காலை மணி அடித்தது. ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மாணவர்கள் எழுந்து நின்றார்கள்.
“வணக்கம், ஆசிரியரே!”
அவர்
புன்னகையுடன் அவர்களைப் பார்த்தார். மேசையின்மீது பாடப்புத்தகம் இருந்தது. அருகில் கைப்பேசி இருந்தது. கணினியில் இன்னும் சில பதிவுகள் காத்திருந்தன. முடிக்க வேண்டிய படிவங்கள் இருந்தன. பதிவேற்ற வேண்டிய தரவுகள் இருந்தன. இன்னும் சில நிர்வாகப் பணிகள் நினைவுக்கு வந்தன.
சில
நிமிடங்களுக்கு முன்புதான் அவர் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தார். ஆனால், அவரது மனம் ஏற்கெனவே பல இடங்களில் ஓடிக்கொண்டிருந்தது.
மாணவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தேவையானது ஓர் ஆசிரியர். ஆனால், அந்த நிமிடத்தில் ஆசிரியருக்குள் இருந்தது ஒரு கேள்வி: ‘நான் இன்று இவர்களுக்குப் பாடம் கற்பிக்கப் போகிறேனா? அல்லது இன்னும் சில மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவுகளை முடிக்கப் போகிறேனா?’
ஆசிரியர்
என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கரும்பலகை. கையில் சுண்ணக்கட்டி, முன்னால் மாணவர்கள், மனத்தில் ஒரு பாடம். ஆனால், இன்றைய ஆசிரியரின் நாள் அதோடு முடிவதில்லை. கைப்பேசி செயலிகளில் அன்றாடப் பதிவுகள், மாணவர்களின் பல்வேறு தரவுகள், திட்டங்களுக்கான கணக்குகள், படிவங்கள், அறிக்கைகள், நிர்வாகப் பணிகள்... ஒரு பணியை முடித்தவுடன் மற்றொரு பணி காத்திருக்கிறது. தொழில்நுட்பம்
கல்வியை எளிதாக்க வந்தது. ஆனால், சில நேரங்களில் தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடும் ஆசிரியருக்கு மாணவர்களோடு பேசுவதற்கே நேரமில்லாமல் போகிறது. ஒரு மாணவனின் மதிப்பெண் பதிவாகிறது. ஆனால், அவனுடைய மனநிலை பதிவாகிறதா? ஒரு மாணவியின் வருகை பதிவாகிறது. ஆனால், அவள் ஏன் தொடர்ந்து அமைதியாக இருக்கிறாள் என்று யாராவது பதிவு செய்கிறார்களா? ஒரு பள்ளியின் தரவுகள் முழுமையாக இருக்கலாம்; ஆனால், அந்த வகுப்பறையின் மனிதத் தன்மை முழுமையாக இருக்கிறதா?
ஆசிரியர்
என்பவர் பாடத்தை மட்டும் கற்பிப்பவர் அல்லர். ஒரு மாணவன் தோல்வியடைந்தபோது, ‘மீண்டும் முயற்சி செய்’ என்று சொல்பவர். ஒரு மாணவி தன்னம்பிக்கையை இழந்தபோது, ‘உன்னால் முடியும்’
என்று நம்பிக்கை கொடுப்பவர். வீட்டில் சொல்ல முடியாத ஒரு பிரச்சினையை, பள்ளியில் ஆசிரியரிடம் வந்து பகிரும் குழந்தையின் மௌனத்தைக் கேட்பவர். அதனால்தான் கல்வி என்பது வெறும் தகவல்களை வழங்குவது அல்ல; ஒரு மனிதனை உருவாக்குவது. அதற்கு நேரம் தேவை, பொறுமை தேவை, உறவு தேவை, அதற்கும் மேலாக, ஆசிரியரின் மன அமைதி தேவை.
ஆனால்,
இன்று அந்த மன அமைதியும் பல
நேரங்களில் கேள்விக்குறியாகிறது. பணிப் பாதுகாப்பு குறித்த அச்சம்; மறு வரையறை மற்றும் பணியிட மாற்றங்கள் குறித்த குழப்பம்; பல ஆண்டுகளாக வகுப்பறையில்
அனுபவத்தோடு பணியாற்றிய ஆசிரியர்களின் தகுதி குறித்த கேள்விகள். ஒரே தேர்வு அல்லது ஒரு நிர்வாக முடிவு, பல ஆண்டுகளின் அனுபவத்தை
மீண்டும் அளவிடத் தொடங்கும்போது, அது ஒரு பணியாளரின் வாழ்க்கையை மட்டுமல்ல; அவரது சுயமரியாதையையும் தொடுகிறது.
