news-details
சிறப்புக்கட்டுரை
ஆனால்... வடுக்கள் இன்னமும் பேசுகின்றன! (வாழ்வின் மறுபக்கம்-3)

இரவின் அமைதியில் சில நேரங்களில் சுவர்களில் மோதி எதிரொலிக்கும் கடிகாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம்கூட பெரும் இடிமுழக்கமாக உருவெடுப்பது உண்டு. ஆனால், அதைவிட அச்சுறுத்தலானது நம் இதயத்திற்கு நெருக்கமான மனிதரின் வாயிலிருந்து புறப்படும் பேச்சற்ற மௌனம்.

சில காயங்களுக்குச் சத்தம் இருக்கும்; சில காயங்களுக்குச் சத்தமே இருக்காது. கத்தியால் ஏற்பட்ட காயத்தைப் பார்க்கலாம்; கடுமையான வார்த்தையால் ஏற்பட்ட காயத்தை நினைவுகூரலாம். ஆனால், ஒருவர் நம்மிடம் பேசாமல் விட்டுச் சென்ற காயத்தை எங்கே போய் தேடுவது?

வடுக்கள் பெரும்பாலும் வார்த்தைகளால் ஏற்படுகின்றன. அதனால்தான் கடுமையான சொற்கள், அவமானப்படுத்துதல், திட்டுதல், கோபமான பேச்சு போன்றவை மட்டுமே மனித மனத்தைக் காயப்படுத்துவதாக எண்ணுகிறோம்.

சொல் என்பது ஒரு கொடை. அது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள மாபெரும் பொறுப்பு. சொற்களுக்கு வாசனை இல்லாமல் இருக்கலாம்; எடையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவற்றிற்குக் கத்தியைவிடக் கூர்மையான முனையும், அம்பைவிட ஆழமாகத் துளைக்கும் வலிமையும் உண்டு.

‘ஒரு சொல் கொல்லும்; ஒரு சொல் வெல்லும்’ என்பார்கள். அதனால்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,

‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு’ (குறள் 129)

என்று பதிவு செய்தார். ஆனால், இந்தக் குறளில் நாம் கவனிக்கத் தவறிய மறுபக்கம் ஒன்று உண்டு; அது நாவினால் சுட்ட வடு மட்டுமல்ல, நாவைத் திறக்காததால் ஏற்பட்ட வடுவும்கூட!

சில வடுக்கள் நாம் கேட்ட வார்த்தைகளால் வந்தவை; சில வடுக்கள் நாம் கேட்காத வார்த்தைகளால் வந்தவை. ஆம், சொல்லப்பட்ட வார்த்தையைவிட, சொல்லப்படவேண்டிய நேரத்தில் சொல்லப்படாத ஒரு வார்த்தையே மனித மனங்களை அதிகமாகக் காயப்படுத்துகிறது. ஒருவரைப் பேசாமல் ஒதுக்கிவிடுவதும், நேர்மையின் பக்கத்தில் நிற்கவேண்டிய இடத்தில் அமைதி காப்பதும் தண்டனையின் உச்சபட்ச வடிவம்!

ஒருவர் நம்மிடம் கோபமாகப் பேசியதைக்கூட ஏதோ ஒருநாளில் நாம் மறந்துவிடலாம்; கோபத்தின் காரணம் புரியும்போது மன்னிப்பும் வழங்கப்படலாம். ஆனால், நாம் அழுதபோது அருகில் இருந்தும் பேசாமல் இருந்தவர், நாம் எதிர்பார்த்தபோது வராமல் இருந்தவர், நாம் தோல்வியடைந்தபோது ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லாதவர், நம்மைப் பலரும் குற்றப்படுத்தியபோது நமக்காக ஒரு வார்த்தைகூட பேசாதவர் - இவர்களின் மௌனம் சொல்லப்பட்ட ஆயிரம் வார்த்தைகளைவிட ஆழமாகக் காயப்படுத்துகிறது.

‘பேசாதிருந்தீரோ? பேடிமை கொண்டீரோ?

சாத்திரங்கள் சொன்னீர்;

       சபையினிலே நீதி சொன்னீர்;

மாபாதகம் நடக்கும் போதினிலே மௌனமுற்றீர்!’

- மகாகவி பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ வரிகள் இவை. அநீதி நடக்கும் அவையில் மாபெரும் சான்றோர்களும் வீரர்களும் வாய்மூடி மௌனமாக இருந்த பேடிமையைக் கண்டு பாஞ்சாலி எழுப்பிய உணர்வுமிக்க அந்த வினாக்கள் இன்றளவும் அநீதிக்கு எதிராக ஒலிக்கும் சாட்டையடிகள்!

‘உங்களை நான் ரொம்ப நம்பினேன். என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகாவே தெரியும். அப்படி இருக்கும்போது ஒரு வார்த்தை எனக்காகப் பேசியிருக்கலாமே!’ - இந்த ஒரு வாக்கியத்திற்குள் எத்தனை ஆண்டுகளின் அன்பு இருக்கிறது! எத்தனை நம்பிக்கை இருக்கிறது! எத்தனை ஏமாற்றம் இருக்கிறது!

ஒரு குழந்தை பள்ளியில் தோல்வியடைந்து வீட்டிற்கு வருகிறது. தன் தந்தையிடம் ஏதோ சொல்ல வருகிறது. தந்தையோ கைப்பேசியில் மூழ்கியிருக்கிறார். ‘பிறகு பேசலாம்’ என்றுகூட சொல்லவில்லை; ஒரு பார்வையும் இல்லை. குழந்தை எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் செல்கிறது. அன்று வீட்டில் எந்தக் கடுமையான வார்த்தையும் பேசப்படவில்லை. ஆனால், ஓர் ஆறாத வடு உருவாகிவிட்டது. அந்தக் குழந்தை தந்தையிடம் எதிர்பார்த்தது ‘சரி பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற ஒரு வார்த்தையாகக்கூட இருக்கலாம். ஆனால், ‘நான் தோற்றபோது என்னுடன் யாரும் இல்லை’ என்ற அந்த வலி, அந்தக் குழந்தை வளர்ந்த பிறகும் தொடரலாம்.

