news-details
ஆன்மிகம்
புனித பிரான்சிசின் திருக்காயங்கள்: ஓர் இறையியல் தேடல்

பிரான்சிஸ்கன் சபைக்குச் சகோதரர் பிரான்சிசின் இறப்பை அறிவிக்கின்ற சுற்றுமடலில், சகோ. எலியா 03-10-1226 அன்று பிரான்சிஸ் ஐந்து காயம் பெற்றதையும் இணைத்து எழுதுகின்றார்: “நான் உங்களுக்கு ஒரு புதிய புதுமையைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்க விரும்புகிறேன். இறைமகனைத் தவிர வேறு யாருக்கும் இந்தப் பாக்கியம் கிடைத்ததில்லை. பற்பல நாள்களுக்கு முன்பு தந்தை பிரான்சிஸ் சிலுவையில் அறையப்பட்டார். அவருடைய உடலில் ஐந்து காயங்கள் காணப்பட்டன. எனவே, அவர் ஆண்டவரின் காயங்களை தன்னிலே பெற்றிருந்தார்.”

புனித பவுலடியார்தான் முதன் முதலில் காயங்களைப் பற்றி கலாத்தியர் திருமடலில் பேசுகின்றார் (6:17): “நான் ஆண்டவரின் காயங்களை என் உடலில் பெற்றிருக்கின்றேன்.”

டொமினிக்கன் காயங்கள் என்பது சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உடலில் ஆணிகளாலும் ஈட்டியாலும் காயப்பட்ட ஐந்து காயங்கள். பவுலின் காயங்கள் என்பது ஆண்டவருக்குப் பணி செய்தபோது ஏற்பட்ட துன்பங்களினால் பெறப்பட்ட காயங்கள்.  தனிப்பட்ட காயங்கள் என்பது கிறிஸ்துவுக்காகத் தங்களின் உடலில் ஐந்து காயங்களைப் பெறுதல்.  இதனைத்தான் புனித பிரான்சிஸ் அசிசியாரும், புனித தந்தை பியோவும் பெற்றனர்.

சலானோ தோமாவைப் பொருத்தவரையில் ‘பிரான்சிஸ் தன்னுடைய தனிப்பட்ட அல்லது மக்கள் சார்ந்த எந்தச் செயலாக இருந்தாலும் அவர் ஆண்டவரின் சிலுவையிலிருந்துதான் ஆரம்பிக்கின்றார்’ என்கிறார்.  பிரான்சிசினுடைய முதல் மனமாற்ற நிகழ்வே தமியானோ திருச்சிலுவையிலிருந்துதான் தொடங்குகின்றது. சிலுவையின் மறையுண்மையிலிருந்துதான் பிரான்சிஸ் தன் துறவற பயணத்தையே கற்றுக்கொள்கிறார். பாடுகளின் ஆண்டவர்தான் அவருக்குத் துறவறத்தைக் கற்றுக்கொடுத்துப் புரியவைத்து  வழிகாட்டியாகிறார். இதன் அடிப்படையில் பிரான்சிசினுடைய துறவற வாழ்வு முழுமைக்குமே ஐந்து காயம் ஒரு புதிய வருகையாகத் தெரிகிறது.

இந்த ஐந்து காயவரத்தை, மனித அறிவிலிருந்தோ அல்லது மனித நம்பிக்கையினாலோ, தர்க்கவியல் கொண்டோ புரிந்துகொள்ள இயலாது. பிரான்சிசினுடைய திருச் சிலுவையின் மீதுள்ள அளவுகடந்த அன்பு, அவருக்கு மிக உயர்ந்த இடத்தை இந்த ஐந்து காயவரத்தை ஒரு பரிசாகக் கொடுத்துள்ளது. எனவே, இந்த ஐந்து காயவரம் பற்றி எந்த மனிதராலும் சரியாக விளக்கமளிக்க இயலாது. பிரான்சிஸ் வாழ்ந்த மற்றும் இறந்த உடலில் இருந்த ஐந்து காயத்தைப் பார்த்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர். அதில் சாதாரண மனிதர்களும் உள்ளடங்குவர்.

பிரான்சிஸ் தன் வாழ்வு முழுவதுமே இந்தப் பாடுகளின் ஆண்டவரின் அன்பை வாழ்வாக்குகிறார்.  இந்த அன்பு ஐந்து காயங்கள் வழியாக வெளிப்படுகின்றது. இந்த அன்பு ஓர் அசாதாரணமான ஆற்றலோடு வெளிப்பட்டு, அன்புக்குரியவரை காதலராக மாற்றுகின்றது. இந்தக் ‘காதல் தீ’ பிரான்சிசை திருப்பாடுகளைத் தியானிக்க, வாழ்வாக்கத் தூண்டியது.

சகோ. எலியா இந்த ஐந்து காய நிகழ்வை ஒரு உண்மை நிகழ்வாகக் குறிப்பிடுகிறார். இந்தக் காயங்களை கண்கூடாகப் பார்த்ததாகவும், பிறர் நம்புமாறு கடிதம் எழுதினார். பிரான்சிஸ் தன்னுடைய காயங்களை, தான் வாழ்ந்த காலத்தில் மறைத்து வைத்திருந்தார். அதற்கு அவருடைய தாழ்ச்சியே காரணமாக இருந்தது.

புனித அசிசி பிரான்சிசைப் பொருத்தவரையில் நம்பிக்கை என்பது வாழ்வின் வெற்றியை அடிப் படையாகக் கொண்டதல்ல; புதுமையை அடிப்படையாகக் கொண்டதுமல்ல; வெற்றியை அல்லது புதுமையை அவர் ஒருபோதும் விரும்பவில்லை; மாறாக, தன்னையே துறத்தல், புறந்தள்ளுதல்; துன்பத்தின் வழியாகத்தான் சகோதரர்கள் நிறை மகிழ்ச்சியைப் பெறமுடியும் என நம்புதல்.

இந்த இறையியல் அடிப்படையில்தான் பிரான்சிசுக்கு ஐந்து காயம் கிடைக்கப் பெற்றது என நாம் உறுதிபடக் குறிப்பிடலாம்.