பல
ஆண்டுகளாக மாணவர்களை உருவாக்கிய ஒருவர், ‘நாளை நான் இதே வகுப்பறையில் இருப்பேனா?’ என்று எண்ணிக்கொண்டே பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவருடைய மனம் முழுமையாக மாணவர்களிடம் இருக்குமா? மற்றொரு கேள்வியும் எழுகிறது. கல்வி என்பது மொழியோடு இணைந்தது அல்லவா! ஓர் ஆசிரியர் ஒரு பாடத்தைக் கற்பிக்கும்போது, அவர் வெறும் தகவலை மாணவரிடம் கொண்டு சேர்ப்பதில்லை. அவன் அறிந்த மொழியில், அவன் புரிந்துகொள்ளும் விதத்தில், அவன் வாழும் சூழலோடு இணைத்து, அந்த அறிவை அவனுடைய அனுபவமாக மாற்றுகிறார். அதனால்தான் ஆசிரியர் என்பவர் ஒரு பாடத்தைச் சொல்லும் மனிதர் மட்டுமல்லர். அவர் ஒரு பாலம்! அறிவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு பாலம். கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே ஒரு பாலம். மாணவனின் இன்றைய நிலைக்கும், அவன் நாளைய மனிதனாக மாறுவதற்கும் இடையே ஒரு பாலம். அந்தப் பாலத்தின்மீது நாம் சுமைகளை மட்டுமே ஏற்றிக்கொண்டே சென்றால், அது எவ்வளவு நாள் தாங்கும்?
ஓர்
ஆசிரியரின் கைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அந்தக் கைகள் தேர்வுத் தாள்களைத் திருத்துகின்றன; பாடக்குறிப்புகளை எழுதுகின்றன; மாணவனின் தவற்றைத் திருத்துகின்றன; சில நேரங்களில், அழும் குழந்தையின் தோளில் ஆறுதலாகத் தங்குகின்றன. அந்தக் கைகளில் இன்னும் எத்தனை படிவங்களை நாம் வைக்கப் போகிறோம்? எத்தனை தரவுகளை, எத்தனை அறிக்கைகளை, எத்தனை நிர்வாகச் சுமைகளை...? ஓர் ஆசிரியரின் கையில் மீண்டும் ஒரு புத்தகத்தை வைக்க வேண்டிய நேரம் இது.
ஆசிரியர்
தினம் வந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்? மலர் கொடுக்கிறோம், வாழ்த்து சொல்கிறோம், விருது வழங்குகிறோம். ‘ஆசிரியர்கள் நாட்டின் தூண்கள்’ என்று மேடைகளில் பேசுகிறோம். அவை எல்லாம் நல்லவையே. ஆனால், ஆசிரியரை உண்மையாக மதிப்பது என்பது ஒரு நாளில் மலர் கொடுப்பது மட்டும் அல்ல; அவருடைய பணியைப் புரிந்துகொள்வது, தேவையற்ற சுமைகளைக் குறைப்பது, வகுப்பறைக்கான நேரத்தை மீட்டுக் கொடுப்பது, அவருடைய சுயமரியாதையைப் பாதுகாப்பது. அவர் சுதந்திரமாகச் சிந்திக்கவும் கற்பிக்கவும், மாணவர்களோடு உறவை உருவாக்கவும் இடம் கொடுப்பது. இதுதான் உண்மையான ஆசிரியர் தின வாழ்த்து.
இறுதியில்,
ஓர்ஆசிரியரிடம் நாம் ஒரு கேள்வி கேட்கலாம்: “நீங்கள் எதற்காக ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”
ஒருவேளை
அவர் இப்படிச் சொல்லலாம்: “ஒரு குழந்தையின் வாழ்க்கையில் நான் ஒரு சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக.”
இந்தப்
பதிலுக்குள் கல்வியின் முழு அர்த்தமும் அடங்கியிருக்கிறது. அதனால், ஆசிரியர்களிடம் நாம் கேட்கவேண்டியது, “இன்னும் என்ன செய்ய முடியும்?” என்பது மட்டுமல்ல; சில நேரங்களில், “உங்களுடைய பணியைச் சிறப்பாகச் செய்ய நாங்கள் என்ன சுமையை உங்களிடமிருந்து இறக்க வேண்டும்?” என்றும் கேட்கவேண்டும்.
ஏனெனில்,
ஓர் ஆசிரியரின் மனம் சுதந்திரமாக இருக்கும்போதுதான், ஒரு மாணவனின் சிந்தனைக்கும் சிறகுகள் முளைக்கும்.
இந்த
ஆசிரியர் தினத்தில் அவர்களுக்குப் பாராட்டு வார்த்தைகளை மட்டும் கொடுக்காமல், அவர்களின் சுமைகளைக் குறைப்போம்; அவர்களின் நேரத்தை மீட்டுத் தருவோம்; அவர்களின் சுயமரியாதையைப் பாதுகாப்போம்; அவர்களின் வகுப்பறைக்கு மீண்டும் சுதந்திரம் கொடுப்போம்.
ஆசிரியர்களின்
கைகளில் சுமைகளை ஏற்றாமல்... அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் தருவோம்.