அண்மையில் புதுதில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி அவரின் அரசு, ஆயுதம் தாங்கிய நக்சல்களை ஒழித்துவிட்டதாகவும்; ஆனால், ‘திமாகி’ நக்சல்கள் இன்னும் அழிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் அறிவித்தது (‘திமாகி’ என்றால் ‘Brainy’ மூளையுள்ளோர் என்று பொருளாம்!)
“திமாகிகள் மிக
ஆபத்தானவர்கள்!
முந்தைய
அரசுகள்
இவர்களை
அரசின்
ஆலோசகர்களாக
நியமித்திருந்தனர்.
இப்போது இதே ‘திமாகிகள்’ இன்று இந்தியச்
சமூகத்தைத்
தவறான
பாதைக்கு
இட்டுச்
செல்கின்றனர்.
இந்திய
இளைஞர்களை
வளர்ச்சி
நோக்கில்
செல்லும்
இந்தியாவிலிருந்து
திசை
மாற்றி
அழைத்துச்
செல்கின்றனர்.
இந்தியக்
குடிமக்கள்
இச்சக்திகளை
அடையாளம்
கண்டு
(Identity) கொள்வதோடு, தனிமைப்படுத்தவும்
(Isolate) வேண்டும்”
(தி இந்து, ஆகஸ்டு
31, 2026 - கவிதா கிருஷ்ணன்).
(நம்
வாழ்வின் வாசகர்கள் மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையைப் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்)
பிரதமர்
மோடியின் பொறுப்பில் 2014-இல் விடப்பட்ட இந்திய அரசு குடிமக்களை ஏமாற்றி வழங்கப்பட்ட அரசு; குடிமக்களை மூளைச்சலவை செய்து திணிக்கப்பட்ட அரசு; சனநாயக நெறிகளைத் துளிகூட நம்பாத ஒரு குழுவிடம் ஏமாற்றப்பட்ட, குடிமக்களால் தரப்பட்ட அரசு!
கண்ணீர்
விட்டு வளர்த்த சுதந்திரப் பயிரை, சுதந்திரம் அளித்த அரசியல் விடுதலையை, இந்தியச்
சமூகம் காலங்காலமாய் கட்டிக் காத்த வர்ண பேதத்தை, வர்ண பேதத்தைத் தர்மமாக்கப் பேணி வந்த சூழ்ச்சியை நிர்மூலமாக்க எழுந்த இந்திய அரசமைப்பை ஒற்றைத் தேர்தல் மூலம் நிர்மூலமாக்கிய சங்கப் பரிவாரங்களின் பிளவுவாதக் கருத்தியலைக் கேள்வி கேளாமல் ஏற்றுக்கொண்டு, இன்றும் தொடர் ஆட்சிசெய்து வருகைக்குத் துணை நிற்பவர்கள் ‘தேச பக்தர்கள்.’ இத்தேசபக்தர்களுக்கு எதிரானோர் அனைவரும் சில ஆண்டுகளுக்கு முன் நகர்ப்புற நக்சல்களாயினர் (Urban naxals).
இன்று
நகர்ப்புற நக்சல்களுக்குப் புது நாமம் சூட்டப்பட்டுள்ளது. இவர்கள் ‘திமாகி’ நக்சல்கள்! ‘வளர்ச்சி’
என்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்த பெருமைமிகு இவ்வரசின் போக்கைக் கேள்விக்குள்ளாக்குவோர் நக்சல்களாம்! இவர்கள் நகர்ப்புற நக்சல்கள்; இப்பொழுது திமாகி நக்சல்கள்! குடிமக்கள் வெறும் வாக்களிக்கும் இயந்திரமல்ல; இவர்களுக்கு மூளையுண்டு என்று அங்கீகரித்த மோடிக்கு நன்றி கூறுவோம்.
