news-details
தலையங்கம்
செபமாலை அன்னை நிகரில்லாக் கருணைக் கடல்! (சிறப்புத் தலையங்கம்)

அரவின் உருவொடு கடிவிடு விடம்அற,

அரிதில் உயிர்தரும் இனிது அமுது இவள் என,

இரவின் இருளினும் வடுதரும் இருள்அற,

இரவி ஒளியினும் ஒளிர்சுடர் இவள்என,

உரம் இழிவுஅற, உயிர்அடும் இகல்அற,

உறுதி இவள்என, உயிர் இவள்என, விரி

புரவில் நிகர்இல தயவினில் நிகர்இல

புணரி இவள்என அறைகுவர் சிலருமே!’

(தேம்பாவணி, படலம் 8: 66)

என்கிறது வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணிஅன்னை மரியாயின் தூய்மையையும் தாய்மையையும், இறைவன் அவருக்கு அருளிய ஒப்பற்ற மேன்மையையும் போற்றும் இப்பாடல் வரிகளில், பாம்பின் வடிவில் வந்த தீயோன் (அலகை) மனிதகுலத்தின்மீது உமிழ்ந்த பாவம் என்னும் கொடிய நச்சு அகன்று, ஆன்மாவிற்கு மறுவாழ்வு அளிக்கும் இனிய அமிழ்தமாக அன்னை மரியா திகழ்கிறார் என்றும், இரவின் இருளைக்காட்டிலும் கொடிய அறியாமை என்னும் இருளைப் போக்கும் சூரியனைவிட, பேரொளி வீசும் சுடராக அவர் விளங்குகிறார் என்றும் குறிப்பிடுகிறார். மேலும், மனத்தின் பலவீனங்களையும், ஆன்மாவைக் கொல்லும் பாவப் பகையையும் அழித்து நல்வாழ்விற்கு உறுதியளிக்கும் உயிராக அவர் இருக்கிறார் என்றும், அளவற்ற உலக உயிர்களைக் காப்பதிலும், இரக்கம் காட்டுவதிலும் தனக்கு நிகரில்லாத கருணைக் கடலாக அன்னை மரியா விளங்குகிறார் என்று சான்றோர் அவரைப் போற்றுகின்றனர் என்றும் வானவர் புகழ்வதாக வடித்துள்ளார்.

அன்னை மரியாவின் கைகளில் தவழும் செபமாலை வெறும் செபங்களின் தொகுப்பு மட்டுமல்ல; மாறாக, அது ஆன்ம மீட்பிற்கும், தீமைகளை வெல்வதற்கும், இறையருளைப் பெறுவதற்கும் நமக்கு அன்னையால் வழங்கப்பட்ட ஆற்றல்மிக்க ஆன்மிகக் கருவி. செபமாலையின் ஒவ்வொரு மணி வழியாகவும் நாம் அன்னையை நோக்கிஅருள் நிறைந்த மரியே வாழ்கஎன்று போற்றும்போது, அன்னை நமக்குத் தேவையான அருள் நிறைந்த நம்பிக்கையைக் கற்றுத் தருகிறார்; தனது மகனிடமிருந்து மன அமைதியையும், ஆன்மிகப் பலத்தையும் பெற்றுத் தருகிறார்.

கிறித்தவ வாழ்வியலில் செபமாலை இறைவேண்டல் என்பது, இயேசுவின் மீட்பு மறைபொருள்களை அன்னை மரியாவோடு இணைந்து தியானிக்கும் ஒரு புனிதப் பயணமாகும். இப்பயணத்தில், நமக்கு நன்மை செய்வதற்கு அன்னை மரியா ஒருபோதும் தயங்குவதில்லை என்பதை உணர்த்துவதே கானாவூரில் நிகழ்ந்த முதல் அருளடையாளம்அதேபோன்று, இன்றும் தன் பிள்ளைகள் நம்பிக்கையோடு செபமாலையைக் கையிலெடுத்து மன்றாடும்போது, தன் அன்பு மகன் இயேசுவிடம் நமது தேவைகளுக்காக இடைவிடாது பரிந்துபேசி அளவற்ற அருள்கொடைகளை அருள்கின்றார்.

கொங்கு மண்டலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலமாகத் திகழ்வது கோவை - கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பேராலயத் திருத்தலமாகும் (Holy Rosary Basilica). 1640-ஆம் ஆண்டிற்கும் முன்பிருந்தே வரலாற்றுப் பின்னணி கொண்ட இத்திருத்தலம், கோவை மறைமாவட்டத்தின் முதல் பேராலயமாகவும், அருள்நிறை புனிதத் தலமாகவும் திகழ்கிறது. தங்கள் துயரங்கள் மற்றும் தேவைகளுக்காக அன்னையை நாடிவரும் பிள்ளைகளை, அன்னை மரியா ஒருபோதும் இங்கு வெறுங்கையோடு திருப்பி அனுப்புவதில்லை என்பது கண்கூடு.

இப்பெருவிழா வேளையில், கருமத்தம்பட்டி செபமாலை அன்னையின் பாதம் நாடுவோம்; அன்னையின் புகழ்பாடக் கூடுவோம். இச்சிறப்பிதழ் வெளிவர பேருதவியாக இருந்த திருத்தல அதிபர் மற்றும் விழா குழுவினர் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்