news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு (25.10.2026) விப 22:21-27; 1தெச 1:5-10; மத் 22:34-40

திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின் அன்பைச் சுவைக்க வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் ஞாயிறு திருப்பலிக்கு அன்போடு அழைக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகமானது இறைவனை அன்பு செய்வது, நமது சகோதர-சகோதரிகளை அன்பு செய்வதில் வெளிப்படவேண்டும் என்ற சிந்தனையை நமக்குக் கற்றுத்தருகிறது.

கடவுளை அன்பு செய்வது என்பது வெறும் செபம் செய்வதோ, ஆலயத்திற்கு மட்டும் செல்வதோ அல்ல; நமது எண்ணங்கள், செயல்கள், திறமைகள், உறவுகள் அனைத்திலும் கடவுளுக்கு முதலிடம் கொடுப்பதாகும். கடவுளை அன்பு செய்வது போன்று நம்முடன் வாழும் மனிதரையும் அன்பு செய்யவேண்டும். புன்னகை, மென்மையான வார்த்தை, மன்னிப்பு, நோயாளிகளைச் சந்தித்தல், துன்பப்படுவோருக்கு ஆறுதல் கூறுதல், பசியுடன் இருப்பவருக்கு உதவி செய்தல், குறிப்பறிந்து கொடுத்தல், துன்ப நேரத்தில் உடனிருத்தல் இவை எல்லாம் அன்பின் செயல்களே. 

அன்பே கடவுள்; அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.  மனித வாழ்க்கையின் மிக அழகானதும், உயர்ந்ததுமான அன்பு என்ற பண்பை நமது அணிகலனாக்குவோம். நம் அன்றாட வாழ்வில் இறைவனை முழு இதயத்தோடு அன்பு செய்யவும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிலும் இறைவனின் முகத்தைக் காணவும் வரம் வேண்டி இணைவோம் அன்பின் பலியில். 

முதல் வாசகம் முன்னுரை

நம்மைச் சுற்றியுள்ள ஏழையர், ஆதரவற்றோர், அந்நியர், பலவீனமானவர் இவர்களில் இறைவனின் முகத்தைக் காண வேண்டும்; துன்பத்தில் இருப்பவர்களின் வேதனையை நாம் உணர்ந்து ஆறுதல் கூறவேண்டும். நீதியும் இரக்கமும் கொண்ட இதயத்தை நாம் பெற்று, பிறரின் துயரத்தில் துணை நிற்கும் மனிதர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

தெசலோனிக்க மக்கள் பல துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் மத்தியிலும், மகிழ்ச்சியோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் சிலைவழிபாட்டை விட்டுவிலகி, உயிருள்ள உண்மையான இறைவனுக்கு ஊழியம் செய்தார்கள். துன்ப நேரத்தில் உறுதியான நம்பிக்கையோடு வாழ்ந்து நற்செய்திக்குச் சான்று பகர்ந்து வாழ நம்மையும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உலகெங்கும் வாழும் உமது திரு அவைத் தலைவர்கள் இறைவார்த்தையைத் துணிவுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவித்து, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றை விதைத்து, கிறிஸ்துவின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் நாட்டில் அமைதி, நீதி, சகோதரத்துவம் நிலவவும், ஏழையர், ஆதரவற்றோர், நோயுற்றோர் பாதுகாக்கப்படவும், ஆட்சியாளர்கள் நேர்மையுடனும் இரக்கத்துடனும் விவேகத்துடனும் செயல்படவும்  அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கைவிடாத தெய்வமே எம் இறைவா! எம் குடும்பங்களில் அன்பும் புரிந்துகொள்ளுதலும் பெருகவும், பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் இறையன்பின் சாட்சிகளாக வாழவும் தேவையான அருளாசிரை எமது குடும்பங்களுக்குத் தந்து காத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உடனிருக்கும்  தெய்வமே! எங்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சினைகள், குழப்பங்கள் அனைத்திலும் உம்மோடு இணைந்திருக்கவும், ஒவ்வொரு நாளும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளரவும் தேவையான மனப்பக்குவத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.