news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு (11.10.2026) எசே 25:6-10; பிலி 4:12-14; மத் 22:1-14

திருப்பலி முன்னுரை

ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவரைப் பற்றி அறிவதே உண்மையான மகிழ்ச்சி என்று வாஞ்சையோடு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும், இயேசுவின் பெயரால் ஞாயிறு திருப்பலிக்கு அன்போடு அழைக்கின்றோம். இயேசுவின் அழைப்பிற்குச் செவிமடுத்து அவரது பிள்ளைகளாக வாழ ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு  விண்ணரசை ஒரு திருமண விருந்திற்கு ஒப்பிடுகிறார். அரசர் ஒருவர் அனைவரையும் தம் மகனின் திருமண விருந்திற்கு அன்புடன் அழைக்கின்றார்; ஆனால், அழைக்கப்பட்டவர்கள் அந்த அழைப்பைப் பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த வேலைகளிலும், உலகக் கவலைகளிலும் மூழ்கிச் செல்கின்றனர். இந்த உவமை இறைவனின் அழைப்பு என்பது சிலருக்கானது மட்டுமல்ல; ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் அருளின் அழைப்பு என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு திருப்பலியும் இறைவனோடு உறவுகொள்ளவும், அவரது விருந்தில் பங்கேற்கவும், நம் வாழ்வை அவருக்கேற்ப மாற்றிக்கொள்ளவும் கிடைக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். இயேசுவின் விழுமியங்களை ஆடைகளாக அணிவோம்.  அன்பில்லாத இதயத்திற்கு அன்பின் ஆடை தேவை; மன்னிக்காத இதயத்திற்கு மன்னிப்பின் ஆடை தேவை; பொறாமை கொண்ட இதயத்திற்குத் தூய்மையின் ஆடை தேவை; சுயநலமான இதயத்திற்குத் தியாகத்தின் ஆடை தேவை என்பதை அறிந்து நமது வாழ்க்கைப் பாதையை மாற்ற முயற்சி செய்வோம். இறைவனின் அழைப்பை அலட்சியம் செய்யாமல் தூய்மையான மனத்துடன் அவரது விருந்தில் பங்கேற்போம். “அழைப்புப் பெற்றவர்கள் பலர்; ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்” என்ற ஆண்டவரின் வார்த்தையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில் நாமும் ஒருவராக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவர் தம் மக்களுக்கு ஆயத்தப்படுத்தும் விருந்தையும், எல்லா மக்கள்மீதும் பொழியும் அவரது இரக்கத்தையும், நம்மீது அவர் கொண்டுள்ள உண்மையான அன்பையும் பற்றி இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கிறார். நம் மரணத்தை அழித்து, கண்ணீரைத் துடைத்து, நமக்கு மீட்பையும் மகிழ்ச்சியையும் வழங்கும் இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

இரண்டாம் வாசகம் முன்னுரை

வாழ்வில் ஏற்படுகின்ற இன்பங்கள், துன்பங்கள், தோல்விகள், வெற்றிகள், நிறைகள், குறைகள், வளமை, வறுமை என அனைத்திலும் இறைவனைச் சார்ந்து வாழும்போது எதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். நமது வழியாகவும் ஒளியாகவும் இருக்கும் இயேசுவின்மீது நம்பிக்கையுடன், அனைத்திலும் இறைத்திருவுளம் அறிந்து செயல்பட அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் தமது பணியில் உண்மையுடனும் தியாக உள்ளத்துடனும் செயல்பட்டு, பலரை இறைவனிடம் அழைத்துச் செல்லும் கருவிகளாகத் திகழ்ந்திட தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் ஆண்டவரே! உலகக் கவலைகளாலும், பல்வேறு தடைகளாலும் உம்மிடமிருந்து விலகி இருக்கும் மக்கள் அனைவரும் உமது அன்பையும், பேரிரக்கத்தையும் உணர்ந்து மீண்டும் உம்மிடம் திரும்பிவர திட மனத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாசமுள்ள ஆண்டவரே! எம் குடும்பங்கள் இறைவிருந்தில் ஒன்றிணைந்து பங்கேற்கும் குடும்பங்களாகவும், அன்பு, நம்பிக்கை, மன்னிப்பு, பகிர்வு ஆகியவற்றை வளர்க்கின்ற குடும்பங்களாக விளங்கிடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. கருணையின் இறைவா! திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களைப்போல நாங்களும் இறையழைப்பை ஏற்று, நற்செய்தி கூறும் விழுமியங்களைக் கடைப்பிடித்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.