இனிமையான சொற்கள், உடனடியான ஆமோதிப்பு... இவையெல்லாம் செயல்பாட்டின் மாற்று அல்ல. ‘செய்வேன்’ என்னும் உறுதிமொழிகள் பல செயல்படாமலே நின்றுவிடும். அத்தகைய ஆகாய உறுதிமொழிகளினால் பலன் ஒன்றும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை இனிய முகத்தோடும் வண்ணமிகு அரிதாரத்தோடும் ஆனந்தமாய் ‘கடன் திருப்பலியில்’ கரம் கோர்க்கும் நாம், வார நாள்களில் நம் வாழ்வில் வெளிப்படுத்துவது பல நேரங்களில் வெறுப்பும், சகோதரத்துவத்தைப் புறக்கணிக்கும் செயல்பாடுகள். ஞாயிறு வழிபாட்டில் ‘ஆமாம்’, ‘ஆமென்’ என்று இறைவனின் வார்த்தையைக் கேட்டு இறையுணவை உண்டு வெளியேறும் நாம், வார நாள்களில் கசப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்துவது ஒரு முரணான செயல்பாடு. அரிதாரம் இல்லாத அவதாரமும், பாசாங்கு இல்லாத பலன் தரும் வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியின் மையமாக அமைந்துள்ளன. கண்முன் நிற்பவரிடம் தேனொழுகப் பேசி, புறமுதுகிற்குப் பின்னால் சென்று அவதூறு வார்த்தைகளை உதிர்த்து, ஒருவரின் ஆளுமையை நிலைகுலையச் செய்வது, நம்மிடமிருந்து களையப்படவேண்டும்.
நற்செய்தியில்
குறிப்பிடப்படும் உவமை எளிமையானது. ஆனால், அது நம்மை ஆழமாகச் சிந்திக்கவும் செய்கின்றது; நமது கிறித்தவ வாழ்வைப் பற்றிய சவாலையும் எழுப்புகின்றது. இரண்டு மகன்களின் செயல்பாடுகளின் ஒப்பீட்டைக் கூறுவதற்கு முன் இயேசு தமக்குச் செவிமடுத்துக் கொண்டிருந்த தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்களிடம் அவருடைய கருத்தைக் கேட்கின்றார். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை எழுப்பி, பிறகு அவ்வுவமையை எடுத்துரைத்து, ‘இந்த இரண்டு மகன்களில் நீங்கள் யாரோடு உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள்?’
என வினவுகிறார்.
இருவேறு மனநிலைகள்:
‘ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்’
என்று இன்றைய நற்செய்தி உவமையின் தொடக்க வரிகள் அமைகின்றன. தந்தையின் இரண்டு மகன்கள் என்பதை இரண்டு மனநிலைகள் என்றுகூட பொருள் கொள்ளலாம். இரண்டு மனநிலைகளும் ஒன்று மற்றவையிலிருந்து வேறுபட்டவை. ஒன்று மற்றொன்றிற்கு முரணானது. இரண்டு மகன்களின் செயல்பாடுகளும் வேறுபட்டவை.
முதல் மகன்:
தன் மனம் எண்ணுவதை அப்படியே கூறிவிட்டுச் செல்கின்றான். மற்றவர்களின் பார்வைக்காகவும் எண்ணங்களுக்காகவும் அவர்களின் மதிப்பீடுகளுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் வழங்கி, பயந்து, ‘பிறர் என்ன நினைப்பார்களோ?’ என்றெல்லாம் கருதாமல், சுதந்திரமாகத் தனது தந்தையிடம் தனது மனத்தை வெளிப்படுத்துகின்றான். பிறகு அவனது எண்ணங்களில் மாற்றம் நிகழ்கின்றது. தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லையே என்று மனம் வருந்தி, எண்ணத்தை மாற்றிக்கொண்டு திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றச் செல்கின்றான். தந்தையை அவன் பார்த்த விதமும், வேலையைப் பற்றிய அவனுடைய எண்ணங்களும் மனநிலையும் மாறுகின்றன. அவன் உண்மையான மகனாகச் சுதந்திரத்துடன் செயல்பட்டான். முதலில் தயக்கம் காட்டினாலும், இறுதியில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றான். வார்த்தைகளால் ‘இல்லை’ என்று சொன்னாலும், அவனுடைய செயல்கள் இறுதியில் ‘ஆம்’ என்று கூறுகின்றன.
