news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலத்தின் 27-ஆம் ஞாயிறு (04.10.2026) எசே 5:1-7; பிலிப் 4:6-9; மத் 21:33-43 (காத்திருக்கும் கடவுள்: கனிதர வேண்டிய மனிதர்கள்)

இன்றைய ஞாயிறு இறைவார்த்தை வழிபாடு, ஒரு விவசாயியின் கதையை எடுத்துரைக்கின்றது. விவசாயி என்றுமே சோர்வடைவதில்லை. வானம் பொய்த்தாலும், நீர்நிலைகள் வறண்டாலும், புழுக்களும் பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் பயிரை அழிக்க முற்பட்டாலும், நிலங்கள் தேவையான மகசூலை வழங்காவிட்டாலும், கடன் வழங்கியவர்கள் (முதலாளிகள்), வங்கி அதிகாரிகள் கடனை உடனே கட்டச் சொல்லி கழுத்தை நெரித்தாலும்... தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பார். காலங்களும் காட்சிகளும் ஆட்சிகளும் கோலங்களும் வாழ்வு நிலைகளும் மாறினாலும், தமது உழைப்பிற்குப் பலன் கிடைக்கும் என்று என்றுமே நம்பிக்கையோடு உழைத்துப் போராடுகின்றார். வெறுப்பும் ஏமாற்றமும் அவர்களது முயற்சியை, நம்பிக்கையை, உழைப்பை முடக்குவதில்லை. இன்னும் அதிகமான அக்கறையைச் செலுத்தி உழைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைத்தந்தை, இஸ்ரயேல் குடும்பத்தினரை ஒரு திராட்சைத் தோட்டத்தின் உருவகமாகக் குறிப்பிடுகின்றார். அத்திராட்சைத் தோட்டத்திற்கென்று அவர் வழங்கிய சிறப்பு அக்கறையையும் கரிசனையையும் பல நிலைகளில் அவரின் செயல்பாடுகளையும் விவரிக்கின்றார். ஒரு திராட்சைத் தோட்டம் வாங்குகின்றார். களைகளை, கற்களை அகற்றி, கொத்திப் பண்படுத்துகின்றார். விலையுயர்ந்த நல்ல தரமான திராட்சைச் செடிகளை அதில் நடுகின்றார். மற்ற மனிதர்கள், விலங்குகள், கால்நடைகள் அவற்றை அழித்து விடாதபடி, சேதாரமும் ஆபத்தும் முற்றிலும் இல்லாத அமைதியான, மிகவும் பாதுகாப்பான தோட்டத்தில் அத்திராட்சைக் கொடிகள் வளர்ந்திட வேலி அமைக்கின்றார். காவல் கோபுரம் அமைக்கின்றார். இவற்றையெல்லாம் செய்துவிட்டதால் மிகுந்த நம்பிக்கையோடு திராட்சைக் கொடிகள் நிச்சயமாகப் பலன் தரும் என்னும் அசாத்திய துணிச்சலில் திராட்சைப் பிழியும் ஆலை ஒன்றை அமைக்கின்றார்.

மேற்கூறிய செயல்பாடுகளைத் தவிர்த்து வேறொன்றும் மிகுதியாகத் திராட்சைக் கொடிகளின் வாழ்விற்காகச் செய்திட முடியாது. இதைவிடச் சிறப்பாக யாரால் பராமரிக்க முடியும்? ஆனால், இத்தகைய கரிசனையும் உழைப்பும் பொறுமையும் பராமரிப்பும் கண்ணின் இமைபோல் காவல் செய்த தியாகமும் அதிர்ச்சி மிகுந்த செயல்பாடுகளாக மாறியிருந்தது. திராட்சைத் தோட்ட உரிமையாளருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. இரத்தப்பழி, நேர்மையற்ற வாழ்வு, கசப்பான செயல்பாடுகள், மகிழ்வும் மனநிறைவும் நன்றியுணர்வும் இன்றி முறைப்பாடு மிகுந்தது. இறைத்தந்தை நம் ஒவ்வொருவருக்கும் யூதாவிற்குச் செய்திட்ட அனைத்தையும் செய்கின்றார். ஆனால், நமது பதிலளிப்பு வெறும் முறைப்பாடாக இருப்பது வேதனைக்குரியது.

