news-details
தலையங்கம்
இன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலை: அறியாமையா? அறிவுசார் ஆர்வமின்மையா?

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவுஎன்ற ஒளவையாரின் மூதுரைக்கு இலக்கணமாக, அறிவுத் தேடலையே தன் முழு மூச்சாகக் கொண்டு வாழ்ந்த மரபு இத்தமிழ்ச் சமூகத்திற்கு உரியது. உலகப் பொதுமறையாம் திருக்குறளையும், பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சிந்தனைகளையும், புரட்சிக் கவிஞர்களின் விடுதலை வரிகளையும் நெஞ்சில் ஏந்திய வரலாற்றுச் சிறப்புமிக்க மண் இது.

சங்க காலம் தொட்டே கடல் கடந்து வணிகமும், கலைப் பரிமாற்றமும் செய்து, இயற்கை வளத்தோடும் இலக்கிய நயத்தோடும் உலகளாவிய சிந்தனையோடு இயங்கிய தமிழ்ச் சமூகம், இன்று 21-ஆம் நூற்றாண்டின் அதிவேக எண்மத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) யுகத்திலும், உலகமயமாதலின் பிடியிலும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இருப்பினும், இன்றைய தமிழ்ச் சமூகம், அறிவுத் தேடலிலும் பகுத்தறிவுச் சிந்தனையிலும் எத்தகைய நிலையில் உள்ளது? சமூகத்தில் நிலவும் இப்போதைய தொய்வு, அறியாமையினால் விளைந்ததா? அல்லது அறிவுசார் செயல்பாடுகளில் ஏற்பட்ட ஆர்வமின்மையினால் நிகழ்ந்ததா? என்ற வினாக்களுக்கு விடைதேட வேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது.

இன்றைய தமிழ்ச் சமூகத்தின் தேக்க நிலைக்குக் காரணம்அறியாமைஎன்று கூறுவது முற்றிலும் அடிப்படையற்ற வாதம் என்றே நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் இந்தியச் சராசரியைவிட மிக உயர்ந்து, தேசிய அளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. திறன்பேசிப் பயன்பாடு மற்றும் இணைய ஊடுருவலில் தமிழர்கள் உலகளாவில் முதன்மை நிலையில் உள்ளனர்.

அறிவியல், அரசியல், உலக நிகழ்வுகள் என எந்தவொரு துறையைப் பற்றிக் கேட்டாலும் உடனுக்குடன் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும் அளவிற்குத் தகவல் பரிமாற்றமும், சமூக விழிப்புணர்வும் பெரிதும் இன்று சாத்தியமாகியுள்ளன. எனவே, இன்றைய சமூகத்தின் பலவீனத்திற்குப் பின்னால் இருப்பது தகவல்கள் கிடைக்காதஅறியாமைஅன்று; மாறாக, தகவல்களைக் கையாளும் விதத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடே என்கின்றனர் கல்வியாளர்கள்.

ஆகவே, இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்அறிவுசார் ஆர்வமின்மைஎன்றே பலரும் கருதுகின்றனர். எதையும் ஆழமாகக் கற்காமல், மேலோட்டமாகத் தெரிந்துகொண்டு நிறைவடையும் ஒருவித அறிவுச் சோம்பல் சமூகத்தில் பரவியுள்ளது கவலைக்குரியதே! 15 நொடி காணொளிகளிலும், இருவரி மீம்ஸ்களிலும் உலகத்தின் தத்துவங்களையும் அரசியலையும் சுருக்கிப் பார்க்கும் பழக்கம் இன்று தீவிரமடைந்துள்ளது. ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்கும் பொறுமையோ அல் லது ஒரு முழுமையான கட்டுரையைக் கூர்ந்து வாசிக்கும் ஆர்வமோ இன்று எவரிடமும் இல்லை.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளசிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க்(CUNY) பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபரிதுல் ஆலம் சுட்டிக்காட்டுவதுபோல, மனிதச் சமூகம்எழுத்திற்குப் பிந்தைய சமூகம்என்ற புதிய பரிமாணத்தை நோக்கிச் செல்கிறது. இது எழுத்து முற்றிலும் மறைந்து போகும் காலம் அன்று; மாறாக, எழுத்து தன் பழைய மையத்தன்மையை இழந்து பேச்சு, படம், ஒலி, காணொளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றோடு இணைந்து இயங்கும் சூழலாகும்.

அன்றும் இன்றும்எழுத்துஎன்பது வாசிப்பிற்கு ஓர் ஆர்வத்தையும் ஆழத்தையும் தருவது. வாசகர் ஒரு கருத்தை உடனடியாக அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; அதிலிருந்து விலகி, மீண்டும் மறுபரிசீலனை செய்ய அச்சு ஊடகப் பண்பாடும் பயன்பாடும் வழிவகுத்தது. ஆனால், இன்றைய எண்மத் தொழில்நுட்ப ஊடகங்கள் இந்தச் சுற்றை மிதமிஞ்சிய வேகத்திற்கு உட்படுத்தியுள்ளன. தகவல்களின் பற்றாக்குறை என்று ஏதுமில்லை; மாறாக, கவனத்தின் பற்றாக்குறையே இன்று நிலவுகிறது. ‘எதைப் பெறுவது?’ என்ற கேள்வியைக் கடந்து, ‘எதைப் படிக்கவேண்டும், எதை நம்பவேண்டும்?’ என்ற குழப்பத்தில் தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது.

