news-details
சிறப்புக்கட்டுரை
கரையைத் தேடும் ஓடங்கள்

மனித மனம், நீர்க்குமிழி போன்றது. ஆகவே அது எளிதில் உடைந்துவிடுகிறது. உடைந்த மனத்தின் வலிகள் கவிதை வரிகளாகின்றன:

எதிரில் வந்தால்..

எவரையும்,

ஞாபகம் வரக் கூடாது.

அந்த அளவிற்கு..

மறக்கவேண்டும்.

மனிதர்களை...’

இந்திய அளவில் 153 மில்லியன் மூத்த குடிமக்களின் அழுகுரல் இவ்வாறே ஒலிக்கிறதுஇந்திய மக்களின் 10 விழுக்காட்டினரான மூத்தோரின்  குரலைப் புறந்தள்ள இயலாது. 2036-இல் மூத்தோர் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயரும் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் தற்போதே 20 விழுக்காடு மூத்த குடிமக்கள் உள்ளனர். உலகில் முதலிடமாக மோனேகா நாட்டில் 37%, இரண்டாவதாக ஜப்பான் நாட்டில் 30% மூத்த குடிமக்கள் வாழ்கிறார்கள்.

மூத்தோரின்  பின்னணியில்...

மயக்கமா கலக்கமா?

மனத்திலே குழப்பமா?

வாழ்க்கையில் நடுக்கமா?’

என்ற பாடல் வரிகள், நடுக்கமாக ஒலிக்கின்றன.

எமது கல்லூரிப் பேராசிரியர் 44 ஆண்டுகளுக்கு முன் எம்மிடம் பகிர்ந்த  தகவல்கள் நினைவிலாடுகின்றன. தேசியத் தலைவர் ஒருவரை அவர் குறிப்பிடுகிறார். அந்தத் தலைவர் நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டிலும் போட்டியிடுவார். வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு, பிரச்சாரம் செய்யமாட்டார், வாக்கு கேட்கமாட்டார். ஆனால், அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் பிரமாண்ட வெற்றி பெறுவார். அவ்வளவு மக்கள் செல்வாக்கு மிக்கவர்.

மூத்த தலைவரான அவர், தன் கடைசி ஆறு ஆண்டுகளில் மனிதர்கள் எவரையும் சந்திக்காமல் தனிமையில் வாழ்ந்தார். அவர் இறந்த அன்று எனது பேராசிரியர் கண்ணாரக் கண்டதைக் கூறுகிறார்: “அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அழுது புலம்பி, தலைவிரிகோலமாய், பைத்தியம்  பிடித்தவர்கள் போல அலறி தெருக்களில் ஓடுவதைப் பார்த்தேன்.” இதுதான் மனித வாழ்க்கை. அந்த மாமனிதரின் வாழ்நாள்களின் இறுதிக் காலத்தில் தனிமையில் வாழ்ந்தார் என்பதே வரலாறு.

பல வேளைகளில், கோவை மாநகரின் செல்வச் செழிப்பிற்குக் காரணமான ஒரு வகுப்பு, பெரும் குடிமக்களைப் பத்திரிகைகளில் பெருந் தொழில் அதிபர்களாக வர்ணிக்கப்பட்ட பெருமக்களை அவர்களது வீட்டு முற்றங்களில் தனியே அமர்ந்திருக்கப் பார்த்திருக்கிறேன். ‘அவரா இவர்?’ என அதிசயம் அடைந்துள்ளேன். சில வேளைகளில், அவர்களிடம் பேசியிருக்கிறேன். ஒருமுறை ஒருவரது மகன் கூறினார்: “தம்பி, அப்பா வள... வளன்னு பேசுவார், தப்பா எடுத்துக்காதீங்கஎன்றார்.

நான் வெளியே வந்து காரில் செல்லும்போது அவரிடம் திருப்பிக் கூறினேன்: “அண்ணா, இந்த கோயம்புத்தூரில் எல்லா பெரிய கம்பெனி பாகப்பிரிப்பிற்கும் பஞ்சாயத்து பேசியவருக்கும் பேச ஆள் இல்லாத நிலையா?” என்றேன்.

கிராமப்புறங்களில் இந்நிலைக்கு மாறுபட்ட  நிலையைக் காண்கிறோம். கிராமத் திண்ணைகளிலும் கிராமச் சத்திரங்களிலும் சிலுவைத் திட்டுகளிலும் ஆலய மண்டபங்களிலும் வயது வித்தியாசமின்றி மூத்தோரை முன்னிலையில்  வைத்து, ஊர் சபை நடப்பதை ஆச்சரியமுடன் பார்க்கிறோம். கிராமத்தில் மூத்தோரும் இளையோரும்  எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் மக்களுடன் கலந்திருப்பது வியப்பிற்குரிய வாழ்வியல்  நடைமுறையாகும். ஊருக்குப் புதிதாகச் செல்லும் நம்மை மூத்தோர் எளிதில் எதிர்கொள்தல், எளிதில் பேசுதல், பழகுதல் நடைமுறைக் கிராமம் சார்ந்த சமூக அமைப்பாகும்.

பெருநகரங்கில் இருந்ததுபோல, எல்லா சிறு நகரங்களும் நகரமயத்தில் மாறிவிட்டன. மனிதர்கள் தனித்தனி தீவுகளில் வாழ்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவோ, புரிந்து வாழவோ விரும்புவதில்லை.

