news-details
சிறப்புக்கட்டுரை
மானுடமே! அரும்புகளை அழிக்காதே... மலரவிடு! (பெண் குழந்தைகள் தினம் செப்டம்பர் 8, 2026)

இறை இயேசுவின் அன்புக்குரியவர்களே,

உங்கள் அனைவருக்கும் புனித மரியன்னையின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தமிழ்நாடு ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு சார்பாகப் பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றோம். ஒவ்வோர் ஆண்டும் அன்னை மரியாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் தினமாகச் சிறப்பிக்கின்றோம்.

மானுடமே, அரும்புகளை அழிக்காதே; மலரவிடுஎன்ற இந்த ஆண்டின் மையக்கருத்து, ஒவ்வொரு பெண் குழந்தையின் மாண்பிற்கான, பாதுகாப்பிற்கான, உரிமைக்கான முழுமையான வளர்ச்சிக்கான ஆழமான அழைப்பாகும். அரும்பு என்பது எதிர்கால மலரின் வாக்குறுதி. அதை அழித்துவிட்டால் ஒரு மலர் மட்டுமல்லஓர் எதிர்காலமே அழிகிறதுஅதுபோல, ஒரு பெண் குழந்தை கல்வியிலிருந்து, பாதுகாப்பிலிருந்து, சமத்துவத்திலிருந்து, அன்பிலிருந்து விலகுவது இறைவன் அவளுக்குள் வைத்துள்ள கனவுகளை அழிப்பதாகும்.

ஒரு பெண் குடும்பத்தில் குழந்தையாகப் பிறந்து மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, மாமியாராக சமுதாயத்தில் பல சாதனைகளைப் படைக்கிறாள். இன்னும் ஒரு படி மேலே சென்று படிப்பிலும் கணினியிலும் தொழிலிலும் ஆணுக்கு நிகராகச் சாதனை படைக்கிறாள். அதேவேளையில், பாலினப்  பாகுபாடு, கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, இணையவழிச் சுரண்டல், மனிதக் கடத்தல்குழந்தைத் தொழிலாளர் முறை, மனநலப் பிரச்சினைகள் என்று இன்று பெண் குழந்தைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், இந்த மையக்கருத்து சமுதாயத்தின் மனச்சான்றை விழித்தெழச் செய்யும் இறைவாக்காக ஒலிக்கிறது.

திருவிவிலியம் ஒவ்வொரு மனித உயிரின் மாண்பையும் படைப்பிலிருந்தே அறிவிக்கிறது: “கடவுள் தம் சாயலில் மனிதனைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் (தொநூ 1:27). இது ஆணும்-பெண்ணும் சமமான மாண்புடையவர்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

இயேசுவின் பணியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனித்துவமான இடம் உண்டு. அக்காலத்தில் பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தபோதும், இயேசு அவர்களுடன் உரையாடினார்; அவர்களின் நம்பிக்கையைப் பாராட்டினார்; சமூகத்தின் மையத்திற்குள் அவர்களை மீண்டும் அழைத்து வந்தார்.  “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள் (மாற் 10:14). இந்த அழைப்பு இன்று ஒவ்வொரு பெண் குழந்தையையும் கல்வி, பாதுகாப்பு, அன்பு, நம்பிக்கை நிறைந்த பாதையில் வழிநடத்தும் பொறுப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும், “இச்சிறியோரில்  ஒருவரை இடறச் செய்பவனுக்கு....” (மத் 18:6) என்ற இயேசுவின் வார்த்தைகள், குழந்தைகள் பாதுகாப்பு என்பது ஒரு சட்டக் கடமை மட்டுமல்ல; அது இறைநம்பிக்கையின் அடிப்படை வெளிப்பாடும்கூட என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

கத்தோலிக்கத் திரு அவையின் சமூகப் போதனையின் முதல் தத்துவமும் அடிப்படைத்  தத்துவமும் மனித மாண்பு (Human Dignity) ஆகும்ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர் என்பதால், யாருடைய மாண்பையும் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

திரு அவையின் சமூகப் போதனை வலியுறுத்தும் சில முக்கியக் கொள்கைகள்

மனித உயிரின் புனிதம் மனித மாண்பின் பாதுகாப்பும்பொது நலன் (Common Good) ஏழைகளுக்கும் பாதுகாப்பற்றோருக்கும் முன்னுரிமை (Preferential option for the Poor), ஒற்றுமை (Solidarity), பங்கேற்பு (Participation), குடும்பத்தின் அடிப்படைப் பங்கு... இந்தக் கொள்கைகள் அனைத்தும் பெண் குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்களின் திறமைகள் முழுமையாக மலரவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

compendium of the social doctrine after Church கூறுகிறது: “ஒவ்வொரு மனிதரும் தன்னிலே ஒரு மதிப்புடையவர்; ஒருபோதும் ஒரு கருவியாக நடத்தப்படக்கூடாது.” பெண் குழந்தைகள் பொருளாகவோ, சுமையாகவோ, இரண்டாந்தரக் குடிமக்களாகவோ பார்க்கப்படாமல்இறைவனின் அரிய கொடையாக மதிப்பிடப்படவேண்டும்.