இளைய மகன்:
மிகவும் துடிப்பான மகன். தந்தையின் வார்த்தைக்கு மறுபேச்சு பேசிடத் துணிவில்லாதவன். தந்தை முன் ‘பணிவோடு’ நடந்துகொள்வது போல் பாசாங்கு காட்டிக்கொண்டு, அவரை எதிர்கொள்ளப் பயந்து, மாற்றுக்கருத்தைக் கூற உறுதியற்று, உண்மையான சுதந்திரமற்ற மனிதனாகவே நற்செய்தியில் வெளிப்படுகின்றான். கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்வதைப் போலத் தோன்றினாலும், நடைமுறையில் தந்தையின் வேண்டுகோளை நிராகரிக்கின்றான். அவனுடைய வார்த்தைகளுக்கும் செயல்முறைக்கும் இடையே ஒற்றுமை இல்லை.
தந்தை: திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளராகிய தந்தை, தனது திராட்சைத் தோட்டத்தில் பணிசெய்து, தேவையான கனிகளைப் பெற்று, குடும்பம் மகிழ்வுடன் வாழ்ந்திட தனது மகன்களைத் தேடிச்சென்று பணிக்கு அழைக்கின்றார். மூத்த மகனின் மறுப்பும், உடனடியான எதிர்மறையான பதிலும், அவரைச் சோர்வுறச் செய்யவில்லை. அவர் அதிர்ச்சி அடையவில்லை. இளைய மகனிடமும் சென்று திராட்சைத்
தோட்டத்தில் பணிக்குச் செல்ல அழைப்பு தருகின்றார். இவ்வுவமையில் தந்தை தனது மகன்களைப் பணியாளராக நடத்தவில்லை; மாறாக, பிள்ளைகளுக்குரிய மாண்புடன் அணுகுகின்றார். நம் இறைவனாகிய தந்தை, தமது பிள்ளைகள் மாண்புடனும் சுதந்திரத்துடனும் வாழவே விரும்புகின்றார். இறைவன் நம் சுதந்திரத்தை மதிக்கின்றார். நாம் எப்படிப்பட்ட மனநிலையை உடையவர்கள் என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவனுக்கு இவர்தான் சிறந்த மகன் / மகள் என்று தனி விருப்பு - வெறுப்பு கிடையாது. எல்லாரிடத்திலும் ஏற்றங்களும் இறக்கங்களும் உள்ளன. முரண்பாடான வாழ்வு நம்மிடத்தில் இல்லாமல் இல்லை. இறைவன் அத்தகைய சூழ்நிலைகளைப் பொறுமையோடு கையாள்கின்றார். தந்தை தம் மகன்களைத் தேடிச் செல்கின்றார். முரணான வாழ்வும், பாசாங்கான வார்த்தைகளும் மாற்றம் பெற ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கின்றார். கிறித்தவ வாழ்வில் வார்த்தைக்கும் வாழ்விற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை, இடைவெளியை அகற்றவே இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது. தந்தை தன் மகன்கள் மீது அதிகாரம் செலுத்தவில்லை, ஆணை பிறப்பிக்கவில்லை. உள விருப்பத்துடனும், சுதந்திரத்துடனும் தனது திராட்சைத்
தோட்டத்தில், தன் பிள்ளைகள் பணியாற்றி, நிறைந்த கனிகளை அவர்களைச் சார்ந்த குடும்பத்திற்கும், உலகிற்கும் வழங்கிட அவர் விரும்புகின்றார்.
தந்தையின் விருப்பம்
எது?
இரண்டு பிள்ளைகளில் யார் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார்கள்? இன்றைய நற்செய்தியின் மையமாக இக்கேள்வி எழுப்பப்படுகின்றது. நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்கின்றோமா? எனச் சோதித்துப் பார்ப்பது அவரது விருப்பம் அல்ல; மாறாக, நாம் பிள்ளைகளுக்குரிய மதிப்போடும் மாண்போடும் வாழ்கின்றோமா? என அறியவே இறைவன்
விரும்புகின்றார். இறைவனின் திட்டங்கள் நம்முடைய திட்டங்களாக மாறுகின்றபொழுது, சிறந்த கனிகளை நாம் நமது செயல்பாட்டில் வெளிப்படுத்த முடியும்.
