இந்தப் பூமி இக்காலத்திலும் வருங்காலத்திலும் வாழ்கின்ற எல்லாருக்கும் சொந்தமானது. படைப்பு நம்மைத் தியானத்திற்கு அழைத்துச் செல்கிறது; கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறது; சகோதரர் சகோதரிகளாகப் படைப்புடன் நமக்குள்ள தொடர்பை நாம் உணரச் செய்கிறது. நற்செய்தி கடவுளின் வியத்தகு பணிகளை அறிவிப்பதாகும். மீட்பு பற்றியோ அல்லது மனிதரின் நல வாழ்வு பற்றியோ, யாராவது ஒருவர் எடுத்துரைக்கும் போதெல்லாம் அவர் படைப்பில் கடவுளின் வேலைப்பாடுகள் பற்றிப் பேசுகிறார்.
சூரியனைத் தன் ‘சகோதரர்’ என
அழைத்தவர் புனித பிரான்சிஸ் அசிசி.
அதன் ஒளியில் இறைவனின் பிரமாண்டத்தைக் கண்டார். பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒளியையும் வெப்பத்தையும் வழங்கும் சூரியனைப்போல, நம்முடைய அன்பும் சாதி, மத, இனம் கடந்து அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இருளை அகற்றி, உலகிற்கு உயிர் தரும் சூரியன், இறைவனின் பேரொளிக்குச் சிறந்த அடையாளம். நம்முடைய வாழ்வும் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஓர் ஒளிவிளக்காக அமையவேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
இரவின்
இருளில் மென்மையான ஒளியைத் தரும் நிலவினைத் தன் ‘சகோதரி’ என்று போற்றினார் புனித பிரான்சிஸ் அசிசி. நிலவு சூரியனின் ஒளியைப் பிரதிபலிப்பதைப் போல, நாமும் இறைவனின் அன்பைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகத் திகழவேண்டும். ஆரவாரமில்லாத அமைதியும், குளிர்ச்சியான அணுகுமுறையும் எத்தகைய கடினமான சூழலையும் மென்மையாக்கும். பகலின் களைப்பிற்குப் பின் நிலவு தரும் அமைதியைப் போல, நம்முடைய இருப்பு மற்றவர்களுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தரட்டும்.
காற்றைத்
தனது சகோதரனாகக் கருதிய புனித பிரான்சிஸ் அசிசி, கண்ணுக்குத் தெரியாத அந்த ஆற்றலில் இறைவனின் உயிர்மூச்சைக் கண்டார். மேகமூட்டமான வானமாக இருந்தாலும் சரி, தெளிவான வானிலையாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றும் இறைவனின் படைப்பு இரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன. உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமான காற்றைப் போல, நம்முடைய சொல்லும் செயலும் பிறருக்குப் பயனுள்ளதாகவும், புத்துயிர் அளிப்பதாகவும் அமைய வேண்டும். இயற்கையின் சமநிலையைப் பேணுவதும், தூய்மையான காற்றைப் போற்றுவதும் நாம் படைத்தவருக்குச் செய்யும் நன்றிக்கடன்.
நீரைத்
தனது ‘சகோதரி’ என்று அழைத்தார் புனித பிரான்சிஸ். அதன் தூய்மையையும் பயனுள்ள தன்மையையும் எளிமையையும் பெரிதும் போற்றினார். மேடான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கிப் பாயும் நீர், உண்மையான தாழ்ச்சிக்குச் சிறந்த உதாரணம். அழுக்கைத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் நீரைப்போல, நம்முடைய எண்ணங்களும் செயல்களும் தூய்மையாகவும், பிறருக்குப் புத்துயிர் அளிப்பதாகவும் இருக்கவேண்டும்.
நெருப்பைத்
தனது ‘சகோதரர்’ என்று அழைத்தார் புனித பிரான்சிஸ். அதன் ஆற்றல், அழகு மற்றும் இருளைப் போக்கும் தன்மையைப் போற்றினார். நெருப்பு எவ்வாறு இருளை அகற்றி ஒளியைத் தருகிறதோ அதுபோல, நம்முள் இருக்கும் இறைவனின் அன்பு எனும் நெருப்பு நம் அச்சத்தையும் தயக்கத்தையும் எரித்துச் சாம்பலாக்கட்டும். குளிரில் இருப்பவருக்கு வெப்பம் தரும் நெருப்பைப் போல, நம்முடைய கனிவான சொற்கள் வாடி இருப்பவர்களுக்கு ஊக்கமும் புத்துயிரும் அளிக்கட்டும்.
பூமியைத்
தனது ‘சகோதரி’ மற்றும் ‘அன்னை’ என்று போற்றிய புனித பிரான்சிஸ் அசிசி, அது நம்மைத் தாங்குவதிலும் உணவளிப்பதிலும் காட்டும் எல்லையற்ற கருணையைப் பற்றி வியந்தார். அன்னை
பூமி நம்மைத் தாங்குவது பொறுமையின் அடையாளம். எனவே, நாம் எத்தகைய காயங்களை ஏற்படுத்தினாலும், பொறுமையுடன் நமக்குத் தேவையான கனிகளையும் மலர்களையும் வாரி வழங்கும் நிலமகளைப்போல, நாமும் சகிப்புத்தன்மை கொண்டிருக்கவேண்டும். அன்னை பூமியின் மார்பில் நாம் அனைவரும் ஒன்றே என்ற சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதே உண்மையான ஆன்மிகம். வாய் பேசமுடியாத ஜீவன்களிடம் நாம் காட்டும் கருணையே நம் மனிதத்தன்மையின் உண்மையான அடையாளம். படைப்பின் ஒவ்வோர் உயிரினமும் இறைவனின் அன்பைப் பறைசாற்றும் சாட்சிகள். அவற்றிற்குத் தீங்கு செய்யாமல் பாதுகாப்பது நம் கடமை.