news-details
உலக செய்திகள்
‘நீரைப் பாதுகாப்போம்’

செப்டம்பர் 1-ஆம் நாள்படைப்பைப் பராமரிப்பதற்கான 11-வது உலக இறைவேண்டல் நாளைமுன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் வளத்தைப் பாதுகாப்பதற்காக, சிறப்பு இறைவேண்டல் செய்யவேண்டும் என்று திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். ‘திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலைப்பின்னல்வெளியிட்ட காணொளிச் செய்தியில் உரையாற்றிய அவர், “தண்ணீர் எல்லைகளற்ற உரிமையாகும்; அது அனைவருக்கும் உரிய பொதுவான கொடைஎன்று வலியுறுத்தியுள்ளார். நீரை வணிகப் பொருளாக மாற்றுவதற்கும், விரையம் செய்வதற்கும் கண்டனம் தெரிவித்த திருத்தந்தை, சுத்தமான குடிநீருக்காக மைல் கணக்கில் நடந்து செல்லும் ஏழை எளிய மக்களின் துயரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். தண்ணீரை வீணாக்காமல் எளிமையான வாழ்முறையைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ஏற்றத்தாழ்வுகளின்றி அனைவரும் அச்சமின்றித் தண்ணீரைக் குடிக்கும் உரிமையைப் பாதுகாக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், குழாய் கசிவுகளைச் சரிசெய்தல், நீரைக் குறைவாகப் பயன்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை மாசடையாமல் தடுத்தல் போன்ற தனிநபர் பொறுப்புகளையும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ கேட்டுக்கொண்டுள்ளார். அக்டோபர் 4-இல் வரும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழா வரை தொடரும் இக்காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து நமது பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாக்கத் திரு அவை அழைப்பு விடுத்துள்ளது.