இறையாட்சிக்கு
உட்படுவோம்:
இன்றைய உவமையின் இறுதி வரியில், “வரி தண்டுபவர்கள், பாவிகள் உங்களுக்கு முன்பாக இறையாட்சிக்குள் செல்வார்கள்” எனப்
பரிசேயர்களை நோக்கி இயேசு குறிப்பிடுகின்றார். இறை இரக்கத்திலும் மன்னிப்பிலும் பராமரிப்பிலும் நம்பிக்கை கொள்வோர் என்றுமே முதிர்ச்சியான மனநிலையைக் கொண்டவர்களாக இறையாட்சிக்கு உடனடியாக உட்படுவார்கள். இறையாட்சியில் நுழைவது காலவரிசையைப் பொறுத்தது அல்ல; ஒருவர் முதலில் கிறித்தவத்திற்கு வந்தாரா? பின்னர் கிறித்தவத்திற்கு வந்தாரா? யாரெல்லாம் பரம்பரைக் கிறித்தவர்கள்? என்பனவெல்லாம் அளவுகோல் அல்ல; மாறாக, இறையாட்சிக்கு உட்படுவதற்கு நம்பிக்கையாளரின் வாழ்க்கை முறையே அவசியமான அளவுகோல். தந்தையின் விருப்பத்தைச் செயல்படுத்துவதே இறையாட்சியின் கடவுச்சீட்டு (Passport). இயேசுவைப்
பின்பற்றுவது வெறும் வார்த்தை அலங்காரங்களால் அமைவதில்லை. நடைமுறை வாழ்வில் இறைவனோடும் சகமனிதர்களோடும் உள்ள உறவிலும், அவரின் வார்த்தைகளைத் தர்க்கமாகப் பின்பற்றுவதிலும் அமைகின்றது.
இன்றைய
முதல் வாசகத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் நமது வாழ்வில் உண்மையைக் கண்டுணர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு என்றும், அத்தகைய வாழ்விற்கு அழிவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். உள்ளத்திற்கு அரிதாரம் பூசி, உள்ளொன்று வைத்து, புறமொன்று செய்வதும் சொல்வதும் முற்றிலும் களையப்பட்டு, உண்மையான வாழ்விற்காக உழைக்கின்றபொழுது, நமது வாழ்விடங்களில், பணியிடங்களில் வாழ்வு மலரும். கனிகள் மிகுந்து மகிழ்வைத் தரும்.
தந்தையின்
திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு இயேசு கற்றுத்தரும் வழி தாழ்ச்சி. இன்றைய இரண்டாம் வாசகத்தில். இயேசு தமக்கிருந்த எல்லாச் சிறப்புரிமைகளையும் விட்டுவிட்டு, தம்மைத் தாழ்த்திக்கொண்டு மனிதர்களோடு தம்மை இணைத்துக்கொண்டார் என்கிறது. திரு அவையில் வழங்கப்படும் பொறுப்புகள், பணிப்பகிர்வுகள் நம்மை இறுமாப்பிற்கோ, ஆணவத்திற்கோ, தற்பெருமைக்கோ இட்டுச் செல்லக்கூடாது. பிறருடன் ஒன்றிணைந்து வாழவும், அவர்களின் துன்பங்களில் பங்கேற்கவும், அவர்களுக்குச் சேவை செய்யவும், ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும் உதவிடவேண்டும். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் மூலம், தாழ்ச்சியிலும் அன்பிலும், சேவையிலும் வாழ்வதன் மூலம், நமது ‘ஆம்’ என்னும் வார்த்தைகளை உண்மையான ‘ஆம்’ என்னும் செயல்பாடாக மாற்றிடுவோம்.
தொடரட்டும் இனிய
வாழ்வு:
பரிசேயர்களின் நீண்ட பக்தியும் செயல்பாடுகளும் செபங்களும் அவர்கள் கடவுளோடு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தின. ஆனால், உண்மையில் அவர்கள் கடவுளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வெகுதூரத்தில் இருந்தனர். வெளிப்புறத்தில் காட்டப்படும் பக்திக்கும், உள்ளத்தில் வாழப்படும் இறைநம்பிக்கைக்கும் பெரிய இடைவெளி இருந்தது.
நமது
வாழ்விலும், ஞாயிற்றுக்கிழமையின் ஆலய இனிமை, வாரநாள்கள் வரை நீடிக்கின்றதா? திருப்பலியில் இனிமையோடும் பக்தியுடனும் தோன்றும் நமது கத்தோலிக்க வாழ்வும் இனிமையான முகம், வாரநாள்களின் உறவுகளில், செயல்பாடுகளில் கசப்பாக மாறி விடுகின்றது. ஆன்மிக உணவை இனிமையோடு பெற்றுக்கொண்டு, வாரநாள்களில், பிறருக்குக் கசப்பான கடுக்காயை ஊட்டுபவராக மாறிவிடக்கூடாது.
வாக்குறுதிகள்
ஒருபோதும் செயல்களுக்கு மாற்றாக இருக்க முடியாது. மேம்போக்கான இனிய வார்த்தைகள் ஒருபோதும் இனிய, கனிவான செயல்களுக்கு மாற்றாக அமைய முடியாது. இறைவனோடும் நம் சகோதர- சகோதரிகளோடும் இணைந்து வாழ்வதே முக்கியம். எனவே, திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து செபிப்போம். “ஆண்டவரே என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும். ஆண்டவரே உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும்”
(திபா 86:11). செயலே நமது வலிமையான சொல் நமது வலிமையான செபம்!