news-details
ஆன்மிகம்
பிரான்சிஸ் உணர்த்தும் நற்கருணையில் ஊன்றிய வாழ்வு

நற்கருணையும் திருப்பலியும் நமது கிறித்தவ நம்பிக்கையின் முக்கியத் தூண்கள். நற்கருணையே திரு அவையின் மேலான வழிபாடு என்று கத்தோலிக்கத் திரு அவை கற்பிக்கிறது. அசிசி பிரான்சிஸ் வாழ்ந்த 13-ஆம் நூற்றாண்டு, நற்கருணையின் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் நடந்தேறிய நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம், நற்கருணை பற்றிய கோட்பாடுகளைத் தெளிவுபடுத்தியது. இருப்பினும், அன்றாடம் திருப்பலி நிறைவேற்றும் வழக்கம்  அந்நாள்களில் இருந்திருக்கவில்லை.  அக்காலகட்டத்தில் வாழ்ந்த பிரான்சிசின் நற்கருணை பற்றிய கண்ணோட்டம் நம்மை வியக்க வைக்கிறது.  அவர் ஓர் அருள்பணியாளர் அல்லர்; பொதுநிலையினர்தான். அவர் நற்கருணைமீது கொண்டிருந்த தெளிவு, இன்று நாம் நற்கருணையைப் பற்றிக் கொண்டிருக்கும் தெளிவுகளை ஆழப்படுத்துவதாக உள்ளது. 

முதலில், அவர் நற்கருணை பற்றிய இறையியல் கோட்பாடுகளைச் சார்ந்த தர்க்கங்களுக்குள் செல்வதைத் தவிர்க்கிறார்.  அவரது கருத்துகளும் கணிப்புகளும் நமது இதயத்தை, வாழ்வைச் சார்ந்தனவாகவே இருக்கின்றன.  நற்கருணையை வெறும் அறிவு மட்டும் சார்ந்து பார்த்தவர்கள் நற்கருணையைக் குறித்து இடறல்பட்டனர். 

நாம் பயன்படுத்தும் நற்கருணை என்ற வார்த்தையை அசிசி பயன்படுத்துவதில்லை. அவர் எப்போதும் நற்கருணையைக் குறிக்க ‘ஆண்டவரின் திருவுடல், திரு இரத்தம்’ என்றே குறிப்பிடுகிறார்.  காரணம், நற்கருணை என்ற மறைபொருளின் தசைத்தன்மையை, உண்மைத்தன்மையை அவர் வலியுறுத்துகிறார்.

நற்கருணை ஆண்டவரை நாள்தோறும் நமது காலகட்டத்திற்குள் கொண்டு வருவதோடு, அவரை நம்மோடு இருக்கவும் செய்கிறது என்பதைத் தனது அறிவுரையில் இவ்வாறு எழுதுகிறார்: “அவர்தம் அரியணையை விடுத்து கன்னியின் உதிரத்தில்  குடிகொண்டதுபோல, நாள்தோறும்  தம்மையே தாழ்த்துவதைக் காணுங்கள்.  நாள்தோறும்  தாழ்த்தப்பட்ட உருவில் நம்மிடம் அவர் வருகிறார். தந்தையின் அரவணைப்பிலிருந்து நாள்தோறும் பீடத்தின் மீதும், குருவின் கரங்களிலும் வருகிறார்.”

இங்கு கல்வாரியில்  இயேசு பலியானதைக் குறிப்பிடாமல், பொதுவாக நமது கவனத்தை ஈர்க்காத, ஊனுருவாதலில் நடந்த இறைவனின் தாழ்ச்சியைத் திருப்பலியில் நாள்தோறும் நடப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் தாழ்ச்சியைக் கண்டு நாம் வியப்பினால் ஆட்கொள்ளப்படுவதோடு நாமும் நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்கிறார் அசிசி.

“வாழும் கடவுளின் மகன் கிறிஸ்து, பீடத்தின் மீதும், குருவின் கரங்களிலும் பிரசன்னமாகையில் மனுக்குலம் அனைத்தும் நடுங்குவதாக! உலகனைத்தும் அதிர்வதாக! வானங்கள் மகிழ்ந்து அக்களிப்பதாக! ஓ, வான் படை உயர்வே, மகத்துவத் தாழ்ச்சியே! ஓ, மகத்துவத் தாழ்ச்சியே! ஓ, தாழ்ச்சிக்குரிய மகத்துவமே! நம் மீட்பிற்காக அகிலத்தின் ஆண்டவரும் கடவுளும், கடவுளின் மகனும் தம்மையே தாழ்த்தி சிறு அப்பத்தின் வடிவில் தம்மையே மறைத்துக்கொள்கிறார். அவரால்  நீங்கள் மேன்மைபடுத்தப்படும்படி, நீங்களும் உங்களையே தாழ்த்துங்கள்.”

நற்கருணையின் மீது வைத்திருந்த அளப்பரிய பற்றுதல் காரணமாக அதனைத் தனக்குத் தருகின்ற அருள்பணியாளர்கள்மீது அளிப்பரிய மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதாக எழுதுகிறார் அசிசி. “அருள்பணியாளர்களின் எந்தப் பாவத்தையும் நான் கருத்தில் கொள்ளமாட்டேன்; ஏனெனில், அவர்கள் அதி உன்னத இறைமகனைத் தாங்களும் பெற்று, மற்றவர்களுக்கும் அதி தூய உடலிலும் இரத்தத்திலும் வழங்குகிறார்கள்.” இது அருள்பணியாளர்கள் எத்தகைய புனிதத்தைக் கொண்டிருப்பவர்கள் என்பதை வலியுறுத்துகிறது.

மொத்தத்தில், பிரான்சிசின் கண்ணோட்டத்தில், நற்கருணை என்பது வணங்குதற்குரிய அருளடையாளம் மட்டுமன்று; அது நமது வாழ்வில் நாம் வாழ்ந்து காட்டவேண்டிய பணிவையும் புனிதத்தையும் உணர்த்தும் உன்னதக் காட்சிப் பாடமாகவும் உள்ளது. இதில் இயேசுவே நமக்காக அவை அனைத்தையும் நடத்திக் காட்டியுள்ளார். நற்கருணை நமது வாழ்வின் மையமாக இருப்பதோடு, நமக்கு வாழ்க்கைப் பாடமாகவும் அமைவதாக!