ஒரு நாளில் மும்பை மாநகரில் ஒரு புகழ்பெற்ற அடுக்கு மாடிக் குடியிருப்பில் இவ்வாறான உரையாடலைக் கேட்டேன். அடுத்த வீட்டுப் பெண்மணி ஓராண்டுக்குப் பின் பக்கத்து வீட்டிற்கு ஏதோ தகவல் அளிக்க வருகிறார். அவர் சென்ற பின் அக்குடும்பத் தலைவியும் குடும்பத் தலைவரும், ‘வந்தது பக்கத்து வீட்டுப் பெண்ணா? அல்லது அவரது அம்மாவா?’ என ஐயப்பட்டார்கள். நாம் கேட்டோம், “ஒரு வருடமாக உங்களுக்குப் பக்கத்து வீட்டில் யாரைத் தெரியும்?” என்றோம். அவர்கள் கூறிய பதில்: “அந்த வீட்டுத் தாத்தாவை மட்டும் தெரியும்.”

நாமே 25 வருடங்களுக்கு முன் தெருவில் வசிப்போர் அனைவரையும் அறிவோம். இன்று நாம் பக்கத்து வீட்டு மனிதர்களைக் காணும்போது சிறு புன்னகையால் கடப்பது பழக்கமாகிவிட்டது. வீட்டுப் புதுப்பித்தலில், இடிபட்ட எம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஆயிரமாயிரம் கதைகள் பேசிய எம் தெருப் பெண்கள் என் அம்மாவைப் போலவே மாயமாகி விட்டார்கள், மறைந்துவிட்டார்கள்.

ஒரு காலத்தில் எம் தெருவில் 100 வீடுகள், ஒரே குடும்பமாக உண்டு, உறங்கி, திருவிழாக்கள் கொண்டாடிய வசந்த காலங்கள் எங்கேயெனக் கண்ணீரோடு தேடுகிறேன். காலங்கள் ஓடுவதில்லை, பறக்கின்றன. மனிதர்கள் சமூக அமைப்பில் இருந்து விலகிவிட்டார்கள். குடும்பங்கள் என்ற எல்லைக்குள், ஒரு  வட் டத்தில் அடைந்துவிட்டார்கள்.

காலத்தே மனம் சக மனிதர்களைத் தேடுகிறதுபொருள் தேடிய, செல்வம் தேடிய, புகழ் தேடிய பயணம் வயது மூப்பால் தடையாகிறது. மனம் அமைதியைத் தேடுகிறது. அமைதியில் பெற்ற ஆற்றலை முதிய மனம் மறுக்கிறது. மனிதர்களின் அரவணைப்பை, அன்பை, ஆறுதல் வார்த்தைகளை, ஆழமான, கனிவான உரையாடல்களை விரும்புகிறது.

எல்லா முதுமையின் கேள்விகளுக்கும் பதில் திருவிவிலியத்தில் புதைந்து விரிகிறது. காலங்கள் குறித்த சபை உரையாளரின்  நிலையாமை, இயலாமை குறித்து  நினைவிற்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

அன்பிற்கு ஒரு காலம்

வெறுப்பிற்கு ஒரு காலம்

போருக்கு ஒரு காலம்

அமைதிக்கு ஒரு காலம்!’

தினமும் நடைப்பயிற்சியின் போது அரண்மனை போன்ற வீடுகளின் முன் ஒரு முதியவரையோ, மூதாட்டியையோ பல வீடுகளில் காண்கிறேன். அவர்கள் எந்தவிதச் சலனமுமின்றி வெறுமையாகப் பொதுவில் கண்களை மூடி சலனமின்றி அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். பல வேளைகளில், அவர்களது சிரிப்பு, அவர்களது குரல் எப்படி இருக்குமென யோசித்திருக்கிறேன். அவர்கள் சக மனிதர்களின் முகம்கூட காண மறுக்கிறார்கள். விழிக்கு விழி பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள்.

பல வருடங்களாக இவ்வாறான இருபதிற்கும் உள்பட்ட மூத்த குடிமக்களைப் பார்க்கின்றேன். அதில் சிலரைச் சோகமுடன் காண்கிறேன். ஒரேயொரு பெரியவர் மட்டும் புன்னகை செய்து தலையாட்டுவதைத் தினமும் இரசிக்கிறேன். அவர் அங்கு அமர்ந்திருக்காத நாள்களில், மறுமுறை பார்க்கும் வரை யாரிடம் அவரைப் பற்றிக் கேட்பது எனப் பதற்றப்படுகிறேன்.

மூத்த குடிமக்களுக்காகசுமைதாங்கிதிரைப்படத்தில் கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின்  பாடல் வரிகளைச் சமர்ப்பிக்கிறேன். இது என் மனம் படும் பாடுகளையும் சேர்த்து மூத்தோருக்கு ஆறுதலாகதேற்றுதலாக, அரவணைப்பாக அமையும் எனக் கருதுகிறேன்.

வாழ்க்கை என்றால்

ஆயிரம் இருக்கும்.

வாசல்தோறும்

வேதனை இருக்கும்.

வந்த துன்பம் எதுவென்றாலும்...

வாடி நின்றால்

ஓடுவது இல்லை!’

பிறகு என்னதான் செய்ய முடியும்? பாடல் வரிகளே பதில் சொல்கின்றன.

எதையும் தாங்கும்

இதயம் இருந்தால்

இறுதி வரை

அமைதி இருக்கும்.’

அமைதியை வைத்து என்ன செய்ய முடியும்? அமைதியை எப்படித் தேடுவது?

நாளைய பொழுதை

இறைவனுக்கு அளித்து...

நடக்கும் வாழ்வில்

அமைதியைத் தேடு!’