருந்த
இடத்திற்கு எதிரே முதல் வகுப்புப் பெட்டி நின்றது. அப்போது ஓர் இளைஞன் அவசரமாகப் பெட்டியிலிருந்து
இறங்கினான். முப்பது வயது இருக்கும். சுருட்டை முடி. காதில் ஹெட்போன். டி-ஷர்ட், டிரௌசர்.
ஏதோ ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன்
போலத் தோன்றினான்.
ஒரு
தண்ணீர் பாட்டில் வாங்கியவன், யாரையோ எதிர்பார்த்து நின்றான். அவனுடைய முகத்தில் அவசரம்
தெரிந்தது. கைப்பேசியை எடுத்துப் பேசினான். ‘சீக்கிரம் வாங்கப்பா... வண்டி கிளம்பப்
போகுது!’ இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்தான். ‘எங்க இருக்கீங்க? இன்னும்
இரண்டு நிமிடத்துல இரயில் கிளம்பிடும்!’ அவன்
கண்கள் இரு திசைகளிலும் பதற்றமாக ஓடின. அப்போது
தூரத்தில் இருந்து ஒரு ஸ்விக்கி டெலிவரி பாய் மூச்சிரைக்க ஓடிவந்தான். வயது இருபத்திரண்டு
இருக்கும். “சார், நீங்கதானே?” என்று பெயரை உறுதி செய்துவிட்டு உணவுப் பொதியைக் கையில்
கொடுத்தான்.
ஆர்டரைப்
பெற்றுக்கொண்ட இளைஞன் நிம்மதியாகப் பெட்டிக்குள் ஏறிச்சென்றான். ஆனால், டெலிவரி பையனின்
மூச்சிரைப்பு மட்டும் அடங்கவில்லை. அவன் என் அருகில் வந்து அமர்ந்தான். அவனைப் பார்த்தவுடனே
எனக்கே மூச்சு முட்டியது. ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்று என் பாட்டிலை நீட்டினேன்.
நன்றியுடன் வாங்கிக் குடித்தான். சிறிது நேரம்
கழித்து கேட்டேன். “என்ன ஆச்சு?”
“மொத்தம்
ஐந்து டெலிவரி சார். முதல் இரயில் பெட்டியில்
இருந்து இறுதிப் பெட்டிவரை செல்ல வேண்டும். நீண்ட தூரம். வண்டி கிளம்புறதுக்கு முன்னாடி
எல்லாத்தையும் கொடுக்கணும். ஓடினாத்தான் முடியும்.” மூச்சிரைத்துக் கொண்டிருந்தான்.
“உன்
பெயர் என்ன?”
“ராஜா.”
“படிச்சிருக்கியா?”
அவன்
உடனே பதில் சொல்லவில்லை. அவனது கண்கள் தூரத்தில் ஏதோ ஒன்றைத் தேடின. அந்தச் சில நொடிகளில்
அவன் மனம் தனது கிராமத்திற்கே சென்று வந்ததுபோல இருந்தது.
கூலி
வேலை செய்யும் அப்பா, அம்மா. ஒரே தங்கை. ‘என் மகன் நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும்’ என்று கனவு கண்ட பெற்றோர். ஆனால், ராஜாவுக்குப் படிப்பு
சரியாக அமையவில்லை. சூழ்நிலை, நண்பர்கள், வயதின் அறியாமை, பெற்றோரின் ‘படி... படி’ என்ற நச்சரிப்பு.
வீட்டில்
இருக்கவே பிடிக்கவில்லை. நிம்மதியும் இல்லை. பத்தாம் வகுப்பைத் தாண்டியவுடன் வீட்டை
விட்டு வெளியேறினேன். சென்னை நகரம் நிம்மதி கொடுக்கும் என ஓடிவந்தேன். சென்னையில் பல
வேலைகள். கிளீனர், ஹோட்டல் சர்வர்... இப்படிப் பல. பல தோல்விகள், பல ஏமாற்றங்கள்... அந்த நினைவுகளிலிருந்து மீண்டவன் மெதுவாகப் பேசத்
தொடங்கினான்.
“இப்போ
டிப்ளமோ இன்ஜினியரிங் கரஸ்பாண்டன்ஸ் படிச்சுக்கிட்டு இருக்கேன் சார்.”
