இன்றைய இளைஞர்களும் இளம்பெண்களும் தங்கள் வாழ்க்கையின் மிக மிக முக்கியமான நாளாகக் கருதுவது அவர்களின் திருமண நாளைத்தான். தங்கள் துணைவர் இப்படி இருக்கவேண்டும்? அப்படி இருக்கவேண்டும்? என்று வருடக்கணக்கில் கனவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள். உலகிலேயே சிறந்த அழகி, அழகான நிறம், அமெரிக்க மாப்பிள்ளை, நான் விரும்புவதை எல்லாம் வாங்கித்தரும் மாப்பிள்ளை, சமைக்கத் தெரிந்த மாப்பிள்ளை... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வோர் ஆசை. நிச்சயம் நடந்த பிறகு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், அன்பைப் பொழிகிறார்கள். திருமணத்தை ஏக தடபுடலாக நடத்தத் திட்டமிடுகிறார்கள். நகை, புடவை, செருப்பு, பூச்செண்டு, மாலை என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள். பெண், மாப்பிள்ளை அலங்காரம் முதல் நாள் தொடங்கி முகூர்த்தம் முடியச் சில நிமிடங்கள் வரை தொடர்கிறது. பெற்றோர் தங்கள் முழுச் சேமிப்பையும் பயன்படுத்தி தடபுடலாகத் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாரும் படையெடுத்து வந்து வாழ்த்திவிட்டுப் போகிறார்கள். இளைஞர்களின் வாழ்வில் இதைவிட முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வைக்கப்படும் நிகழ்ச்சி வேறு எதுவும் இல்லை.
எல்லாம்
சரிதான். திருமணம் என்பது ஆயிரங்காலம் வளர்ந்து செழிக்கவேண்டிய பயிர்தான். அந்தக் குடும்பப் பயணத்தின் தொடக்கத்தைக் கொண்டாட வேண்டியதுதான். ஆனால், இவ்வளவு சிறப்பாகத் தொடங்கும் புதிய குடும்பங்கள் ஏன் அவசர கதியில் சிதைந்து போகின்றன? சில நாள்கள், சில வாரங்கள், சில மாதங்களிலேயே தாய் வீட்டுக்குத் தனியாகத் திரும்பிவிடும் பெண்கள் எத்தனையோ பேர்! பெற்றக் குழந்தைகளோடு தனிமைப்படுத்தப்படும் பெண்கள் எத்தனையோ பேர்! வருடக்கணக்கில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் ஒப்புக்காகவோ அல்லது குழந்தைகளுக்காகவோ பல்லைக் கடித்துக்கொண்டு குடும்பம் நடத்துபவர்கள் எத்தனை பேர்?
மாமியார்
- மாமனாரை மதிக்கின்ற இளையோர் எத்தனை பேர்? மாமியார்-மாமனாரால் மதிப்போடும் பாசத்தோடும் நடத்தப்படுகின்ற தம்பதியர் எத்தனை பேர்? மாமியார்-மாமனார் உறவாலேயே பிரிந்து போகிற, சிதைந்து பாழாய்ப் போகிற குடும்பங்கள் எத்தனை? எத்தனை? ஆலமரம் போல் தழைத்து வளரவேண்டிய பிஞ்சு நெஞ்சங்கள், அவசர கதியில் தற்கொலைக்குத் தள்ளப்படுவது ஏன்?
ஏன்? ஏன்?
நீயா?
நானா? கணவனா? மனைவியா? மாமியாரா? மரு மகளா? அண்ணனா? தம்பியா? பிறந்தவளா? புகுந்தவளா? பெற்றோரா? பிள்ளைகளா? இந்த அகம்பாவம் நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இதுதான் நம் உறவுகள் எல்லாவற்றையும் சீரழித்து நம்மைப் பாடாய் படுத்துகிறது. நாட்டில் எல்லாரும் வேற்றுமைகளை எல்லாம் மறந்து, சமத்துவ சமூகமாக வளரவேண்டும் என வாய்கிழியப் பேசுகிறோம். சரிதான்!
முதலில் அந்தச் சமத்துவத்தை வீட்டில் கொண்டுவர வேண்டாமா? காலங்காலமாக ஆணாதிக்கச் சமூக அமைப்பு வளர்ந்து வந்திருக்கிறது. ஆண்
அதிகாரம் செலுத்தவேண்டும், பெண் அடங்கிப்போக வேண்டும். இதுதான்
நமது பண்பாடு, சட்டம்! ஆனால், இன்று மற்றோர் ஆதிக்கமும் சேர்ந்துகொண்டு விட்டது... அது பண ஆதிக்கம்! யார்
அதிகமாகச் சம்பாதிக்கிறார்களோ அவர்கள் வைத்ததுதான் சட்டம். யாரிடம் அதிக சொத்து இருக்கிறதோ அல்லது யார் அதிக சொத்தைக் கொண்டு வருகிறார்களோ அவர்கள் வைத்ததுதான் சட்டம்! இன்று குடும்ப உறவுகள் எல்லாம் இந்தச் சொத்துச் சக்தியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. எனவே, இன்று பல இளைஞர்கள் திருமணமே
வேண்டாம் என்று தப்பித்து ஓடும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கும் அர்த்தமற்றது.
உறவுகள்
வலுப்பட சமத்துவம் அடித்தளம். கணவன்
மனைவியை மதிப்பதுபோல், மனைவி கணவனை மதிக்க வேண்டும். மனைவி கணவனை நேசிப்பதுபோல் கணவனும் அவளை நேசிக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். குடும்ப வேலைகளை இருவரும் பேசிப் பகிர்ந்து கொள்ளவேண்டும். இருவரும் அவ்வப்போதும் தங்கள் பணியில் தவறுவது இயற்கை. அந்த நேரங்களில் ஒருவரையொருவர் மன்னிக்கவேண்டும்.
இது
வாழ்க்கையில் மிகப்பெரிய சவால்! ஆனால், பல குடும்பங்கள் இச்சவாலைச்
சந்தித்து வாழ்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய நீண்ட, நெடிய, இனிய
குடும்ப உறவுகள்தான் உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.