news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு (11.10.2026) எசே 25:6-10; பிலி 4:12-14; மத் 22:1-14 - திருமணக் (திருப்பலி) கொண்டாட்டமும் திருமண (திருவுள) ஆடையும்

திருத்தந்தை பிரான்சிஸ் 2022, ஜூன் 29 அன்று ‘மிக மிக ஆவலாய் இருந்தேன்’ (Desiderio Desideravi) என்னும் திருத்தூது மடலை வெளியிட்டார். ‘இறைமகன் இயேசு தமது இறுதி பாஸ்கா உணவைத் தம்மவர்களுடன் கொண்டாட மிகவும் ஆவலாய் இருந்தார்’ (லூக் 22:15). இவ்வார்த்தையைக் கொண்டே இத்திருத்தூது மடல் தலைப்பிடப்பட்டிருக்கின்றது. திரு அவையின் வாழ்விற்குத் தேவையான செயல்பாடுகளை அழகும் பொருளும் நிறைந்த கிறித்தவ வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளவேண்டும் என்றும், அதனைப் பற்றிய மேலோட்டமான புரிதலை விடுத்து, நற்கருணைக் கொண்டாட்டத்தில் நாம் கடவுளின் பிரசன்னத்திற்குள் நுழைகின்றோம் என்னும் உண்மைகளைப் புரிந்துகொண்டு, நற்கருணை வழிபாட்டினை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடிட வேண்டும் எனவும் அழைப்பைத் தந்திருக்கின்றார். இக்கொண்டாட்டத்தில் இடம், நேரம், இசை, அடையாளங்கள், பாடல்கள், வழிபாட்டு ஆடைகள் ஆகிய அனைத்திலும் கவனத்தைச் செலுத்த திருத்தந்தை நம்மைப் பணிக்கின்றார்.

திருவழிபாட்டின் அழகினை, ஆழத்தை மீண்டும் கண்டறிய நாம் வெளிப்புற அழகியல் கொண்டாட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அகம் சார்ந்த தேடலுடன், ஆண்டவரின் அர்ப்பணக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டும் என்னும் திருத்தந்தையின் அழைப்பு, இன்றைய இறைவார்த்தை வழிபாட்டோடு இணைந்து செல்கின்றது. வழிபாட்டின் அழகை உணர்ந்திட ஆழமான ஈடுபாடும் தயாரிப்பும் அவசியம். விண்ணரசை உவமைகள், உருவகங்கள் வாயிலாக இயேசு ஒப்பிடுவது, ஒத்தமை நற்செய்தியில் பரவிக் காணக்கிடக்கின்ற உண்மை. திராட்சைத் தோட்டம், கடுகு விதை, புளிப்பு மாவு, வலை, விலையுயர்ந்த முத்து, நிலத்தடியில் கிடைத்த புதையல், விதைக்கும் விவசாயி, விளைநிலம், திருமண விருந்து போன்று மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒட்டிப்பிணைந்த நிகழ்வுகளே இயேசு கூறும் உவமைகளின் கதைக்களமும் கதாநாயகர்களும். கடந்த இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளின் நற்செய்தியில் இரண்டு மகன்களின் உவமையும், கொலைகாரத் திராட்சைத் தோட்ட தொழிலாளர்களின் உவமையும் வழங்கப்பட்டன. இன்றைய நற்செய்தியில் திருமண விருந்தை, இறையாட்சியின் விருந்துக்கு இணையாக இயேசு உவமையின் வழியாக எடுத்துரைக்கின்றார். தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இறைவனிடம் திரும்பிவர அவர்களுக்கு வழங்கப்படும் அடையாளங்களையும் அழைப்புகளையும் ஏற்க மறுத்து, பிடிவாதமாகவும் கடின உள்ளத்துடனும் வாழ்வதை இவ்வுவமைகள் எடுத்துரைக்கின்றன. 

திருமண விருந்து, விண்ணரசின் விருந்து: விண்ணரசு இன்றைய நற்செய்தியில், அரசன் ஏற்பாடு செய்திட்ட திருமண விருந்தாக நம் கண்முன் விரிகின்றது. மூன்று சூழ்நிலைகள் - நிகழ்வுகள் இன்றைய உவமையை எளிமையாகச் சித்தரிக்கின்றது.

