அன்பிற்குரிய சகோதர ஆயர்களே,
பாசமிகு இறைமக்களே,
அருள்பணியாளர்களே,
இருபால் துறவியர்களே...
இயேசுவின் அருளும் அமைதியும்
உங்கள் அனைவருடனும் இருப்பதாக!
திரு அவை, இரக்கமும் பரிவும் நிறைந்த தாயாக, மனிதகுலத்தின் தேவைகளைக் கண்டுணர்ந்து நம்பிக்கை, குணப்படுத்துதல் ஆகியவற்றின் கருவிகளாகத் தமது மக்களை உருவாக்கும் இறை அழைப்பைப் பெற்றிருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளாக நமது தமிழ் நாடு - பாண்டிச்சேரி மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் ‘இரத்த தானம்’ பரவலாக்கப்பட்டுள்ளது. இது இறை இயேசுவின் இரத்த தியாகத்தின் தொடர் வரலாறாகும். இதன் நீட்சியாக, அடுத்த கட்டத்திற்கு நாம் செல்லலாம் என ஜூலை 5-11 வரை மதுரையில் நிகழ்ந்த தமிழ்நாடு ஆயர் பேரவையில் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்படி, ‘கண் தானம்’ என்னும் அடுத்த உன்னதமான மனிதநேயக் கொடையின் பக்கம் நமது கவனத்தை எடுத்துச்செல்ல விரும்புகின்றோம்.
இயேசு தமது முதல் மறையுரையின் போதே, ‘பார்வையற்றோர் பார்வைப் பெற’ தாம் வந்திருப்பதாக அறிவிக்கின்றார் (லூக் 4:18). “தாவீதின் மகனே, என்மீது இரக்கம் வையும்” என்று பார்வையற்றோர் மன்றாடியபோது, அவர்களைத் தம் கரங்களால் தொட்டு, பார்வை தருகின்றார். பார்வையின் வலிமை அதிகம் என்பதனையும், பார்வையற்றோரின் வேதனை அதனினும் அதிகம் என்பதனையும் இது உணர்த்துகிறது.
நம் மத்தியில் வாழும் பார்வையற்றோர், கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு மற்றும் குடும்ப, சமூக வாழ்வில் முழுமையானப் பங்கேற்பு போன்ற பல வாய்ப்புகளை இழந்து வருகின்றார்கள். இத்தகைய சூழலில், இறப்பிற்குப் பின் மண்ணோடு மண்ணாக மக்கிப் போவதற்குப் பதிலாக, தன்னலமற்ற முறையில் நமது கண்களைத் தானமாக வழங்குவதன் மூலம், பார்வையற்றோர் இறைப் படைப்பான தாய்மண்ணையும், தமது உடன்பிறப்புகளையும் காணும் வாய்ப்பையும் மகிழ்ச்சியையும் பெற இயலும்.
கண் சிகிச்சை செய்திருந்தாலும், கண்ணாடி அணிந்திருந்தாலும், வயது வரம்பின்றி அனைவரும் கண் தானம் செய்யலாம். இறப்பு நிகழ்ந்த ஆறு மணி நேரத்திற்குள்ளாக அருகிலுள்ள கண் வங்கியினை அலைப்பேசியில் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவப் பணியாளர்கள் நமது இல்லத்திற்கு வந்து, 10 நிமிடங்களுக்குள் கண்களைத் தானமாகப் பெற்றுச் செல்வார்கள். இன்னமுமாகப் பிளாஸ்டிக் கண்களைப் பொருத்தி முகத்தின் அழகை உறுதி செய்வார்கள். ‘இறப்போர் அனைவரின் கண்களைத் தொடர்ந்து தானம் செய்யுமிடத்து ஆறு ஆண்டுகளிலே பார்வையற்றோரில்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்’ என்னும் மருத்துவ அறிவியல் நமக்கு மேலும் உற்சாகத்தை வழங்குகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு ஆயர் பேரவை கீழ்க்காணுமாறு பரிந்துரை செய்கிறது:
• விருப்பமுள்ள ஆயர்களும் அருள்பணியாளர்களும், இருபால் துறவியரும் எவ்விதக் கட்டாயமோ அழுத்தமோ இன்றி, முழுமையான சுதந்திரத்துடன் கண் தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதற்காக தமிழ்நாடு ஆயர் பேரவையும், தமிழ் நாடு துறவியர் பேரவையும் இணைந்து தயார்செய்துள்ள சிறப்புப் பதிவுத்தாளில், இவ்வாண்டு 2026 கிறிஸ்துமஸ் முன்னதாகக் கையொப்பமிட பரிந்துரைக்கின்றோம். இச்சிறப்புப் பதிவுத்தாள் அனைத்து மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலையங்களுக்கும், துறவற சபை தலைமையகங்களுக்கும் அனுப்பப்படும். மற்ற கண் வங்கிகளில் ஏற்கெனவே பதிவு செய்தவர்களும் மீண்டுமாக இச்சிறப்புப் பதிவுத்தாளிலும் கையொப்பமிட அன்புடன் அழைக்கின்றோம். நமது ஒருமித்த அர்ப்பணத்தின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இது அமையும். அத்தகைய அர்ப்பணத்தைத் தக்க வகையில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டமும் இருக்கிறது.
•
மறையுரை, மறைக்கல்வி, சிறப்புத் திருப்பலிகள், தனிப்பட்ட ஊக்குவிப்பு போன்ற வழிகளில் இறைமக்களிடையே கண்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கலாம். அருள்பணியாளர்களும் துறவியர்களும் தங்கள் குடும்பத்தினருக்கும், தாங்கள் பணியாற்றும் சமூகங்களுக்கும் கண்கொடையைப் பரிந்துரைத்து, உற்சாகப்படுத்தலாம்.
•
2027-ஆம் ஆண்டின் தவக்காலத்தின்போது, கண்தானத்திற்கான முனைப்புகளை நமது பங்குகளிலும் மறைமாவட்டங்களிலும் பங்குத்தந்தையர்களும் பல்வேறு ஆணையங்களும் மேய்ப்புப் பணிக் கட்டமைப்புகளும் மேற்கொள்வது மிகுந்த பலனளிக்கும்.
பிறருடைய தேவைகளைத் தன் உள்ளத்தில் ஏந்தி, அவர்களுக்கு உதவ விரைந்து சென்ற அன்னை மரியாவின் அன்பும் அரவணைப்பும் நம்மில் தாராள தன்னார்வத்தை வளர்க்கத் தூண்டுவதாக!
கிறிஸ்துவின் அன்பில்,
மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி
தலைவர், தமிழ்நாடு ஆயர்கள் பேரவை (TNBC)