ஏமாற்றத்தின் கதை; ஆனால், தோல்வியின் கதையல்ல

இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவின் பகுதியும், மத்தேயு நற்செய்தியாளரின் நிலக்கிழாரின் திராட்சைத் தோட்ட உவமையும் ஓர் ஏமாற்றத்தின் கதை. இறைவன் திராட்சைத் தோட்ட விவசாயி போன்று செயல்படுகின்றார். தமது திராட்சைத் தோட்டத்தின் மீது அதிகமான அக்கறையைத் தமது பல்வேறு செயல்பாடுகளில் வெளிப்படுத்துகின்றார். வேலி அமைத்து, பிழிவுக்குழி வெட்டி, காவல் மாடமும் கட்டுகின்றார். திராட்சைத் தோட்டப் பணியாளர்களிடம் தமது தோட்டத்தை ஒப்படைத்துவிட்டுச் செல்கின்றார். 

திராட்சைத் தோட்டப் பணியாளர்களின் மறுதலிப்பும் பொறுமையும் அதீத ஆசையும் உரிமையாளருக்கு உரியவற்றைத் தரவிருப்பம் இல்லாத மனநிலையும், நமது அன்றாட வாழ்வில் நிச்சயமாகப் பிரதிபலிக்கின்ற செயல்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன.  திராட்சைத் தோட்டப் பணியாளர்களிடம் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் வன்முறையும் மிகுந்து இருக்கின்றது. ‘எனது சகோதரனை, அவனது உடல் உழைப்பை நான் இவ்வுலகிலிருந்து நீக்கிவிட்டால், அவனது நிலம், வீடு, மனைவி, பணம், சொத்து, உறைவிடம் அனைத்தும் எனக்கு உரிமையாகி விடும்’ என்ற எண்ணத்தோடு அவர்கள் செயல்பட்டார்கள். ‘இவன்தான் சொத்திற்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று பேசிக்கொண்டு, தோட்டத்தின் வாரிசு உரிமையாளரை வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அதற்கு முன்பாக நிலக்கிழார்களின் பிரதிநிதிகளை அடித்து, கல்லால் எறிந்து, கொலையும் செய்து வன்முறைச் செயலில் ஈடுபட்டார்கள்.

திராட்சைத் தோட்டப் பணியாளர்களின் உள்ளத்தில் எழுந்த இருண்ட மேகங்களாகிய பேராசை மனநிலையும், பணத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும், அறுவடையின் மீதும் கொண்ட வெறியினால் எல்லையை மீறி வன்முறையாளர்களாக மாறுகின்றார்கள். என் உள்ளத்தில் எழும் இருண்ட எண்ணங்கள் என்னைத் தீமைக்கு இழுக்கின்றன; நான் மட்டுமே பலம் நிறைந்தவன், அதிகாரம் செலுத்துபவன், திறமையாளன்; அடுத்தவருக்கு என் வாழ்விடத்தில், பணியிடத்தில் இடமில்லை’ என்னும் வக்கிரமான தீய சிந்தனை, தீய செயல்பாடுகளாக மாறுகின்றது. அதிகாரத்தின் மீதும், பணத்தின் மீதும் நான் கொண்டிருக்கின்ற அதீதப் பற்றும் ஆசையும், எனது கரங்களைப் பிறரின் இரத்தம் தோய்ந்த கரங்களாக மாற்றுகின்றன.