1) திருமண மண்டபம் (பிறரின் மகிழ்ச்சி, எனது மகிழ்ச்சி): ஒரு பண்டிகையையோ, விழாவினையோ, குடும்பக் கொண்டாட்டத்தினையோ மக்கள் இல்லாமல், உறவினர்கள் இல்லாமல், நலம் விரும்பிகள் இல்லாமல் கொண்டாடிட முடியாது. அதனால்தான் நாம் வழங்கும் திருமண அழைப்பிதழில், குடும்பக் கொண்டாட்டங்களில் ‘தாங்கள் குடும்பம் சகிதம் நட்பும் சூழ வந்து வாழ்த்தி ஆசிர்வதிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்’ என அச்சிடுகின்றோம்; வாயார, நெஞ்சார அழைப்பைத் தருகின்றோம். சமூகக் கொண்டாட்டங்களும் குடும்பக் கொண்டாட்டங்களும் பிறரின் உடனிருப்பும் ஆசிரும் அன்பளிப்புகளும் பரிசுகளும், உதவிகளும், ஒத்தாசைகளும் இன்றி நடைபெற்றால் அது மனம் நிறைந்த கொண்டாட்டமாக அமைந்திட முடியாது.

இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்படும், திருமண மண்டபம் வெறுமையாய் இருந்தது. பொருள்கள் நிறைந்திருந்தாலும், மனித உறவுகள் இல்லாமல் வெறுமையாய், வெற்றிடமாய் காட்சி தந்தது. உடனே அரசர் தனது பணியாளர்களை அழைத்து, விருந்தினர்களுக்கு, அழைப்பாளர்களுக்கு ஒரு நினைவூட்டல் (Reminder) தந்திட அனுப்பி வைக்கின்றார். முதல் அழைப்பு ‘திருமணத்திற்கு வாருங்கள்’ என்னும் அழைப்பு, இரண்டாம் நினைவூட்டல் அழைப்புதான் அவர்களின் பிரசன்னத்தை எதிர்பார்த்துச் செய்திட்ட கொழுத்த கன்றின் விருந்தை குறிப்பிட்டு அழைக்கின்றார். அதற்கும் அழைப்பாளர்கள் மசியவில்லை. அவர்கள் பணியாளர்களை விரட்டினார்கள், இழிவுபடுத்தினார்கள், கொன்றார்கள்.

அழைப்பாளர்களின் உதாசீனமும் புறக்கணிக்கும் மனநிலையும்: பிறரின் மகிழ்ச்சியில் பங்கேற்க, நமது உள்ளம் முதலில் மகிழ்ச்சியால் நிறைந்திருக்க வேண்டும். பல நேரங்களில், திருமண (விருந்தினர்கள்) அழைப்பாளர்களைப் (Invitee) போன்று மற்றவர்களின் மகிழ்ச்சியான, பெருமையான மற்றும் வெற்றிகரமான தருணங்கள் நம் மனங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. மற்றவர்களின் மகிழ்ச்சியில் நாம் பங்கெடுக்கும் தருணங்கள் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். இன்றைய உவமையில், அரசனின் மகனின் திருமணத்திற்கு அழைக்கப்பட்ட வசதியும் நிறைந்த செல்வங்களும் நிலங்களும் உடைமைகளும் கால்நடைகளும் கொண்ட உரிமையாளர்கள், செல்வந்தவர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தின் அழைப்பை நிராகரித்து, உதாசீனப்படுத்தி, தங்களின் தனிப்பட்ட வேலையில் ஈடுபட்டனர். அழைப்பைப் பெற்றும் பாராமுகத்துடன் செயல்பட்டனர். சுயநலமும் தங்கள் வாழ்விற்காக மேலும் பொருள்களை சேர்க்கவேண்டும் என்னும் ஆசையில் மூழ்கிப்போனதால், பிறருக்குத் தங்களின் நேரத்தைத் தந்திடத் தயங்கினார்கள்.

2) சாலையோரத்தில் வாழ்வோர்: திருமண அழைப்பைப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். திருமண விருந்தில் பங்கேற்கவில்லை. அரசன் (இறைவன்) சோர்வடையவில்லை; உடனடியாகத் தமது அழைப்பை அனைவருக்கும் வழங்குகின்றார். சாலையோரங்களில் காணும் அனைவரையும் அழைத்து வர இறைவன் விருப்பம் கொள்கின்றார். எவர் ஒருவரையும் விட்டுவிடாதபடி பணியாளர்களுக்கு அவர் பணிக்கிறார். லூக்கா நற்செய்தியில் இவ்வுவமையைப் பற்றி இன்னும் அதிகமான தகவல்கள் தரப்படுகின்றன (14:15-24). “நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரைக் கூட்டி வாரும்”(லூக் 14:21). மீண்டும் அரசன் அவ்வழைப்பை நீட்டித்து, “நீர் வழியோரங்களிலும், நடைபாதைகளிலும் போய் எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும்”  (லூக் 14:23) எனக் குறிப்பிட்டு அனைவருக்கும் குறிப்பாக, இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் இவ்வழைப்புத் தரப்படுகின்றது.

