தமிழகத்தின் நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் தன் பதிலுரையின்போது, உதிர்ந்த சில சொற்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மரிய வில்சன் பேசிய உரையின் மீதான அரசியல் தொடர்பான அல்லது தனது கட்சியின் கொள்கை தொடர்பானதாக மட்டுமிருந்தால், அதைப்பற்றி நாம் விமர்சிக்கத் தேவையில்லை. மரிய வில்சனின் மதம் சார்ந்த அடையாளமே இங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவரின் பெயரிலேயே அப்பட்டமாக இவர் சார்ந்த மத அடையாளம் உள்ளது. இப்பெயரில் எவ்வித மாற்றத்தையும் இவர் வலிந்து செய்யவில்லை. தான் ஏற்றுக்கொண்ட அல்லது இவரது பெற்றோரின் நம்பிக்கையால் அளிக்கப்பெற்ற பெயரையே எவ்வித சமரசமுமின்றி வைத்துக்கொள்கிறார். இவர் ஏற்றுக்கொண்ட இவர் பெயரிலேயே, இவர் அடையாளம் வெளிப்படையாகத் துவங்குகையில், தன்னை ஒரு Born Christian (பிறப்பிலேயே கிறித்தவன்) என்று அறிவித்ததில் என்ன தவறு?
இவர்
சார்ந்த கட்சியின் தலைவர், பாரதிய சனதாவின் இராசா அறிவிக்காத வரை வெறும் விஜயாகத்தான் அறியப்பட்டார். இராசாவின் கருணையால் ஜோசப் விஜயானவர், மிக வசதியாக, அரசியல் நோக்கோடு ஜோசப்பைத் தக்க வைத்துக்கொண்டார். ஜோசப் என்ற பெயரைச் சௌகரியமாகத் தக்க வைத்துக்கொண்டு, புனித அந்தோணியாரை முழந்தாள் பணிந்து, முழம் போட்டு நடந்தபோது, கிறித்தவப் பக்திக் கூட்டம் கசிந்து போய்விட்டது. திருச்சி கிழக்கின் கிறித்தவப் பக்திக் கூட்டம் அப்படியே கரைந்து போயிற்று. தன் முழங்கால் பக்திப் பரவசம் வெறும் சடங்கு என்று, இவரின் திருச்செந்தூர் வேலேந்திய நிகழ்வும், தனி விமானத்தில் பயணித்து, சீரடி சென்று துதி செய்த நிகழ்வும், விட்டேனா பார் என்று முந்தைய வழிகாட்டி எம்.ஜி.ஆர் பாணியில் கர்நாடகாவின்
வாள் கொடுத்த சீர்மையும், இவரின் சுய உருவத்தை உலகுக்கு அறிவித்தது. ஜோசப் விஜய், சமயப் பன்மையை மதிப்பவராயினும், சமய நம்பிக்கையே இல்லாதவராயினும் ஏன் நாத்திகராக வாழ்ந்தாலும் நமக்கு ஆட்சேபனை இல்லை. வெறும் அரசியல் இலாபம் கருதி, சுய அடையாளத்தை அடகு வைக்கும் எவரையும் நாம் ஏற்கத் தயாராக இல்லை; விஜய் தேர்தல் வெற்றி கருதி சமயச் சார்பை மிக வெளிப்படையாகக் காட்டிக் கொண்டதில் இருந்த சமரசத்தில், ஓர் அரசியல் இருந்தது; அரசியல் நோக்கமுமிருந்தது.
ஆனால்,
மரிய வில்சன் தன்னைப் பிறப்பால் கிறித்தவன் என்று அடையாளப்படுத்திக் கொண்டதில் அரசியல் இருந்ததா? அரசியல் இலக்கு இருந்ததா? அல்லது மதவாதக் கொள்கை இருந்ததா? மரிய வில்சன் தன்னைப் பிறப்பால் கிறித்தவன் என்று அடையாளப்படுத்தியவுடன் ஏன் இவ்வளவு பெரிய கயோபரம்? ஏன் இவ்வளவு பெரிய கூச்சல்?
