அணுசக்தித் தொழில்நுட்பம் அழிவுக்குப் பயன்படாமல், மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெறும் உலகளாவிய அணுசக்தி முகமையின் (IAEA) 70-வது பொது மாநாட்டில், வத்திக்கான் வெளியுறவுச் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் கலந்துகொண்டு உரையாற்றினார். திருத்தந்தை லியோவின் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட அவர், அணுசக்தியின் பயன்கள் அனைத்து நாடுகளுக்கும் சமமாகக் கிடைக்கவேண்டும் என்றும், அதேவேளையில் அணு ஆயுதப் பெருக்கத்தை நாடுகள் முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். செர்னோபில் அணு உலை விபத்தின் 40-வது ஆண்டினை நினைவுகூர்ந்த அவர், போர்க் காலங்களிலும் அணு சக்தி மையங்கள் மீதான தாக்குதல்கள் தவிர்க்கப்படவேண்டும் என எச்சரித்தார். மேலும், அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.