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தனதுletter to women-1995’ என்ற மடலில் கூறுகிறார்: “நீ பெண்ணாக இருப்பதற்காக நன்றி.” இந்தச் சிறிய வாக்கியம் பெண்ணின் தத்துவமான மாண்பையும்சமூகத்தில் அவளின் இன்றியமையாத  பங்கையும் போற்றுகிறது. அதேபோல் மேலும் அவர் கூறுகிறார்: “the future of humanity passes by way of the family.எனவே, பெண் குழந்தைகளை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் குடும்பங்களே மனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்குகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ்fratelli tutti’ (அனைவரும் சகோதரர்கள்) என்ற திருமடலில் கூறுகிறார்: “ஒவ்வொரு மனிதரும் என் சகோதரர், என் சகோதரி. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு, சுரண்டல் ஆகியவை சகோதரத்துவ உணர்விற்கு நேர்மாறானவை என்கிறார். மேலும், ‘amoris laetitia (அன்பின் மகிழ்ச்சி) என்ற திருமடலில் குடும்பத்தைஅன்பின் முதல் புள்ளிஎன்று அழைக்கிறார். குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை தனது சுயமரியாதை, நம்பிக்கைஇறைநம்பிக்கை, மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறாள்.  ‘laudato si’ (உமக்கே புகழ்) திருமடலில் அவர் கூறும்எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையதுஎன்ற சிந்தனை பெண்கள், குழந்தைகள், ஏழைகள் ஆகிய வலுகுறைந்த மனிதர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, இயற்கையின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை நினைவூட்டுகிறது.

நமது நாட்டில் பல பெண் குழந்தைகள் இன்னும் பாதுகாப்பற்ற சூழலில் வளர்கின்றனர். கல்வி இடைநிறுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடுபாலினப் பாகுபாடு, இணையவழி துன்புறுத்தல், குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை போன்றவை எண்ணற்ற அரும்புகளை மலர்வதற்கு முன்பே வாடச்செய்கின்றன. இந்தச் சூழலில் குடும்பம்திரு அவை, பள்ளி, அரசு, சமூக அமைப்புகள் அனைத்தும் இணைந்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். திரு அவையின் பாதுகாப்புக் கொள்கைகள் (safeguarding), ஒவ்வொரு குழந்தையும் அச்சமின்றி வளரக்கூடிய சூழலை உருவாக்குவது நமது நற்செய்திப் பணியின் பிரிக்க முடியாத பகுதியாகும் என்று வலியுறுத்துகின்றன.

பெண் குழந்தைகள் தினத்தில் நாம் உறுதியேற்போம்: ஒவ்வொரு பெண் குழந்தையின் மாண்பையும் மதிப்போம்; அவர்களின் கல்வியை ஊக்குவிப்போம்; பாதுகாப்பான குடும்பங்களையும் பங்குகளையும் உருவாக்குவோம்; பாலினப் பாகுபாட்டை நிராகரிப்போம்; குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் எதிர்ப்போம்அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகளாக இருப்போம். ஒரு பெண் குழந்தை மலரும்போது ஒரு குடும்பமே மலர்கிறது. ஒரு குடும்பம் மலரும்போது சமூகமே மலர்கிறதுசமூகம் மலரும்போது இறையாட்சி வெளிப்படுகிறது.

மானுடமே! அரும்புகளை அழிக்காதேமலர விடு- இது ஒரு முழக்கம் மட்டுமல்ல; இது இறைவனின் கட்டளை! திரு அவையின் சமூகப் போதனையின் இதயம்; மனிதகுலத்தின் நம்பிக்கை. ஒவ்வொரு பெண் குழந்தையும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட அரும்பு. முழுமையாக மலரும்போது, அதன் மணம் குடும்பத்தை மட்டுமல்ல, திரு அவையையும் சமூகத்தையும் நாட்டையும் வளப்படுத்தும். எனவே, அரும்புகளை மலரவிடுவோம். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்அவர்களின் கனவுகளுக்கு இறக்கைகள் கொடுப்போம். அதுவே நற்செய்தியை வாழ்வாக்கும் வழி. அதுவே நீதியின் பாதை. அதுவே இறையாட்சியின் அடையாளம்.