தமிழக
சட்டமன்றம், ஒரு கிறித்தவ மறைபரப்புக் கூடமாக மாறிவிட்டதென்றக் கூச்சல் ஒரு புறம். ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சி கிறித்தவத்தை தமிழ்நாட்டில் ஆழப்படுத்தும் பெரு முயற்சியும், சதியும் நடப்பதாக ஒரு பரப்புரை.
பெரும்பான்மை
இந்து மதவாதத்தை நாளும் எதிர்த்து வரும் உண்மையான மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் பலர், தமிழக சட்டமன்றத்
தலைவர் பிரபாகர் அவர்களின் விவிலியக் கருத்துகளைத் தன் உரையில் குறிப்பிட்டு வரும் போக்கையும், மரிய வில்சனின் விவிலிய கோட்பாடுகளைத் துணிந்து உரைத்த செயலும், தமிழக அரசியலை மதவாத அரசியலுக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும் என எச்சரித்து வருதலில்
இருக்கும் உண்மையைப் பரிசீலிக்காமல் புறந்தள்ளிவிட முடியாது.
இவர்கள் மதவாதிகளா?
தமிழக
அரசியல் கிறித்தவப் பிடியில் சிக்கியுள்ளது என்று இந்து முன்னணியினர் எச்சரித்து வருகின்றனர்; ஏற்கெனவே வலுவாக வளர்ந்து வரும் பெரும்பான்மை வகுப்புவாத கருத்தியலை வலுசேர்க்க (Reinforce) இப்போக்கு
உதவலாம் என்ற அச்சம் மதச்சார்பற்ற சக்திகளிடம் எழுந்துள்ளது, இந்திய அரசியல் சாசனமே மதச்சார்பற்ற (Secular) என்ற
போர்வையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட கிறித்தவ அரசியல் சாசனமே (Christian Constitution) என்ற
பரப்புரை ஆய்வறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. கிறித்தவச் சாயல் (Visibility) தமிழக
அரசின் போக்கில் அதிகம் இருப்பதாகவும், இதனால் தமிழகத்தின் மக்கள்தொகையில் (Democraphy) பெருத்தமாற்றம்
நிகழப் போகிறது என்ற அச்சத்தையும் மதவாதிகள் பரப்பி வருகின்றனர்.
கோவை
மாவட்டத்தின் ஒரு பகுதியில் கிறித்தவச் சபை சார்ந்த குழுவினர் எழுப்பிய தேவாலயத்தை ஆட்சேபித்த இந்து மதத்தவர் சிலர், இவ்வாலயம் அனுமதியின்றி எழுப்பப்பட்டு வருவதாகவும், மதம் மாற்றும் நோக்கிலானது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கூறி வழக்குத் தொடர்ந்தபோது, தீர்ப்பளித்த நீதியரசர் ஜி. ஆர். சாமிநாதன் அவர்கள் இவ்வாலயம் எழுப்பப்பெறலுக்கு எதிராக எழுப்பப்பட்ட சந்தேகத்துக்கு இன்றைய தமிழக அரசியல் சூழல் ஏதுவாக உள்ளது என்ற தீர்ப்பின் செய்தி என்ன?
இந்தியாவில்
வளர்ந்து, இன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய வகுப்புவாத கருத்தியலை இரு வகையாகப் பிரிப்பர். ஒன்று பெரும்பான்மை வகுப்புவாதம்; மற்றொன்று சிறுபான்மை வகுப்புவாதம். வகுப்புவாதம், வகுப்புவாத அரசியல் என்பன இரண்டுமே மானுட மகத்துவத்தை அழிப்பதுதான். பெரும்பான்மை வகுப்புவாதம் எதேச்சதிகாரத் தன்மையுடையது. சிறுபான்மை வகுப்புவாதம் பெரும்பான்மையின் மீதான அச்சத்தால் பிரிவினை பேசும்; மதம், இனம், மொழி அடிப்படையிலான பெரும்பான்மைவாதம் ஒற்றுமை, ஒருமை, தேசியம் என்று உரக்கப் பேசும். இவர்கள் கையில் எடுக்கும் மதம், மதத்தின் அல்லது மதம் முன்னெடுக்கும் கடவுள் நம்பிக்கையால் அல்ல. மதம் இவர்களுக்கு அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கான கருவியே.