“அப்புறம்
ஏன் இந்த வேலை?”
அவன்
சிரித்தான். “சாப்பிட, படிக்க பணம் வேணுமே சார்! படிக்கிற வயசுல படிக்கலை சார். வீட்டை
விட்டு ஓடி வந்துட்டேன். இப்பதான் படிப்போட அருமை புரியுது. வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டுட்டேன்.
படிப்பு ரொம்ப முக்கியம் சார். படிக்கணும்னு முடிவு எடுத்தேன். ஸ்விக்கி பார்ட் டைம்.
இப்போ என்னைப்போலப் படிக்கணும்னு நினைக்கிற நட்பு வட்டம் ஒரே ரூம்ல தங்கி இருக்கோம்.”
சில
நொடிகள் அமைதி. பிறகு அவன் சொன்ன வார்த்தைகள் என்னை ஆழமாகத் தொட்டன.
“ஸ்விக்கி
பாயா நான் தினமும் நிறையப் பேரை சந்திக்கிறேன் சார். அவுங்க பெரும்பாலானவங்க நல்லாப்
படிச்சு நல்ல வேலையில இருக்கிறவங்க. படிச்சவங்க. பெரிய அபார்ட்மெண்ட்ல இருக்காங்க.
வேலை பார்க்குறது பெரிய பெரிய ஆபீஸ் கட்டடங்கள். வசதியான வாழ்க்கை. அவங்களோட வசதியைக்
கண்டு எனக்குப் பொறாமை இல்ல சார். வசதியான வாழ்க்கைக்குப் பணம் வேணும் சார். அது மரியாதை,
அங்கீகாரம். அதற்குப் படிப்பு, உழைப்பு ரெண்டும் ரொம்ப முக்கியம். ஒவ்வோர் உணவுப் பொட்டலங்களைக்
கொடுக்கும்போது சந்திக்கிற மனிதர்கள் எனக்குச் சொல்லிக்கொடுக்கிற பாடம் இதுதான். அதுவே
எனக்கு உத்வேகம். அவங்களோட நம்பிக்கை, அவங்களோட மெச்சூரிட்டி, அவங்களோட மனவுறுதி. அதுதான்
சார் என்னைக் கவருது. அதுவே என் இலக்கை நோக்கி ஓடச்சொல்லுது.”
அவன்
கண்களில் ஓர் ஒளி தெரிந்தது. “அவங்கதான் சார் என் மோட்டிவேஷன்; அவங்கதான் என் கனவுகளுக்குச்
சிறகுகள்; நானும் நல்லா படிச்சு, ஒருநாள் கான்ஃபிடன்ட் ஆன மனுஷனா நிற்கணும் சார். கண்டிப்பா
படிச்சு முடிப்பேன்.”
அந்த
வார்த்தைகளில் சந்தேகமில்லை. உறுதி மட்டுமே இருந்தது. அப்போது அவனது கைப்பேசி ஒலித்தது.
“அடுத்த ஆர்டர் வந்துருச்சு சார்.”
எழுந்து
நின்றான். “நான் கிளம்புறேன்.” சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றான். அவன் சென்ற பாதையை நான் நீண்ட நேரம் பார்த்துக்
கொண்டிருந்தேன். அவன் ஒரு புள்ளியாய் மாறி என் இதயத்திற்குள் மறைந்தான். எனக்குள் ஓர்
உணர்வு எழுந்தது. அது ஒரு சாதாரண இளைஞன் நடந்து சென்ற பாதை அல்ல; ஒரு கனவு நடந்துசென்ற
பாதை; ஓர் எதிர்காலம் நடந்துசென்ற பாதை; ஒரு வெற்றி நடந்துசென்ற பாதை.
மாலை
இரவாக மாறியது. இரயில் நிலைய விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிரத் தொடங்கின. அந்த ஒளிகளைப்
பார்த்தபோது எனக்கு ராஜாவின் மனத்தில் எரிந்துகொண்டிருந்த தீபமே நினைவுக்கு வந்தது.
அந்தத் தீபம் அணையாது. ஏனெனில், அது வெறும் வெளிச்சமல்ல... ஒரு மனிதனின் எதிர்காலத்தை
நோக்கிப் பறக்கத் தயாராக இருக்கும் கனவுகளின் சிறகுகள்!