இத்தாலியின் சான் ஜியோவான்னி ரொட்டோண்டோவில் புனித பியோ என்பவரால் நிறுவப்பட்ட ‘துயரங்கள் தீர்க்கும் இல்லம்’ (Casa Sollievo della Sofferenza) ஆராய்ச்சி மருத்துவமனை அறக்கட்டளையின் கண்காணிப்புக் குழுவை, திருத்தந்தை லியோ சந்தித்துப் பேசினார். கடந்த மே 27, 2026 அன்று திருத்தந்தையால் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட இக்குழு, தங்களின் தலைவரான மக்சிமினோ கபாயெரோ லெடோ தலைமையில் இச்சந்திப்பில் பங்கேற்றது. சந்திப்பின்போது, மருத்துவமனையின் தற்போதைய நிதிநிலைமை, பணியாளர்களுடனான உறவை முறைப்படுத்துதல், அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் நீண்டகாலச் செயல்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்துத் திருத்தந்தையிடம் விவரிக்கப்பட்டது. கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகளைக் கவனமாகக் கேட்டறிந்த திருத்தந்தை, மருத்துவமனையின் எதிர்கால வளர்ச்சிக்கான பாதையைத் தொடர்ந்து கூர்ந்து கவனிக்க உள்ளதாக உறுதியளித்தார். நோயாளிகளுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் தொண்டாற்றும் புனித பியோவின் இம்மாபெரும் பணியைத் தடையின்றி முன்னெடுக்க இக்குழுவின் பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.