இறைவனின் பிரதிபலிப்பு

 நம்முடைய விருப்பமின்மை, மறுதலிப்பு, பேராசை இவற்றைக் கண்டு இறைவன் தமது அழைப்பைச் சுருக்கிக்கொள்வதில்லை. மீண்டும் மீண்டும் அவர் தேடி வருகின்றார். பணியாளர்களின் இரக்கமற்ற, நேர்மையற்ற, வன்முறை நிறைந்த செயல்பாடுகள் உரிமையாளருக்கு வேதனையையும் சோர்வையும் ஏமாற்றத்தையும் உருவாக்கினாலும், அவரது அசைக்க முடியாத நம்பிக்கையைச் சீர்குலைக்கவில்லை. நம்பிக்கையும் விடாமுயற்சியும் மேலோங்கி நிற்கின்றது. ‘நாளை நிச்சயம் பலன் கிடைக்கும்’ என்னும் அவரது நம்பிக்கை இன்றைய மறுதலிப்பை எதிர்கொள்கின்றது. இன்றைய உவமை ஓர் ஏமாற்றப்பட்ட அன்பின் கதை போன்று அமைந்திருந்தாலும், அது தோல்வியில் முடியவில்லை. வெறுப்பையும் பழிவாங்குதலையும் முன்னிறுத்தவில்லை.

புதிய முயற்சிகள், புதிய சிந்தனைகள், புதிய முடிவுகள்

கடவுளின் பதிலளிப்பு இவ்வுவமையின் இறுதியில் வித்தியாசமாக அமைகின்றது. இறைவன் தமது திராட்சைத் தோட்டப் பணியாளர்களின் வன்முறை நிறைந்த செயல்பாட்டினால் ஏமாற்றப்பட்டு சோர்ந்து அமரவில்லை; தலையில் கை வைத்துக்கொண்டு கப்பலே சாய்ந்த மனநிலையில் நீண்ட, சோகமான, வாடிய நிலையில் வாழ்வைக் கடத்தாமல், புதிய முயற்சிகளை, புதிய சிந்தனைகளைக் கொண்டு, புதிய முடிவுகளை மேற்கொள்கின்றார்.

‘திராட்சைத் தோட்டத்திற்கு உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?’ எனக் கேள்வி எழுப்பும் இயேசு, மதத் தலைவர்களின் பதிலை ஆமோதிக்கவில்லை, வரவேற்கவில்லை. ‘அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்’ என்ற அவர்களின் பதில் இறைவனின் பதிலளிப்பாக அமையவில்லை. தவறிழைத்தவர்களை முற்றிலுமாக நீக்கிவிடுவது இறைவனின் விருப்பம் அன்று; மதத்தலைவர்களின் பதில் நீதியின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், இறைவனின் கருணை, இரக்கம் அதைத் தாண்டிச் செல்கின்றது. பலன் தருபவர்களுக்குத் திராட்சைத் தோட்டம் வழங்கப்படும் என்று குறிப்பிடுகின்றார்.

இறைத்தந்தை பலவற்றை நமக்கு அருளாக, இரக்கமாக, மன்னிப்பாகத் தந்திட்டாலும், நமது செயல்பாடுகள் அவருக்கு ஏமாற்றத்தையே தருகின்றன. மீண்டும் மீண்டும் புதிய முயற்சிகளினால், புதிய மனிதர் வழியாக, இறைவார்த்தை வழியாக இறைவன் தமது அழைப்பைப் புதுப்பிக்கின்றார்; நமது உள்ளம் புதுப்படைப்பாக மாற விரும்புகின்றார். பலன் தருகின்ற மனிதர்களாக நாம் இருக்கும்பொழுது, இறையாட்சி நமக்குச் சொந்தமாகும். கனி தரும் திராட்சைத் தோட்டம் நமதாகும். கடவுளின் எதிர்பார்ப்பு, இறையாட்சியின் கனிகளாக நீதியும் அன்பும் ஒடுக்குமுறையும் வன்முறையும் அழுகையும் இல்லாத வாழ்வு, பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய நல்வாழ்வு நிறைவாழ்வு என்பதாகும்.

நமது வருங்காலச் சந்ததியினருக்கு இத்தகைய மனநிலையை நாம் தந்திட, அவர்களின் மனநிலையில் ஆழமாய்ப் பதித்திட அழைப்பைப் பெற்றிருக்கின்றோம். பிறரின் இரத்தம் தோய்ந்த இரத்தப்பழிகள் நமது கரங்களிலிருந்து கழுவப்படட்டும். தூய்மையான, நேர்மையான, கனிவான, அன்பான கரங்களை, நினைவுகளை, நமது சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்வோம்.