இந்தியா
அறிவித்த மதச்சார்பின்மை புதைக்கப்பட்டபோது, மதம் சார்ந்த பிற்போக்கு அரசியலுக்கு இராமர் கோவில் மூலம் ‘நியாயம்’ தரப்பட்டபோது, பண்டித நேரு காக்க முயன்ற சமயச் சார்பின்மையின் அடித்தளம் தகர்க்கப்பட்ட போதெல்லாம் மௌனித்து நின்றோர் ‘தேசபக்தர்கள்!’ கேள்வி கேட்டவர் பலரல்லர்; ஒரு சிலர்தாம்! அவர்கள் நகர்ப்புற நக்சல்கள்! இல்லையெனில் திமாகி நக்சல்கள்!
கடந்த
12 ஆண்டு மோடியின் ஒற்றைக் கருத்தியல் ஆட்சிக்காலமாக வளர்க்கப்பட்டு வரும் பொய்மைக் கருத்தியலின் சாயல் இன்னும் அழியாத நிலையில், இச்சாயல் தரும் போதை இன்னும் மாறாத நிலையில், இன்றும் தொடர்ந்து மந்தை மனநிலையில் பின்தொடர்கிறது இக்கூட்டம். இவர்கள் தேசபக்தர்கள்! மனித உரிமைகளைக் காக்க, மனித உரிமைக் காப்பு மூலம் சனநாயகத்தைக் காக்க வாழ்நாளை அர்ப்பணிக்கும் கூட்டம் இவர்களுக்கு ‘நக்சல்கள்!’
அவதூறுகளால்,
இழிவான பிரச்சார யுக்திகளால் - விமர்சிக்கும் சனநாயக சக்திகள் அனைவரையும் ஒதுக்கவும் ஓரங்கட்டவும் ஒடுக்கவும் முனையும் மோடி அரசின் அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து அரசின் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுதல் மிகப்பெரிய பயங்கரவாதமில்லையா?
மக்களுக்குப்
பதில் கூறவேண்டிய (Accountability) அரசு,
தன் கடமையை மறந்தும், துறந்தும் செயல்படும்போது, பதில் கேட்டுப் போராடுவோர் நக்சல்கள் என்றால், போராடுவோரின் நியாயமான கோரிக்கைகள் எதேச்சதிகாரப்போக்கில் புறந்தள்ளப்படுகிறபோது எழுப்பப்பெறும் அபயக் குரல்களே ஆள்வோருக்கு எச்சரிக்கை மணியாக எதிரொலிக்கின்றது.
ஆள்வோர்
ஏன் அலறுகின்றனர்? உண்மையைச் சந்திக்கத் தயங்குகின்றபோதெல்லாம் இவர்கள் எதிரிகளாக்கப்பெறுவோரை ‘நக்சல்கள்’
என்றும், ‘தேசத்துரோகிகள்’ என்றும்,
‘பாகிஸ்தான் ஆதரவாளர்’
என்றும் முத்திரை குத்தி, அவர்கள்மீது பயங்கரவாதத்தை ஏவி, அதற்கு வேறொரு பெயர் சூட்டி நாடகமாடுதலைப் பார்க்க முடிகிறது. பல்கலைக்கழகங்கள் மதவாத அரசின் கருத்துநிலை பிரச்சாரக் கருவிகளாய் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், புது தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைக் கைவசம் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உமர் காலித், சர்ஜில் இமாம், குல்பிஷா பாத்திமா, நாடசா நிர்வால், தேவங்கனா கவிதா என்போரெல்லாம் பயங்கரவாதிகளாக, முறையான விசாரணையின்றி இன்னும் சிறையில் வாடுகின்றனர். ‘நீட்’ தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களும் இவர்களுக்குப் பயங்கரவாதிகளே.
மதவாதிகளுக்கு,
மத அடிப்படைவாதம் பேசும் சனாதனிகளுக்குச் சமனற்றச் சமூக அமைப்பை எப்படியேனும் காத்துத் தீரவேண்டியதே உயிர்க் கொள்கை. அத்தகையோருக்கு ‘மாற்றம்’ என்ற சிற்றொலி செவிப்புலனுக்குப் பயங்கரவாதக் குரலாகத்தான் கேட்கும்.
