news-details
தலையங்கம்
தெற்காசியக் கூட்டமைப்பு BRICS - 2026: சாத்தியங்களும் சவால்களும்!

உலகளாவிய வர்த்தகப் பாதைகளிலும், திட்டமிட்ட புவிசார் அரசியலிலும் கடுமையான கொந்தளிப்புகள் நிலவிவரும் இன்றைய சூழலில், இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் 18-வதுபிரிக்ஸ் உச்சி மாநாடுசெப்டம்பர் 12, 13 ஆகிய நாள்களில் நடைபெற்றது; இது பன்னாட்டு அரசியல் அரங்கில் மிக முக்கியமானதொரு நகர்வாகக் கணிக்கப்படுகிறது.

2006-இல் பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா (BRIC) ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்போடு தொடங்கி, 2010-இல் தென் ஆப்பிரிக்காவையும் இணைத்துக்கொண்டுபிரிக்ஸ்என உருவெடுத்த இக்கூட்டமைப்பு, இன்று தன் 20 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை நிறைவுசெய்து, முதிர்ச்சியடைந்த அமைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.

குறிப்பாக, 2024-இல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் இணைப்பிற்குப் பிறகு, உலக அரங்கில் மேலைநாடுகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக விளங்கும் ஆற்றல்மிக்கக் கூட்டமைப்பாக விரிவடைந்துள்ளது. உலக மக்கள்தொகையில் பாதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 13.6 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான பங்கையும், 4 ட்ரில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பையும் கொண்டுள்ள அமைப்பாக இக்கூட்டமைப்பு திகழ்கிறது.

உறுதித்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உருவாக்குதல் (Building for Resilience, Innovation, Cooperation and Sustainability) என்ற தொலைநோக்கு மையக்கருத்துடன், 2026-ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்றுத் தொடங்கிவைத்த இம்மாநாட்டில், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோ னியோ குத்தேரஸ், உலக வர்த்தக அமைப்பு (WTO), உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்றது இதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டபுது டெல்லி பிரகடனம், வளரும் நாடுகளானகுளோபல் சவுத் (Global South) அமைப்புகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. ‘பிரிக்ஸ்அமைப்பை வெறும் நாடுகளின் கூட்டமைப்பாக மட்டும் சுருக்கிவிடாமல், உலகளாவியச் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்கும்தீர்வுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு (Solutions Ecosystem) என்று வர்ணித்த இந்தியப் பிரதமரின் உரை, இக்கூட்டமைப்பின் புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.

கடந்த காலங்களில் நிலவிய நிதிசார்ந்த சார்ந்திருப்பைக் குறைத்து, உறுப்பு நாடுகளிடையே எல்லை கடந்த வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் தற்சார்பை எட்டுவதற்கான தெளிவான வழிகாட்டலை இம்மாநாடு முன்வைத்துள்ளது.

மேலைநாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி அமைப்புகளுக்கு (IMF) மாற்றாக, புதிய முதலீட்டுத் தளத்தை (New Investment Platform-NIP) உருவாக்குவதற்கான முதற்கட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், குஜராத்திலுள்ளகிஃப்ட் சிட்டி (GIFT City) உலக நிதி மையத்தில்பிரிக்ஸ் அபாயக் கூடம் (BRICS Risk Lab) மற்றும் காப்பீட்டு மையத்தை அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவு, நிதிசார் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாகும்.

உலகளாவிய வர்த்தகச் சங்கிலியில் வளரும் நாடுகளின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) நிதி நெருக்கடிகளைப் போக்கஜெய்ப்பூர் ஒருமித்த கருத்து (Jaipur Consensus) மூலம், கடன் மதிப்பீட்டு நடைமுறைகள் மற்றும் விலைப்பட்டியல் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலஸ்தீன மக்களின் கட்டாய இடப் பெயர்விற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த இம்மாநாடு, காசாவில் உடனடிப் போர்நிறுத்தம், பாலஸ்தீனத்திற்கு முழுமையான .நா. உறுப்பினர் அங்கீகாரம் மற்றும் செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் தடையற்ற உலக வர்த்தகப் போக்குவரத்து ஆகியவற்றை வலியுறுத்தி, தனது அமைதி அர்ப்பணிப்பை உலகிற்குப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இருப்பினும், ‘பிரிக்ஸ்அமைப்பு உலக அரங்கில் மிகப்பெரிய பொருளாதார ஆற்றலாக உருவெடுத்திருந்தாலும், அதன் அகக் கட்டமைப்பில் நிலவும் முரண்பாடுகளும் சவால்களும் தவிர்க்க முடியாதவை.