இந்திய
இந்துத்துவர்கள் முன்னெடுத்த இராமர் சென்ம பூமி மீட்பு என்ற போராட்டம், இராமர் மீதான பக்தியால் அல்ல; இராமர் எனும் அடையாளத்தின் மூலம் (Symbol) பெரும்பான்மை
மக்களை மத ரீதியாக வெறியூட்டி,
அணிதிரட்டி, ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளமை ஏற்கெனவே அறிந்த உண்மை. சிறுபான்மையினர், தான் மதம் சார்ந்த அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்தற்கும் மதச்
சிறுபான்மையினர் காட்டிக்கொள்தற்கும் வேறுபாடு உண்டு.
தமிழக
சட்டமன்றத் தலைவர் கிறித்தவர்; கிறித்தவ மத நம்பிக்கையில் ஊறிப்
போனவர். அவர் சார்ந்த கட்சியின் தலைவர் ஜோசப் என்ற பெயருடைய கிறித்தவராக இருக்கலாம். திரு. பிரபாகர் ஜோசப் விஜய் சார்ந்த கட்சியைச் சார்ந்தவர் என்பதாலேயே கிறித்தவம் தரும் கொள்கைகளைப் பேசவில்லை; ஒரு மறைசார்ந்த கொள்கையில் பிறப்பிலிருந்து வளர்க்கப்பட்ட இவர், இன்றும் அதே கொள்கைகளை உயிர்க் கொள்கைகளாகப் பேசுகிறார். இவர் ஒரு வகுப்புவாதி அல்ல; இவர் ஒரு மதவாதியும் அல்ல; தன்னைச் செதுக்கி வரும் ஓர் உயிர் மறையின் கொள்கையின் ஈர்ப்பினால் வாழ்வில் எங்கெல்லாம் பறைசாற்ற முடியுமோ அதைச் சொல்கிறார். எவ்வித உள்நோக்கும் அரசியல் இலாபமும் இல்லா நிலையில் இவர் காட்டும் தனிநபருக்கான நம்பிக்கை வெளிப்பாட்டிற்கு நோக்கம் கற்பிக்கும் சக்திகளை அடையாளம் காண்போம்.
ஏற்கெனவே
குறிப்பிட்டது போன்று, முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் சமய அடையாளத்தில் அரசியல் உண்டு: கிறித்தவ அடையாளத்திற்குத் தன் மீது திணிக்கப்பட்ட ஜோசப்பை வலுவாகத் தக்க வைத்துக்கொண்டு, எல்லோரையும் திருப்தி செய்ய ஆலயங்களை வலம் வந்து தரிசனத்தால் புரிந்துகொள்ள முடியும்.
மரிய
வில்சன் தன்னைக் கிறித்தவனாக அறிமுகப்படுத்தியதில் என்ன அரசியல் இருக்கிறது? மிகப்பெரிய அரசியல் பாரம்பரியம் இவருக்கு இல்லை; இவர் ஒரு கல்வி நிறுவன காப்பாளர்: இந்நிலையில் இன்றைய அரசியல் அமைப்பில் இவர் பங்கேற்கும், வாய்ப்பு என்பது இவர் எதிர்பாரா ஒன்று. இவர்தம் தேர்தல் பரப்புரையில் மதம் சார்ந்து இவர் பரப்புரை அமையவில்லை. மரிய வில்சன் என்ற கிறித்தவப் பெயரைத் தாங்கியதால் இவர் வெற்றி பெறவில்லை. இவரின் வெற்றி, எதிர்பாராத வெற்றியாக இருந்தாலும், இன்றைய வகுப்புவாத அரசியலில், சமயங்கடந்து மக்கள் அளித்த வெற்றி, என்பதை ஏற்றுக்கொள்வோம்.