ஐக்கிய
நாட்டவையின் இனப்பாகுபாட்டு ஒழிப்பிற்கான குழு ஒன்று அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை (‘தி இந்து’, ஆகஸ்டு 26, 2026) இந்திய அரசின் முகத்திரையைக் கிழித்துள்ளது. ஐ.நா.வின்
இக்குழு (UNCERD) இந்தியாவில்
நடக்கும் மிகப்பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களைக் கண்டு (Violations) கவலைகொள்கிறது. சமய ரீதியான சிறுபான்மையினர், பூர்வக்குடிகள், பழங்குடிகள், பட்டியலினப் பழங்குடிகள், தலித் மக்கள் மற்றும் குடிமக்களல்லாதோர் (Non - Citizens) என்போர்மீது,
சட்டத்தைப் பாதுகாப்பவர்களாலேயே நடத்தப்பட்டு வரும் மீறல்கள் கவலையளிப்பதாக அறிவித்துள்ளது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட நாளன்று (ஆகஸ்டு 11-12) இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஷாவும் அவையில் இருந்தார் என்பது வேடிக்கை கலந்த உண்மையே.
உலக
அளவில் மனித உரிமை மீறல்களை, நலிந்தோர் மீதான பாடுபாடுகளை, ஒதுக்கலை, ஒடுக்கலை நாளும் நடத்தி வரும் மோடி அரசு, யாரைப் ‘பயங்கரவாதிகள்’ என்று,
‘நக்சல்கள்’ என்று
அடையாளப்படுத்துகிறது?
இன்றைய
ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாம் ஆர்.எஸ்.எஸ்., இன்று உலகளவில் அம்பலப்பட்டுப் போன கதையை நியூயார்க் மேயரின் ஒளிவு மறைவற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றியும், அதன் தலைவருக்குக் காட்டிய எதிர்ப்பையும் தொடர்ந்து கவனிப்போர் அறிவர். இந்தியச் சனநாயகம் மதச்சார்பற்ற குடியரசின் கொள்கைகளுக்கு முரணான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்குவதை (Inclusion) மறுத்து
ஒதுக்கும் (Exclusionary) தன்மையுடையது
என்று வெளிப்படையாகவே ஊடகவழி பேசினார் நியூயார்க் மேயர். மோகன் பாகவத் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வைச் சட்ட ரீதியாகத் தடுக்கும் தன்மை இல்லையெனினும், பாகவத் சார்ந்த அமைப்பின் கொள்கையில் சனநாயகம், சமயச்சார்பின்மை இல்லை என்பதைத் தெளிவாகவே எடுத்துரைத்தார் அவர்.
நக்சல்கள் பயங்கரவாதிகளா?
இந்தியாவில்
விடுதலை பெற்ற காலத்திலிருந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அரசுகள் உழைக்கும் மக்களின் விடியலுக்கு எதுவும் செய்யவில்லை. வர்க்க ரீதியாகப் பிளவுண்ட சமூக அமைப்பின்மீது கட்டப்பட்ட அரசு, வர்க்க ரீதியான சமூக அமைப்பை அரசின் திட்டங்களால், பொருளாதாரக் கொள்கைகளால், ஆளும் வர்க்க நலனையே அரசுகள் முன்னிறுத்தின. தேர்தல் மூலம் மக்களிடம் பொய்யான நம்பிக்கையை வளர்த்து, வர்க்க ரீதியாகப் பிளவுண்ட அமைப்பில் மக்களுக்கான மாற்றம் எதுவும் நிகழாத நிலையில், சமூக அமைப்பில் மாற்றம் வேண்டி உருவான இயக்கம்தான் வங்காள மாநிலத்தில் ‘நக்சல்பாரி’ எனும்
இடத்தில் தோன்றிய நக்சல்பாரியக்கம்!