பிரிக்ஸ்அமைப்பின் இரு முக்கியத் தூண்களான இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் எல்லைச் சிக்கல்கள் மற்றும் புவிசார் போட்டி முழுமையான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையான முழுமையான சீரமைப்பை எட்ட இன்னும் பல படிகள் கடக்கப்பட வேண்டியுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள உறுப்பு நாடுகளிடையே நிலவும் உள்நாட்டுப் பூசல்கள், இவ்வமைப்புக்கு மற்றொரு சவாலாகும். ஈரானுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நிலவும் அரசியல் சார்ந்த முரண்பாடுகள் தீவிரமாக இருக்கும் சூழலில், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் மோதல்கள் குறித்து ஒருமித்த வலுவான நிலைப்பாட்டை எடுப்பதில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.

மேலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ‘பிரிக்ஸ்அமைப்பைமேற்கத்திய எதிர்ப்பு அணியாகவே (Anti-Western Block) கருதுகின்றன. ‘பிரிக்ஸ்நாடுகள் தங்களுக்குள் மாற்றுப் பணப் பரிவர்த்தனை முறையை உருவாக்குவதையும், டாலருக்கு இணையான மாற்றுச் செலாவணியைக் கொண்டுவர முயல்வதையும் அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உறுப்பு நாடுகள்மீது விதிக்கப்படும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகள், உலக வர்த்தகச் சங்கிலியைப் பெரிதும் பாதிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்றவை காலாவதியான கட்டமைப்புடன், மேலைநாடுகளின் நலன்களை மட்டுமே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன என்ற விமர்சனம் வலுத்து வருகிறது. இந்த இரட்டை நிலையைச் சுட்டிக்காட்டும் பிரிக்ஸ், ‘குளோபல் சவுத்எனப்படும் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் உண்மையான குரலாக மாறியுள்ளது.

நாணயப் பரிவர்த்தனையில் டாலரின் தனியுரிமை கொண்ட முழுமையான கட்டுப்பாட்டைக் குறைத்தல், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பப் பகிர்வு, கடலடிக் கேபிள் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் முக்கியமான கனிம வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றில்பிரிக்ஸ்இன்று எடுக்கும் முடிவுகள், உலகப் பொருளாதாரத்தின் திசையைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றவை.

2026 ‘பிரிக்ஸ்உச்சி மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்டபுதுடெல்லி பிரகடனம், உலக அரங்கில் ஒரு புதிய பன்முனை உலக ஒழுங்கமைவை (Multipolar World Order) உருவாக்க அடிக்கல் நாட்டியுள்ளது. “வெறும் விதிகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றும் நாடுகளாக மட்டுமே வளரும் நாடுகள் தொடர முடியாது; மாறாக, உலகளாவிய விதிகளையும் கொள்கைகளையும் வகுக்கும் முதன்மைச் சக்தியாக அவை உருவெடுக்க வேண்டும்என்ற இந்தியப் பிரதமரின் முழக்கம் தகுந்த காலத்தில் வெளிப்பட்ட ஒன்று.

இருப்பினும், ‘பிரிக்ஸ்அமைப்பின் எதிர்கால வெற்றியானது, அதன் உறுப்பு நாடுகள் தங்களுக்குள் இருக்கும் இருதரப்பு முரண்பாடுகளைக் களைந்து, எட்டப்பட்ட தீர்மானங்களை எத்துணை வேகத்தில் நடைமுறைப்படுத்துகின்றன என்பதிலேயே இருக்கின்றது. ‘அதிகாரக் குவியலுக்கு மாற்றாக, சமத்துவமான உலகளாவிய சனநாயக நிர்வாகம்என்ற பிரிக்ஸின் இலக்கு வெல்லுமானால், அது 21-ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியலில் ஒரு புதிய விடியலாக அமையும் என்பதே நம் நம்பிக்கை!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்