தமது அழைப்பை நிராகரித்தவர்களைக் குறித்து நொந்து அரசன் ஆழ்ந்த கவலையில் மூழ்கவில்லை. உடனடியாக எழுந்து அவர், தமது மகிழ்ச்சியில் பங்கெடுக்க இயன்ற மட்டும் அனைவரும் அழைத்து வரப்படுகின்றனர்; சுமந்து வரப்படுகின்றனர். மத்தேயு நற்செய்தியாளர், ‘வெளியில் சென்று, நல்லோர் தீயோர் என அனைவரும் அழைப்புப் பெறுகின்றனர்’ என்கிறார். நாம் நல்லவர்கள், புனிதர்கள், தூய வாழ்வு வாழ்பவர்கள் என்பதற்காக இறைவன் அவரது மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கவில்லை. அவரது கொண்டாட்டத்தில் பங்கு பெற்றாலே நாம் நல்லவர்களாக மாறிவிடுவோம். மாற்றத்திற்கான அழைப்பே இக்கொண்டாட்டம். அரசன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அழைப்பாளர்கள் (ஏழைகள், நோயாளிகள், நல்லோர், தீயோர்) அனைவருடனும் உரையாடுகின்றார். அவ்வுரையாடலே மாற்றத்தின் தொடக்கப்புள்ளி.

3) திருமண ஆடை / திருவுள ஆடை / திரு முழுக்கின் ஆடை: திருமண ஆடை அணியாத நபரை, திருமண மண்டபத்தில் கண்டு அரசன் கோபம் அடைகின்றான். ‘ஏழைகள், எளியவர்களுக்குத் திருமண ஆடை என்பது எட்டாக்கனியாக இருக்கும் பட்சத்தில், அரசனின் கோபம் நியாயமானதா?’ என்னும் கேள்வி நம் உள்ளத்தில் எழுவது இயல்பே. ‘திருமண ஆடை’ என்று நற்செய்தியாளர் குறிப்பிட்டுக் காட்டுவது திருமுழுக்கின் ஆடை. அன்றொரு நாளில் திருமுழுக்கின் பொழுது நம் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் ஆடை அணிவிக்கப்பட்டது. வெண்ணிற ஆடை இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றும் ஆடை. நமது திருமண ஆடை கிறிஸ்துவின் மனநிலையைத் (பிலி 2:5) தாங்கிய ஆடை. அவரின் செயல்பாடுகள், முன்னுரிமைகள், வார்த்தைகள், பார்வைகள், எண்ணங்கள் இவையே நாம் அணிந்து கொள்ளும் ஆடை. இதை அணியாவிட்டால் இறையரசின் பந்தியில் நமக்கு இடமில்லை. இத்திருமண விருந்தில் அரசர் அவருக்குப் பணிவிடைபுரிய மக்களை அழைக்கவில்லை; மாறாக, அரசன் குனிந்து, இத்தகைய ஏழை, எளிய புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குச் சிறப்பு விருந்தினை வழங்குகின்றார், பரிமாறுகின்றார். இவ்விருந்தில் பங்கேற்கும் அனைவரும் அவரின் மனநிலையைத் தங்களின் மனநிலையாக, செயலாக மாற்றவேண்டும். பணிவிடை பெற அல்ல; பணிவிடை புரிய விருப்பம்கொள்ளவேண்டும். இவ்வுவமையில் குறிப்பிடப்படும் ‘திருமண ஆடை’ உடலின்மீது போர்த்தப்படும் ஆடையல்ல; மாறாக, பணிவிடை புரியும் கரங்களும், பிறரின் வாழ்வின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் உடனிருப்புமே கிறித்தவ ‘திருமண’ ஆடை. 

இறைவார்த்தையை வாழ்வாக்க: இன்றைய உவமையில், அரசனின் திருமண விருந்தில் அழைப்பை ஏற்காமல், மறுத்து, வேறு காரணங்கள் கூறி உதாசீனப்படுத்தியதற்குக் காரணம், அவர்களுடைய உள்ளம் வேறொன்றால் நிரம்பிவிட்டது. சொந்த வசதிகள், சுயநல விருப்பங்கள், தங்கள் இதயத்தையும் விருப்பங்களையும் நிறைத்துக்கொண்ட பற்றுகள் இறைவனைக் காணத் தடையாய் இருந்தன. தம்மையே அர்ப்பணித்து, தமது மக்களைத் தேடி, அவர்களைச் சந்தித்து, தமது விருந்திற்கு இலவசமாக அழைக்கும் இறைவனாக அவரைக் காணவில்லை. இறைவனைவிட, அவரது நற்கருணை விருந்தைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பலவற்றைக் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. இறைவனின் அழைப்பினை நமது இதயம் ஒருபொழுதும் அலட்சியப்படுத்திவிடக்கூடாது. சொந்த நலனை முன்னிறுத்துகின்ற சுயநலமும், இறைவனையும் அவரது அழைப்பையும் பின்னிற்குத் தள்ளும் மனப்பாங்கும் மாறவேண்டும்.