வலுவான
அமைப்பு ரீதியான (Structured) கட்சிகளின்
எதிர்பார்ப்பையும் தாண்டி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக ஆட்சி, ஒரு புரியாத புதிராக இருக்கலாம்; இப்புதிர்களை அவிழ்த்துக் காட்ட வேண்டிய தருணத்தில், எங்கிருக்கிறோம்? ஏன் இந்த மாற்றம் என்று விடை தெரியாமல் சிக்கித் தவிக்கும் சக்திகளுக்கு விடை கூற வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.
இந்திய
அளவில் வளர்ந்துள்ள வகுப்புவாத அரசியல் வளர்ச்சியினூடே, இந்துத்துவ வகுப்புவாதிகள் நாளும் வளர்ந்து வரும் பொய்யான கருத்தியல் ரீதியான எதார்த்த நிலையில் நாம் மெய்ம்மை காண வேண்டிய நிலையிலுள்ளோம். தமிழக ஆயர் பேரவையும், தமிழக இறையியல் ஆய்வாளர்களும் இதனை நம் வாழ்வியல் பிரச்சினை என்பதாகக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஜோசப்
விஜய் என்ற பெயரில் உருவாகியுள்ள அரசியல் தலைமையும், மரிய வில்சன், பிரபாகர் என்ற மனிதர்களின் கிறித்தவ அடையாள உறுதிப்பாடும், இன்றைய பேசுபொருளாக மாறியுள்ளனவா என்பதுதான் இன்றைய கேள்வி. கேள்விகளைத் தாண்டி விடைகளைத் தேடிச்செல்வோம். எதிரிகள் மரிய வில்சனையும் பிரபாகரையும் மட்டும் குறி வைக்கவில்லை. தமிழகம் தாண்டி தேசிய அளவிலும் கிறித்தவத்திற்கு எதிரான பொய்யுரைகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. மரிய வில்சனும் பிரபாகரனும் மதவாத சிந்தனை உடையவர் அல்லவா! அவர்கள் எளிய நம்பிக்கையாளர். தம் நம்பிக்கையை வெளிப்படுத்துவது அவர்தம் உரிமை, அரசியல் சாசன உரிமை. இவ்வுரிமை மூலம், கிறித்தவத்தின் அன்பு மொழியை, கருணை மொழியை அறிவிக்கிறார். அடையாளம் எனும் அடிப்படை உரிமையைப் பதவி நோக்கில், அரசியல் நோக்கில் சமரசம் செய்து வாழ்வோர் மிகுந்துள்ள இக்காலகட்டத்தில் எளிய நம்பிக்கையாளர் நாம், நம் நற்செய்தியை அறிவிப்போர் என்பதை மறக்க வேண்டாம்.
இந்து
என்ற மத அடிப்படையிலான இராஷ்டிரம்
அமைப்பதே நோக்கம்: இராஷ்டிரம் கலாச்சாரத் தேசியத்தின் அடிப்படையில் அமையும். இத்தேசத்தின் பிரதமர், திருப்பரங்குன்றத்தில் நெடுஞ்சாண்கிடையாகத் தொழுவார். 400 ஆண்டுகால மசூதியை இடித்து, மாபெரும் கோவில் கட்டி, சமயச்சார்பற்ற நாட்டின் பிரதமர், அக்கோவிலின் தலைமைப் பூசாரியாகவே நின்று பிரதிஷ்டை செய்வாராம்.
இச்செயல்களில்
மதவாதம் இல்லை; மதச்சார்பின்மை கேள்விக்குறியாகவில்லை; சட்டமன்றத்தில் ஒலித்த கிறித்தவம் என்ற ஒற்றை ஒலி என்ன செய்துவிடும் என்று புலம்புவோரின் பிரிவினைப் போக்கைப் புரிந்துகொள்வோமா?