மாஸ்கோவிற்கான தனது பயணத்தை நிறைவு செய்து உரோமை திரும்பிய வத்திக்கானின் வெளியுறவுச் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், “அமைதி மட்டுமே அனைத்து மோதல்களுக்கும் ஒரே தீர்வாகும்” என்று தெரிவித்துள்ளார். இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு உரையாற்றிய அவர், உக்ரைன்-இரஷ்யப் போருக்கு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் மூலமே முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளார். வத்திக்கான் நேரடியாகத் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்காவிட்டாலும், இரு நாடுகளிடையே இணக்கமான பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிடுள்ளார். மேலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கும் ‘கத்தோலிக்கத் தொண்டுப் பணிகளை’ பலப்படுத்துவதே வத்திக்கானின் முதன்மை இலக்கு என்று குறிப்பிட்ட அவர், இரஷ்யாவிலுள்ள கத்தோலிக்கச் சமூகங்களைச் சந்தித்து, “சமூகத்தில் அமைதியை உருவாக்கும் தூதுவர்களாக நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள்” எனப் பாராட்டியுள்ளார். அவ்வாறே, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கிறித்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.