தமிழர்களின் தற்கால ஊடகச் சூழல், இளைஞர்களின் சிந்தனைத் திறனைப் பெரிதும் சீரழிக்கிறது என்பதே உண்மை. ஆக்கப்பூர்வமான சமூக விவாதங்களைவிட, திரை நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் கட்சிகளின் (கருத்தியல்) மோதல்கள் இவையே சமூக ஊடகங்களில் முதன்மைப் பொருளாக மாறியுள்ளன.

மேலும், இன்றைய (AI) தொழில்நுட்பம் தகவல்களைச் சுருக்கித் தருவதால், மூல நூல்களை வாசிக்கும் பழக்கம் முற்றிலுமாக விடைபெறுகிறது. ‘யார் எழுதுகிறார்?’ என்ற மனிதச் சிந்தனையின் எல்லை மங்கி, தகவல்கள் இயந்திரத்தனமாக நுகரப்படுகின்றன. தர்க்கப்பூர்வமான ஆய்வுகள் இல்லாததால், புலனம் போன்ற செயலிகளில் வரும் வதந்திகளும் போலித்தரவுகளும் எவ்வித ஆய்வுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, மக்கள் உரிமைகளை மறந்து, போலிப் பிம்பங்களை நுகர்ந்து திருப்தியடையும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தமிழ்ச் சமூகம் தன் அறிவுசார் பாரம்பரியத்தையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் மீட்டெடுக்க வேண்டுமெனில், ஆக்கப்பூர்வமான மாற்றங்களைப் பொறுப்புணர்வோடு அரசும் குடிமைச் சமூகமும் கல்வி நிறுவனங்களும் நம் குடும்பங்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு  (குறள் 423)

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வரிகளுக்கேற்ப, சமூகத்தில் பரப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராயும் பகுத்தறிவை நாம் நம்மில் மீண்டும் உயிர்ப்பிக்கவேண்டும்.

ஆகவே, ‘வீட்டுக்கு ஒரு நூலகம்எனும் முழக்கத்தை முன்னெடுத்து, வாசிப்பு இயக்கத்தைக்  கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. கைப்பேசித் திரைகளில் காலத்தைக் கழிக்கும் காளையரின் (இளை யோரின்) நேரத்தைக் குறைக்கவும், குழந்தைப் பருவத்திலிருந்தே நம் குழந்தைகள் புத்தகங்களை நேசிக்கும் பண்பாட்டை வளர்க்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது இன்று அவசியமாகிறது. மனப்பாடக் கல்வியையும், தேர்வுக்கான மதிப்பெண் வேட்டையையும் ஒழித்து, ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று வினா எழுப்பும்தர்க்கவியல் சிந்தனையைகல்வி நிலையங்களில் புகுத்த வேண்டியுள்ளது.

அவ்வாறே, சமூக ஊடகங்களில் வெளியாகும் மேலோட்டமான கருத்துகளைக் கடந்து, கொள்கை சார்ந்த, சமூக மேம்பாட்டிற்கான விவாதங்களை இளைஞர்கள் முன்னெடுக்க ஊக்குவிக்கவேண்டும்.

இறுதியாக, இன்றைய தமிழ்ச் சமூகம் அறியாமையில் மூழ்கிவிடவில்லை; மாறாக, தனக்குக் கிடைக்கப்பெற்ற எல்லையற்ற தகவல் பெருக்கத்தைக் கையாளுவதற்கானஅறிவுசார் ஆர்வத்தைதற்காலிகமாக இழந்து நிற்கிறது. நிலவுடைமைச் சமூகத்தின் அடித்தளம் முழுமையாக ஆட்டம் காண்பதற்கு முன்பே நவீனச் சமூகமாக மாறிய தமிழ்ச் சமூகம், முழுமையான எழுத்தறிவைப் பெறுவதற்கு முன்பாகவே இன்று வளர்ந்து வரும் எண்மத் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்டு பெரும் ()மாற்றம் கண்டிருக்கிறது.

இத்தகைய சவாலை எதிர்கொண்டு, போலிப் பிம்பங்களையும், மேலோட்டமான பொழுதுபோக்குகளையும் புறந்தள்ளி, ஆழமான சிந்தனையையும், தர்க்க அறிவையும் நோக்கி நகர்வதே தமிழ்ச் சமூகத்தை உலக அரங்கில் நாளை மீண்டும் தலைநிமிரச் செய்யும் என்றே நம்புவோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்