ஒரு மகள் திருமணத்திற்குப் பிறகு தன் தாயிடம் தொலைப்பேசியில் கணவன் வீட்டில் சந்திக்கும் ஒரு பிரச்சினையைப் பகிர்ந்துகொள்கிறாள். அவளுக்குத் தீர்வு வேண்டியதில்லை; ‘நீ தனியாக இல்லை, நான் இருக்கிறேன்’ என்று தாய் சொல்லும் ஒரு வார்த்தை மட்டுமே. ஆனால் தாயோ, ‘அது உன் குடும்ப பிரச்சினை, நீயே பார்த்துக்கொள்’ என்று சொல்லி உரையாடலை முடித்துவிடுகிறார். அந்த மகள் அடுத்த முறை தனது கண்ணீரைத் தாயிடம் சொல்லாமல் போகலாம். அவள் தாயை வெறுப்பதால் அல்ல; தனது வலியை எடுத்துச் சென்றபோது, அங்கே தனக்கான இடம் இல்லை என்பதை உணர்ந்ததால்.

குடும்பங்களில் இப்படித்தான் பல மௌனங்கள் மெதுவாகச் சுவர்களாக மாறுகின்றன. பேசாமல் இருப்பது எப்போதும் அமைதி அல்ல; சில நேரங்களில் அது சொல்ல முடியாத கோபம், சில நேரங்களில் பழிவாங்குதல், சில நேரங்களில் ‘நீ எனக்கு முக்கியமில்லை’ என்று சொல்லும் வார்த்தையற்ற வன்முறை.

சமூகத்திலும் இந்த மௌனத்தின் வடுக்கள் ஆழமாகவே இருக்கின்றன. ஒருவரை அவமதிப்பது மட்டும் அநீதி அல்ல; அவருக்கு அநீதி நடக்கும்போது உண்மை தெரிந்தும் பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு கேள்விக்குரிய மௌனம். சில நேரங்களில் அநீதிக்கு எதிராகச் சொல்லப்படும் ஒரு வார்த்தை, ஒரு மனிதனுக்கு நீதியை மட்டும் தருவதில்லை; அவர் ‘இன்னும் தனியாக இல்லை’ என்ற நம்பிக்கையையும் தருகிறது.

வீட்டில் ஒருவர் மௌனமாக இருக்கும்போது, ‘அது அவருடைய இயல்பு’ என்று கடந்து செல்லாமல், ‘அவருடைய உள்ளத்தில் என்ன நடக்கிறது?’ என்று கேட்கவேண்டும். ஒருவேளை நம் வீட்டில் யாரோ ஒருவர் நம்மிடம் பேசுவதை நிறுத்தியிருக்கலாம். அவர்மீது கோபப்படுவதற்கு முன் ஒருமுறை நம்மையே கேட்போம்:

“அவர் பேச வந்தபோது நான் எத்தனை முறை கேட்காமல் இருந்தேன்?”, “அவர் என்னை நம்பி வந்தபோது நான் எத்தனை முறை அமைதியாக இருந்தேன்?”, “அவருக்காக ஒரு வார்த்தை பேச வேண்டிய நேரத்தில் நான் எங்கே இருந்தேன்?”

இந்தக் கேள்விகள் எளிதானவை அல்ல; ஆனால், உடைந்த உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென்றால், இந்தக் கேள்விகளிலிருந்துதான் தொடங்கவேண்டும்.

ஏனெனில், நாம் பேசிய சில வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் விட்டதற்காக யாரிடம் போய் மன்னிப்பு கேட்பது? சில நேரங்களில் சொல்லாமல் விட்ட ஒரு வார்த்தை, பல ஆண்டுகளாக உருவாக்கிய இடைவெளியை எப்படி அளப்பது? நாம் பேசாமல் விட்ட வார்த்தைகளை நாம் மறந்துவிடலாம்; ஆனால், அந்த வார்த்தைக்காகக் காத்திருந்தவர்கள்? அவர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த மௌனம் அவர்களுடைய மனத்தில் இன்னும் ஆறாத காயமாக உயிரோடு இருக்கலாம்.

அதனால்தான், இன்றே பேச வேண்டியவர்களிடம் பேசிவிடுவோம். நம்மை நேசிப்பவர்களிடம் ‘நான் உன்னை நம்புகிறேன்’, ‘நீ தனியாக இல்லை’, ‘என்ன நடந்தாலும் பேசலாம்’, ‘நான் இருக்கிறேன்!’ என்று சொல்லத் தயங்கவேண்டாம். இந்தச் சிறிய வார்த்தைகள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மருந்தாக மாறும்.

சில காயங்களுக்கு மருந்துகள் தேவை; ஆனால், பல காயங்களுக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டும் போதும் - ‘நான் இருக்கிறேன்!’ இந்த வார்த்தையைச் சொல்லவேண்டிய நேரம் கடந்துபோவதற்கு முன் சொல்லிவிடுவோம்.

ஏனெனில், வடுக்கள்... எல்லாம் கத்துவதில்லை; சில வடுக்கள் அமைதியாக அழுகின்றன. சில வடுக்கள் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கின்றன! ஆனால், சில வடுக்கள் இன்னமும் நம்மை நோக்கிப் பேசிக்கொண்டிருக்கின்றன!