இந்த
இயக்கம் சமூகத்தின் அடிப்படையை மாற்றுவதற்குப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் துணைகொண்டு உருவானது. ‘சனநாயக அரசு’ என்ற பெயரில் மக்களை ஒடுக்கி வரும் அரசுகளைப் பயங்கரவாத அரசாகச் சித்தரித்து, ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இவ்விளைஞர் கூட்டம் நாடு முழுவதும் பரவியது. ஆயுதம் தாங்கிய இவ்விளைஞர்களின் போராட்ட முறை வன்முறை வடிவு கொண்டாலும், இவ்விளைஞர்
எழுச்சியும், அது நாடு முழுவதும் உருவாக்கிய அதிர்வலைகளும் மிகப்பெரிது.
ஆயுதம்
தாங்கி, சமூக மாற்றம் விரும்பிப் போராடிய இப்போராளிகளின் போராட்ட முறைகளில் நமக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால், தம்மை இழந்து, களத்தில் மடிந்த இப்போராளிகளின் கருத்தியலில், அக்கருத்தியலில் அவர்கள் கொண்ட உறுதிப்பாட்டில் நாம் வேறுபட முடியாது.
எழுபதுகளில்
தொடங்கிய இப்போராட்டம், இன்றுவரை நாடு முழுவதும் பல மாநிலங்களில் செயல்படுவதும்
உண்மையே. இப்போராளிகளை ஒடுக்குவதில் தொடர்ந்து வந்த அனைத்து அரசுகளுமே ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தன. எனினும் இவ்வரசுகளின் முயற்சி முழுமையாக வெற்றி பெறாத நிலையில், இன்றைய மதவாத பா.ச.க.
அரசு, சட்டீஸ்கர் போன்ற சில மாநிலங்களில் வலுவாகச் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகளை முழுமையாக அழித்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறது. இக்குழுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகச் சொல்லிவரும் அமித்ஷாவின் கூற்றிற்கான சரியான பதிலை வரலாறுதான் கூறவேண்டும்.
ஆயுதம்
தாங்காமல், பேனா முனையால் மாற்றம்
வேண்டி போராடுவோர், நாளும் மீறப்பெறும் மனித உரிமைகளைக் காக்கும் வகையில் அரசு தரும் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எழுபதுகளில் உருவான இளைஞர்களின் எழுச்சியைத் தொடர்ந்து நாடு முழுவதும் உருவான பல்வேறு மக்கள் இயக்கங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் இயக்கங்கள், பெண்ணுரிமை அமைப்புகள் எல்லாமே வெறும் கோரிக்கைகளை முன்வைத்து மட்டும் குரல் எழுப்பாமல், சமூக சீர்திருத்தத்தோடு, சமூக மாற்று முழக்கங்களையும் முன்வைத்துப் போராடுகின்றன.
எதேச்சதிகாரம்
என்ற ஒற்றைமொழியில், சனாதனம் என்ற பழமைவாதக் கொள்கையை முன்வைத்து ஆட்சி நடத்திவரும் மதவாதிகளுக்கு மேலே காட்டப்பட்ட அனைத்து வகை அமைப்புகளும் அறிவுஜீவி நக்சல்பாரிகள்தாம்!
பழமைவாதிகள்
- அதிலும் மத அடிப்படைவாதிகள் (Fundamentalist)
எப்போதுமே மாற்றத்திற்கு எதிரிகளே! மாற்றம் வேண்டுவோர், இவர்களின் இருப்பிற்கு எதிரிகளே. இவர்கள் காட்டும் ஒற்றைவழி என்பது மாற்றத்தைக் கண்டு அஞ்சும் வழி!
பழமையும்,
பழமையைக் காக்க உருவாக்கப்பட்ட கருத்தியலும், மாற்றாகச் சிந்திப்போரை நவீன அரசின் பயங்கர ஆயுதங்களால் வீழ்த்த முற்படுவர்; இதன் ஒரு பகுதியே ‘அறிவுசார் நக்சல்’ என்ற புதிய நாமகரணம். எச்சரிக்கை கொள்வோம்!